Saturday, July 10, 2010

பேராண்மை : இட ஒதுக்கீடு புரிதலை நோக்கி… :முருக சிவகுமார்

“ரிசர்வேசன் கோட்டாவுல படிச்சி வர்றவங்களுக்கு என்ன தெரியும்னு நெனச்சோம். ஆனா, உங்களுக்கு மார்க் போட வாத்தியாரே இல்லை சார். உங்களுக்கு ஸ்டூடண்டா இருக்க பெருமையா இருக்கு சார்’’

- இட ஒதுக்கீட்டை பற்றி தவறாக எண்ணியிருப்பவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் இந்த வசனம், பேராண்மை திரைப்படத்தில் வருகிறது.

காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் அதிகாரங்கள் இருந்து வந்ததால், ஏழை, எளிய பாட்டாளி மக்கள் பல்வேறு மோசமான விளைவுகளை எதிர்கொண்டனர். இதனைக் கண்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் விளைவாக அதிகாரத்தை பகர்ந்தளிக்க இட ஒதுக்கீடு என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை பகிர்ந்து தருவதற்கான ஓர் செயல்திட்டம். குறிப்பாக, சாதி அடிப்படையில் கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வு நிலையால் இந்தச் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இனங்களில் பிறந்தவர்களுக்கு அவரவர்களுக்கான பங்கு மறுக்கப்பட்ட நிலையில், பங்கு வழங்குவதை கட்டாயமாக்கும் ஓர் ஆவணமாகவே இட ஒதுக்கீட்டு முறை கருதப்படுகிறது. ஆகவேதான், அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களின் தொடர்ச்சியாக, இட ஒதுக்கீடு முறையின் அவசியத்தை அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக இட ஒதுக்கீட்டு முறை கொண்டுவந்ததால், தலைமுறை தலைமுறையாக பலகாலம் அனுபவித்து வந்த அதிகாரம் கைநழுவி போனதை மேட்டுக்குடியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே, இட ஒதுக்கீடு முறையை ஏளனம் செய்வதற்கான புது யுக்தியைக் கண்டுபிடித்து பரப்பினர். அதாவது, இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வருபவர்களுக்கு “திறமை” இருக்காது! என்ற மனோபாவம் மனங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது. நஞ்சைவிட மிக கொடிய இந்தப் பரப்புரையால் பள்ளிகளில் படிப்பதில் தொடங்கி கல்லூரி படிப்பு, பிறகு வேலை என அனைத்து மட்டங்களிலும் ஏழை, எளிய பாட்டாளி மக்களை, அதிகார வர்க்கத்தினரும், மேட்டுக்குடிகளும் எதிரிகளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதன் விளைவுதான் ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்து மோசமான ஆர்ப்பாட்டங்களை மேட்டுக்குடி உயர்சாதியினர் வெட்கமின்றி மேற்கொண்டனர். அந்த ஆர்ப்பாட்டங்களை வட இந்திய ஊடகங்களும் சிறிதும் குற்ற உணர்வின்றி தொடர்ந்து ஒளிபரப்பின.

இட ஒதுக்கீடு முறையில் படித்து விட்டு, அரசு அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் தங்கள் பணியை செவ்வனே செய்து வந்த போதிலும், அதே நிறுவனத்தில் உடன் பணியாற்றும் மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களின் ஏளனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியவில்லை. இட ஒதுக்கீட்டில் படித்து வருபவர்களும் ஒரு செயலை பெரிய ஆளுமையுடன் செய்து முடிப்பார்கள் என்பதை சொல்லி, இட ஒதுக்கீட்டை ஏளனம் செய்யும் கேடுகெட்ட மனோபாவம் கொண்டவர்களின் முகத்தில் அரைந்து பாடம் கற்பிப்பதாக “பேராண்மை” திரைப்படம் இருக்கிறது..

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களைக் கொண்ட இந்த புவி பரப்பில், நெய்தல் நிலத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்க்கையையும், கடலோடிகளின் உணர்வுகளையும் தனது முதல் திரைப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அடுத்து, ஈ திரைப்படத்தில் மருந்துக் கம்பெனிகள் மற்றும் தொற்று நோய்கள் சார்ந்த சர்வதேச பிரச்சனையை சாதாரண மக்களுக்கும் புரியும்படி செவிட்டில் அறைந்தாற் போல சொல்லியிருப்பார். அத்திரைப்படத்திற்கு பிறகு தனது மூன்றாவது படமாக பேராண்மையை மலையக மக்களின் வாழ்நிலையோடு சாதிப்பிரச்சனை, இட ஓதுக்கீடு, பெண்ணியம், சர்வதேச அரசியல், சுற்றுசூழல் பாதுகாப்பு, உழவர்களின் வளர்ச்சி, தேசியம் , அடித்தள மக்களின் வாழ்வுரிமை ஆகியவற்றுடன் அர்ப்பணித்துள்ளார். பொதுவுடமை கொள்கை மீது அதிக அளவு நம்பிக்கை கொண்ட இயக்குநர் ஜனநாதன், தான் உருவாக்கிய மூன்று திரைப்படங்களிலும் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களின் உரிமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேஸ்னல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி, தீப ஒளித் திருநாள் அன்று திரையரங்கிற்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பேராண்மை திரைப்படத்தில், ஜெயம் இரவி, தனுஸ்கா, லயசிறீ, சரண்யா, வர்ஷா, வசுந்தரா, ரொனால்டு கிக்கிஜர், ஊர்வசி, பொன்வண்ணன், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை சதீஷ்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பு கணேஷ்குமார். இசை வித்யாசாகர்.

கதை சுருக்கம்

முதுமலை காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடியினத்தில் பிறந்த துருவன்(ஜெயம் இரவி), கஷ்டப்பட்டு படித்து, தான் பிறந்த பகுதி காட்டுக்கே வனக் காவலராக பொறுப்பேற்று பணியாற்றுகிறார். பழங்குடி இனத்தில் பிறந்த துருவனின் சாதியை வைத்து அவரை எப்போதும் விமர்சனம் செய்து வருகிறார் உயரதிகாரி கணபதிராம்(பொன்வண்ணன்) . அந்த அவமானங்களை தாங்கிக்கொண்டு, தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் துருவன். இந்நிலையில், பெண்கள் கல்லூரியில் இருந்து தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவிகள், காட்டுப் பயிற்சிக்காக முதுமலை காட்டுப் பகுதிக்கு வருகின்றனர். அந்த மாணவிகளை வழிநடத்தும் தலைமை மாணவிகளாக கல்பனா, ஜெனிபர், துளசி, சுசிலா, அஜிதா – ஆகிய ஐந்து பேரும் வருகிறார்கள். அவர்களில் அஜிதா மட்டுமே பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் படித்தவர். இசுலாமிய சமூகத்தை சேர்ந்தவர். மற்ற நால்வரும் நகரத்து பதின் நிலைப் பள்ளிகளில் படித்த மேட்டுக்குடி மாணவிகள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியினத்தை சேர்ந்த வனக் காவலர் துருவன் பயிற்சியளிப்பதை ஏற்காமல் அவரை அவமானப்படுத்துகின்றனர். அதனை பொருட்படுத்தாத துருவன், காட்டைப் பற்றி அறிந்துகொள்ளும் இறுதிப் பயிற்சிக்கு அந்த ஐந்து மாணவிகளையே தேர்வு செய்கிறார். காட்டுக்குள் மாணவிகளுடன் இருக்கும்போது, இந்தியா ஏவ இருக்கும் வேளாண் புரட்சிக்கான ஏவுகணையைத் தாக்கி அழிக்க வந்துள்ள சர்வதேச கூலிப்படையைக் காண்கிறார் துருவன். நவீன ஆய்தங்களுடன் வந்துள்ள 16 பேர் கொண்ட சர்வதேச கூலிப்படை கும்பலை, மாணவிகளுடன் சேர்ந்து எப்படி அழிக்கிறார்? இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு பணியாற்றி நாட்டுக்காக உழைக்கும் துருவனுக்கும், அவரின் சமூகத்திற்கும் இந்த நாடு செய்யும் நன்றிக் கடன் என்ன?. இதுவே பேராண்மை திரைப்படத்தின் கதை.

இட ஒதுக்கீடு ஏளனமும் – புரிதலும்:

மாணவிகளிடம் பயிற்சியாளராக துருவனை உயரதிகாரி கணபதிராம் அறிமுகப்படுத்தும்போது, “படிப்பறிவே இல்லாத காட்டுமிராண்டி சனங்க கிட்டயிருந்து, இவர் ஒருத்தரு படிச்சி மேல வந்திருக்காரு. இட ஒதுக்கீட்டுல சாதா விளக்குல படிச்சவரு… நமக்கெல்லாம் கிடைக்கிற மாதிரி சாப்பாடு இவங்களுக்கு கிடைக்காது..’’ என்று அவமானப்படுத்துகிறார். இதனைக் கேட்கும் மாணவிகள், “மாட்டுக்கார பயல நமக்கு பயிற்சியாளராக தலையில கட்டுறாங்க..” என்று கிண்டலடிக்கிறார்கள். இந்தக் காட்சியில் இருந்தே இட ஒதுக்கீட்டில் படித்து பணிக்கு வந்த ஏழை, எளிய, பாட்டாளி மக்களைப் பற்றி இந்தச் சமூகம் கொண்டுள்ள பார்வையை இயக்குநர் ஜனநாதன் அம்பலப்படுத்துகிறார். படித்த வனக் காவலர் துருவனிடம் தேநீர் வாங்கி வர சொல்வதும், காலணியை தூய்மைப்படுத்தி மெருகேற்றி வாங்கிவர சொல்லி கையில் கொடுப்பதுமான அவமானங்களை உயரதிகாரி கணபதிராம் செய்கிறார்.

reserva10மேட்டுக்குடி பெண்களின் சதித்திட்டத்தால் ஒரு நாள் முழுவதும் கழிவறையை கழுவும் தண்டனையை துருவனுக்கு உயரதிகாரி கணபதிராம் வழங்கிறார். படிப்பு வாசமே இல்லாத பழங்குடியினமான தனது சமுதாயத்தில் படித்து வேலையில் இருக்கும் துருவனை, அவரது உறவினர்கள் மறைந்திருந்து பார்த்து பெருமிதப்பட நினைக்கிறார்கள். அவர்களை வடிவேலு அழைத்து வந்த போது, கழிவறையை கழுவிக்கொண்டிருக்கும் துருவனைப் பார்த்த உறவினர்கள் கண்கலங்குகிறார்கள். அந்த சமயத்தில், வடிவேலு பாத்திரத்தினூடாக, “செருப்பு தைக்கிறவன் புள்ள செருப்புதான் தைக்கனுமா? துணி துவைக்கிறவன் புள்ள துணியத்தான் துவைக்கனுமா? முடிவெட்டுறவன் புள்ள முடியதான் வெட்டனுமா? பழங்குடியின மக்கள்ல ஒருத்தன் அதிகாரியா வரக்கூடாதா?’’ என்ற வசனத்தில் இயக்குநர், சமூகத்தின் முகத்தில் காரி உமிழ்கிறார். அந்த காட்சியில் – ”எங்களுக்கு கழிவறைகூட பாடம் கற்கும் அறைதான்’’ என்று துருவன் கூறுவதில் இருந்தும், வேறொரு காட்சியில் – தன்னை தொடர்ந்து அவமானப்பதும் மாணவிகள் ஐந்து பேரை இறுதிப் பயிற்சிக்கு தேர்வு செய்வதில் இருந்தும் அடித்தளத்தில் வாழும் ஏழை, எளிய பாட்டாளி மக்கள் எந்தப் பணியையும் அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என்பதை இயக்குநர் வெளிப்படுத்துகிறார்.

மேலும், இட ஒதுக்கீட்டில் படித்து வருபவர்களுக்கு பணியாற்றும் இடங்களில் நேரும் அவமானங்கள் மிக யதார்த்தமாக படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காட்சிகளை காணும் பார்வையாளர்களை கோபத்தில் ஆழ்த்தும்படி படமாக்கியுள்ளமை இயக்குநரின் திறமை. சிறுபான்மை இசுலாமிய சமூகத்தை சேர்ந்த அஜிதா, மலைவாசி வனக் காவலர் துருவன் மீது நேசத்தை காட்டுகிறார். கிறித்தவம், இசுலாம் ஆகிய சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நெருங்கி பழகுவது இயல்பு. அதையும் அஜிதா பாத்திரத்தின் மூலமாக இயக்குநர் பல காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

கல்வியின் தேவை – விளைவு:

தனது பணி நேரத்தில் அரசு வேலையை செய்யும் துருவன், இரவில் தனது சமூகப் பிள்ளைகளுக்கு பாடம் கற்று தருகிறார். அந்த பிள்ளைகளிடம், “ஒரு மூட்டை தேயிலை பறிச்சா என்ன கூலி.. ஒரு கிலோ டீ தூள் என்ன விலை..’’ என்று எடுத்துரைப்பதில் இருந்து உழைப்பை சுரண்டும் சமூகத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார் இயக்குநர்.
பயிற்சி அளிப்பதற்காக மாணவிகளுடன் சென்ற துருவன் திரும்பி வர தாமதமாவதைத் தொடர்ந்து, உயரதிகாதி கணபதிராம் தலைமையில் அதிரடிப்படையினர் தேடும்போது, பழங்குடியின மக்களை தாக்கி விரட்டுகிறார்கள்.
அப்போது, ”ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் காட்டில் இருக்கிறோம். திடீர்னு வந்து போங்கன்னா எங்கையா போறது..?” என்று அந்த மக்களில் ஒருவன் கேட்கிறபோதும், “காட்டில் சட்டப்படி மனுசங்க இருக்கக் கூடாது. மிருகங்கங்க தான் இருக்கனும்..’’ என்று உயரதிகாரி கணபதிராம் சொல்கிறபோதும், பழங்குடி மக்கள் மீதான அதிகாரிகளின் பார்வையை மக்கள் முன் வைத்து நியாயம் கேட்கிறார் இயக்குநர்.

சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்களிப்பு என்று பாடம் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளையும் அடித்து துன்புறுத்தும் அதிரடிப்படையினர், ”உங்களுக்கென்னதுக்கடா படிப்பு..; வீடு பூராவும் புக்குடா, இங்ககூட படிக்கிறாங்கடா..; காட்டு பசங்களுக்கு புத்தகம்; பள்ளிக்கூடம் இல்லாமெ இதையெல்லாம் படிக்கிறாங்க.. இன்னும் கான்வெண்ட்ல படிச்சா எங்களை தொரத்திருவீங்கடா..; அரசாங்கத்து பணத்துல படிக்க வைச்சா, அரசாங்கத்துக்கு எதிராகவே அரசியல் பேசுறீங்களாடா? இப்ப புரிஞ்சதா ஆட்சியின்னா என்ன, அதிகாரமுன்னா என்ன?
’’ என்று கூறி அடிக்கிறபோது, ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் படித்து முன்னேறுவதை விரும்பாத உயரதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்வதை அம்பலப்படுத்துகிறார்.

”சொந்த சனங்கள தொறத்திட்டு, இந்த நாட்டை வெள்ளைக்காரங்களுக்கு வாடகை விட போறீங்களாடா?, அதிகாரம்… அதிகாரம்னு சொல்லிட்டு சர்வாதிகாரம் பன்னீட்டு இருக்கீங்களாடா? உழைக்கும் மக்களோட சர்வாதிகாரத்தை இந்த உலகம் பார்க்கத்தாண்டா போகுது” என்று பழங்குடிமக்களில் ஒருவனின் குரல் மூலமாக அடித்தள மக்கள் அரசியல் ரீதியாக அணிதிரளுவதன் அவசியத்தை இயக்குநர் பார்வையாளனின் முன் வைக்கிறார்.

காட்டில் மாணவிகளை துருவன் அழைத்து செல்கையில், தேர்ந்த வழிகாட்டியாக இருந்து பார்வையாளர்களாகிய நம்மையும் அழைத்து சென்று, காட்டை பற்றி அறியாதவர்களுக்கு காட்டின் நுணுக்கங்களை சிறப்பாக கற்றுத் தருகிறார் இயக்குநர். அடர்ந்த காட்டுக்குள் குருவி பறந்தால் புதிதாக ஆள் நடமாட்டம் இருப்பதை அறிவது, காட்டு வழியில் செல்லும்போது காலடி தடங்களை கவனிப்பது, பாதையை அடையாளப்படுத்த கிளைகளை உடைப்பது, ஏரியில் அடையாளத்திற்காக துணியை மாட்டி தொங்கவிடுவது, ஏரியின் புதைமண்ணில் கால் இழுத்தால் என்ன செய்வது? பழக்கப்படாத நீளமான ஏரியில் இறங்கி கடக்கும்போது, எவ்வாறு நடப்பது? காட்டில் செல்பவர்கள் ஒன்றுகூட சங்கேத ஒலியை பயன்படுத்துவது என பலவற்றை அறிந்துகொள்ள வைத்துள்ளார். காட்டின் பிரமாண்டத்தை இயக்குநருடன் இருந்து, ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் காட்டியிருப்பது பார்வையாளர்களை மிரளவைக்கிறது.

காட்டில் மாணவிகள், துருவனை புகழ்கிற நேரத்தில், ”சர்வதேச அரசியல, பொருளாதாரத்தை படிக்கனும். இந்த உலகத்துல பொதுவுடமை அரசியலைவிட சிறந்த அரசியல் இல்லை’’ என்ற சொல்வதன் மூலம் அரசியலில் அடுத்த கட்ட நிலைக்கு மக்களை அழைத்து செல்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

இறுதிக்காட்சியில், புத்திசாலித்தனத்தாலும், கடுமையாக உழைப்பாலும் எதிரிகளை வென்ற பழங்குடியினத்தை சேர்ந்த துருவனுக்கு விருது வழங்காமல், துருவனை சாதி அடிப்படையில் கேவலப்படுத்திவரும் உயரதிகாரி கணபதிராம், பெறுவதாக காட்சிப்படுத்தியுள்ளது படத்தின் கருவை மேலும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது. இந்தியாவில் நிலவும் சுரண்டல் போக்கால் காலங்காலமாக உழைத்துவரும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதுவுமே முறையாக கிடைப்பதில்லை. மாறாக, உழைக்காத மேட்டுக்குடிகள் எளிதாக எல்லா அதிகாரங்களையும் அனுபவிக்கிறார்கள் என்ற உண்மையைக் காட்டி அதிகார வர்க்கத்தின் முகத்தில் ஓங்கி அறைகிறார் இயக்குநர் ஜனநாதன்.

இவ்வளவு உணர்வுப்பூர்வமான கதையை திரைக்கதையாக்கிய கல்யாண்குமார் பாராட்டுக்குரியவர். என்றாலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பலரும் அவமானப்படுத்தும் சமயங்களில் அமைதியாகவே கிடக்கும் நாயகன் துருவன் பாத்திரத்தை சில காட்சிகளில் பேசவைத்திருக்கலாம்.

காடு, ஏரி, நவீன ஆய்தங்களுடன் சண்டை.. என பிரமிக்கும்படி காட்சிகள் இருந்தும், கண்களை உறுத்தாமல் மிக யதார்த்தமாக படத்தொகுப்பை செய்துள்ள கணேஷ்குமாரின் பங்களிப்பு இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது. காட்சிக்கு அவசியமானதாக வரும் இரண்டு பாடங்களும் ரசிக்கவைக்கின்றன.

இறுதியாக ஒன்று –

priyar-ambathar10இந்திய நாட்டுப்பற்றை கதையின் சில இடங்களில் இழையோட விட்டிருப்பது தமிழ்த்தேசிய அரசியலாளர்களுக்கு மனநெருடலை தரலாம். இந்த மாதிரி தீவிர அரசியல் பேசும் திரைப்படத்தில் சமூக நீதி அரசியல் பற்றி புரிந்துகொள்ளாத வேறொரு தரப்பினரையும் படம் பார்க்க வைக்கும் முயற்சியாகவே இயக்குநர் செய்துள்ளார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் படத்தில் அடித்தள மக்களின் வாழ்நிலையைப் பற்றி கவலைப்படாத ஒரு தேசியத் தலைவரை கொல்ல வந்த சர்வதேசக் கூலிப்படையை நாயகன் மெனக்கெட்டு அழித்திருந்தால் அது தவறு. (விஜயகாந்த் படம் போல) மாறாக, அடித்தளத்தில் வாழும் உழவர்களின் நலனைக் காக்கும் விவசாயத்தை மேம்படுத்த பயன்படுத்தவுள்ள ஏவுகணையை அழிக்க வரும் கூலிப்படையை அழித்து தேசியம் பேசியிருப்பதில் தவறில்லை (இது நடக்காத விசயம் என்றாலும் இயக்குநர் ஆசைப்படுகிறார்). காரணம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள ஏழை எளிய விவசாயிகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் நம்பில் ஒருவராக சேர்த்துக்கொள்வது தவறா? என்பதை சிந்திக்க வேண்டியிருக்கிறது.

குறைகளே இல்லாத ஒரு செயல் இருக்க முடியாது. பேராண்மை திரைப்படத்தை பொறுத்தவரை நாட்டுப் பற்று என்னும் தேசிய கண்ணோட்டம் விமர்சனத்திற்குரியதுதான் என்றாலும் அதை வலிய பிடித்துக்கொண்டு வறட்டுத்தனமாக விமர்சனம் செய்வது தேவையற்றது என்றே கருதுகிறேன். தமிழ் திரைப்படத்துறையில் அரிதாகவே வருகின்ற பேராண்மை போன்ற திரைப்படங்களை ஆதரிப்பதன் மூலம் சமூக மாற்றத்திற்கு திரைப்படம் என்னும் கலை ஊடகத்தை தைரியமாக பயன்படுத்தி கருத்துக்களை கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையை அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு ஏற்படுத்த முடியும்.

ஆக, பேராண்மை திரைப்படத்தின் மூலமாக இட ஒதுக்கீட்டை பற்றி தவறாக எண்ணியுள்ளவர்களுக்கு ஒரு புரிதலை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை மனம் திறந்து பாராட்டலாம்.

No comments:

Post a Comment