பொய், லஞ்சம், மற்றும் அரசியல் அழுத்தங்கள்
- 1933, மே மாத வாக்கில் அம்பேத்கர் லண்டனில் இருந்தபோது ஜி. ஏ. கவயீ என்ற தீண்டப்படாதோர் சமூகத்தலைவர் அம்பேத்கரை மூன்று – நான்கு முறை சந்தித்தார். அப்போது அவருடன் மதம் மாறும் விஷயம் பற்றி விவாதித்தார். இந்தியா திரும்பியபின் கவயீ, ‘அம்பேத்கர் இஸ்லாமிய மதத்தில் சேர்வதாக உள்ளார்’ என்ற செய்தியைப் பரப்பி விட்டார்.
இதை மறுத்து அம்பேத்கர், ‘நான் இந்துமதத்தைப் பின்பற்றுபவனாக இருக்கப் போவதில்லைதான். அதுபோலவே நான் இஸ்லாமிய மதத்தையும் ஏற்கமாட்டேன். இந்நாட்களில் நான் புத்தமதத்தால் கவரப்பட்டுள்ளேன். ஆனால் நான் எனது சமூகத்திற்கு ஏற்றதோர் ஏற்பாட்டைச் செய்து முடிக்கும்வரை மத விஷயத்தில் எதுவும் செய்யப் போவதில்லை’ என்று விளக்கம் அளித்தார்1.
1935ல் அம்பேத்கர் மதம் மாறுவேன் என்று முடிவெடுத்ததும் உலகின் பெருஞ்செல்வரான ஹைதராபாத் நிஜாம் தீண்டத்தகாதவர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்பார்களேயானால் அதற்கென ஐந்துகோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்தார்.
மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்த கே. எல். கௌபா என்ற முஸ்லீம் தலைவர் அம்பேத்கருக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். இந்தியாவில் இருக்கின்ற முகம்மதியர்கள் அம்பேத்கரையும் தீண்டப்படாத வகுப்பு மக்களையும் மரியாதையுடன் வரவேற்கக் காத்திருப்பதாகவும், அரசியல் சமுதாயம் பொருளாதாரம் மதம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முழுமையான சமத்துவமும் சம உரிமையும் உறுதியாக அளிக்கப்படும் என்றும் அத்தந்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அம்பேத்கர் இது தொடர்பாக முஸ்லீம்களுடன் பேச விரும்பினால் 1935 அக்டோபர் 20ம்நாள் பதுவானில் நடைபெறும் முகம்மதியர் மாநாட்டிற்கு வருமாறு கௌபா தெரிவித்திருந்தார். ஆனால், அந்த மாநாட்டிற்கு அம்பேத்கர் போகவில்லை.
இஸ்லாமிய மதத்திற்கு மாறாதே என்ற அம்பேத்கர்
1935ம் ஆண்டு நாசிக் அருகே ஒரு கிராமத்தில் சில தீண்டத்தகாதவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறவுள்ளார்கள் என்று தெரியவந்ததும், அவசரப்பட்டு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அம்பேத்கர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
1936 ஜனவரியில் முஸ்லீம்களின் இரண்டு தூதுக்குழுவினர் அம்பேத்கரைச் சந்தித்து இஸ்லாமில் சேருமாறு வேண்டினர். அம்பேத்கர் அதை நிராகரித்தார்.
1946ல் இலண்டனில் அம்பேத்கர் அவருடைய கோரிக்கை அறிக்கையை உடனடியாக அச்சிட்டுக் கொண்டு, இங்கிலாந்தின் ஆட்சிப் பொறுப்பை வகித்த அரசியல் தலைவர்களை அணுகினார். தீண்டப்படாத வகுப்பினரை இஸ்லாம் மதத்தில் சேருமாறு அறிவுரை கூறியிருக்கிறீர்களா என்று அம்பேத்கரிடம் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் அரசியல் நிருபர் கேட்டடார். அப்போது, அவ்வாறு ஏதும் கூறவில்லை என்று பதிலளித்தார் அம்பேத்கர். ஏற்கனவே அம்பேத்கர் இஸ்லாமில் இணையப்போகிறார் என்ற வதந்தியை முஸ்லீம்கள் கிளப்பியபோது உடனுக்குடன் அம்பேத்கர் அதை மறுத்தார் என்பதை நாம் பார்த்தோம்.
தாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லீமாக மதம் மாறுவதை அம்பேத்கர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்லாம் ஒரு பேரழிவு மார்க்கம் என்ற அம்பேத்கர்
தங்களது அரசியல் உரிமைகளைப் பெற பூனாவில் ஷெட்யூல்டு வகுப்பினரால் துவங்கப்பட்ட சத்தியாகிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. அப்போது 1946, ஜூலை 26ல் அம்பேத்கர் ‘பம்பாய் கிரானிக்கல்’ பத்திரிக்கைக்கு அளித்தப் பேட்டியில் ‘‘….. ஒரு விதத்தில் தாம் காங்கிரசுக்கு நன்மை செய்பவரே. காங்கிரஸ் ஸ்தாபனத்தை முற்றிலுமாக செயலற்றதாக ஆக்குவது எங்களது சக்தியில் உள்ளது. நானும் எனது சமூகமும் முஸ்லீம்களாக மாற முடிவு செய்ய முடியாதா? திரு. ஜின்னாவின் மதத்தை ஏற்றுக்கொண்டால், எவ்வகையிலும் நான் இழந்தவனாக மாட்டேன், மற்றும் நிர்வாகக் கவுன்சிலுக்கு ஒரு முஸ்லீம் உறுப்பினராக என்னை நியமிக்கக்கூடும். அந்தத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுக்கவில்லை. ஏனெனில் முழு பேரழிவிலிருந்து காங்கிரசைக் காப்பாற்ற விரும்புகிறேன்.
இத்தகைய கடுமையான நடவடிக்கைகளில் ஏன் நான் இறங்கவில்லை? அது ஏனெனில் காங்கிரசுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை அளிக்க நான் விரும்புகிறேன். நாம் துவக்கியுள்ள போராட்டத்தில் எனது கட்சி குறைந்தபட்ச எதிர்ப்பு என்ற கொள்கையை எடுத்துள்ளது’’ என்று கூறினார்.
ஒருசமயம் அம்பேத்கர் தாம் ஏன் இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்.
“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆனால் மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன் என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’என்று கூறினார்2.
அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி பாலாசாகிப் தேசாய் கூறுகிறார்:
‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின்மீதும், அதன் பண்பாட்டின்மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்!’’3
அதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை. இதுபோன்று வேறுபல காரணங்களும் உண்டு. அவற்றையும் காண்போம்.
இந்தியாவில் புத்தமதத்தை அழித்தது இஸ்லாமே
அம்பேத்கர் புத்தமதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த புத்தமதம் அழிய இரண்டு காரணங்களை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஒன்று பிராமணீயம், இரண்டாவது இஸ்லாம்.
1950, மே மாதம் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் புத்தமதத்தின் வீழ்ச்சிக்கான காரணத்தை விளக்கினார் அம்பேத்கர்.
அதில் ‘புத்தமதம் வீழ்ச்சியடைந்ததின் காரணங்களைக் குறித்துக் கூறுகையில், சங்கராச்சாரியாரின் வாதத் திறமையால் புத்தமதம் அழிந்துவிட்டது என்று பலர் முன்வைக்கும் கருத்தை அவர் மறுத்தார். அவர் மறைவுக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் புத்தமதம் வழக்கத்திலிருந்தது என்ற உண்மை இந்தக்கூற்றைப் பொய்யாக்கிவிடுகிறது.
வைஷ்ணவ மற்றும் சைவ சம்பிரதாயங்கள் தோன்றியதே புத்தமதத்தின் மறைவிற்கான காரணம் என்று தாம் நம்புவதாக கூறினார். இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்று குவித்தான். எஞ்சியிருந்த புத்தத் துறவிகள் சீனா, திபேத், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுக்குப் போய்விட்டனர். புத்தமதத்தை மீண்டும் இந்தியாவில் நிலைநிறுத்த வேறொரு சமய குருமார் அமைப்பு ஒன்றை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இதற்குள் 90சதவித பௌத்தர்கள் இந்துமதத்திற்கு மாறிவிட்டதால் இது தோல்வியுற்றது’ என்று கூறுகிறார்.
அதேபோல் பௌத்தர்களின் உலகத் தோழமை மாநாடு இலங்கையில் 1950 மே 25 முதல் ஜூன் 6வரை நடைபெற்றது. கொழும்பில் நடந்த சர்வதேசக்கூட்டத்தில் 1950 ஜூன் 6ல் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கர் ‘……. புத்தமதத்துக்கு எதிராக பிராமண – சத்திரியர் கூட்டணியை உருவாக்கினர். பிராமணியம் மேல்நிலைக்கு வந்ததால் புத்தமதம் வீழ்ச்சியுற அது ஒரு காரணமாயிற்று. புத்தமதம் இந்தியாவில் வீழ்ச்சியுற வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாக இருந்தது.
கிரேக்கர்கள் புத்தமதத்துக்கு இடையூறு செய்யவில்லை. புத்தமத நடவடிக்கைகளுக்கு கிரேக்கர்கள் தாராளமாக நிதியுதவி செய்தனர் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஹூணர்கள் இந்தியாவைத் தாக்கினர். அவர்கள் குப்தர்களால் தோற்கடிக்கப்பட்ட பின் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். இதற்கு முன்பு ஹூணர்கள் புத்தமதத்தை அழித்துவிட முயன்றனர்.
ஆனால், முஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளை அகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.
நாளந்தா பல்கலைக் கழகத்தை புத்தர்களின் கோட்டை என்று கருதிய முஸ்லீம்கள் ஏராளமான துறவிகளை அவர்கள் ராணுவ வீரர்கள் என்று கருதி கொன்றுவிட்டனர். இக்கொடிய தாக்குதலிலிருந்து தப்பிய சில பிக்குகள் அண்டை நாடுகளான நேபாளம், திபேத், சீனா ஆகிய நாடுகளுக்குத் தப்பியோடினர்.’’ என்று கூறினார்.
1954 டிசம்பர் 4ஆம்தேதி சர்வதேச பௌத்த மாநாடு ரங்கூனில் (பர்மா) நடைபெற்றது. அம்மாநாட்டில் அம்பேத்கர் உரை நிகழ்த்தினார்.
‘‘புத்தமதத்தின் சித்தாந்தங்கள் தவறானவை என்று தெரியவந்ததால் அல்லது மெய்ப்பிக்கப்பட்டதால் அந்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்துவிடவில்லை. இந்தியாவிலிருந்து புத்தமதம் மறைந்துபோனதற்கான காரணங்கள் வேறுபட்டவை.
முதலாவதாக புத்தமதம் பிராமணர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டது. அசோக சக்கரவர்த்தியின் வாரிசான கடைசி மௌரிய சக்கரவர்த்தியை, புஷ்யமித்ரா என்னும் பிராமணத் தளபதி படுகொலை செய்து, சிம்மாசனத்தைக் கைப்பற்றி, பிராமணியத்தை அரசாங்க மதமாகப் பிரச்சாரம் செய்தான். இந்தியாவில் புத்தமதம் ஒடுக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது. அது ஷீணிப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.
பிராமணியத்தின் எழுச்சி இந்தியாவில் புத்தமதம் நசுக்கப்படுவதற்கு வழிவகுத்தது என்றால், இந்திய நாட்டின் மீது முஸ்லீம் படையெடுப்பு, புத்தமதம் முற்றிலுமாக அழிவதற்கு இட்டுச்சென்றது. முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கொடிய வன்முறையைக் கையாண்டு விகாரங்களை அழித்தொழித்தனர். பௌத்தபிட்சுகளைக் கொன்று குவித்தனர்.’’ என்று கூறுகிறார்.
14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்ஷை பெற்ற போது பேசியதாவது :
….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்து சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.
ஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்ததுதான் காரணம்.
அடுத்த காரணம் முக்கியமான காரணம் ஆகும்.
அரபிய அடிமை முறையில் எழுந்த இஸ்லாமிய சாதி அமைப்பு
அம்பேத்கரின் மதமாற்றமே சமத்துவம், சகோதரத்துவம் வேண்டித்தான். அந்த சமத்துவம், சகோதரத்துவம் இஸ்லாத்தில் உண்டா? இதற்கு ‘பாகிஸ்தான்’ நூலில் அம்பேத்கர் விளக்கத்தைப் பார்ப்போம்.
‘‘…. இனி அடுத்து சாதிமுறையை எடுத்துக்கொள்வோம். சகோதரத்துவத்தைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதைக் கொண்டு, அடிமைத்தன முறையிலிருந்தும், சாதிமுறையிலிருந்தும் விடுபட்ட சமயமாக பலரும் இஸ்லாமைக் கருதுகிறார்கள்.
இவற்றில் அடிமைத்தனத்தைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டிய தில்லை. இப்போது அது சட்ட ரீதியாக ஒழித்துக் கட்டப் பட்டுவிட்டது. ஆனால் அது நடைமுறையிலிருந்து வந்தபோது இஸ்லாமிடமிருந்தும் இஸ்லாமிய நாடுகளிடமிருந்தும் தான் அதற்குப் பெரும் ஆதரவு கிடைத்துவந்தது. அடிமைகளை நியாயமாகவும், நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் நடத்தவேண்டும் என்று குரானில் கூறப்பட்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த சாபக்கேட்டை, சாபத்தீட்டை ஒழித்துக்கட்டுவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எதுவும் இஸ்லாமில் காணப்படவில்லை.
சர் டபிள்யூ. முய்ர் பின்வருமாறு கூறுகிறார்.
‘‘…… இன்னும் சரியாகச் சொல்லப்போனால் பயங்கர மின்னல் வெட்டும் சமயத்தில் அவன் கால் விலங்கை மேலும் இறுக்கினான்… தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் ஒரு முஸ்லீமுக்கு இல்லை.’’
ஆனால் பிற்காலத்தில் அடிமைத்தனம் மறைந்தொழிந்தாலும் முசல்மான்களிடையே சாதிமுறை நிலைத்து நின்றுவிட்டது. வங்க முஸ்லீம்களிடையே நிலவும் நிலைமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இஸ்லாமிய சாதிப் பிரிவுகள்
வங்காள மாகாணத்துக்கு 1901 ஆம் வருடம் குடிமதிப்புக் கணக்கெடுத்த கண்காணிப்பாளர் வங்காள முஸ்லீம்களைப் பற்றி பின்கண்ட சுவையான விவரங்களைக் கூறுகிறார்.
‘‘பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மாகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது.
முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்:
1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப்
2. அஜ்லாஃப்
ஆகியவையே அவை. அஷ்ராஃப் என்பதற்கு உயர்குடிமகன் என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர்.
இஸ்லாம் வெறுக்கும் இஸ்லாமிய சாதிகள்
தொழில் புரிவோர் உட்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும், ‘அஜ்லாஃபுகள்’, ‘ஈனர்கள்’, ‘இழிந்தவர்கள்’, ‘கடைகெட்டவர்கள்’ என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப் படுகின்றனர்.
மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள், எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.
மசூதிக்குள் அனுமதிக்கப்படாத சாதிகள்
சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள் என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் மசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு இஸ்லாமிய சாதிக்குள்ளும் ஒராயிரம் இஸ்லாமிய சாதிகள்
இந்துக்களிடையே காணப்படுவது போன்றே முஸ்லீம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர்கள் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.
A. அஷ்ராஃப்கள் உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:
2. ஷேக்குகள்
3. பட்டாணியர்கள்
4. மொகலாயர்கள்
5. மாலிக்குகள்
6. மிர்ஜாக்கள்
B. அஜ்லாஃப் என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.
1) பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம்பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.
2) தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்
3) பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி.
4) அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா.
C. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மௌக்தா, மெஹ்தார்.
ஜாதி உயர்வுதாழ்வைக் கட்டிக்காக்கவே ஜமாத்துகள்
முஸ்லீம் சமூக அமைப்பில் காணப்படும் மற்றோர் அம்சத்தையும் குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் குறிப்பிடுகிறார்; அவர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள ‘‘பஞ்சாயத்துமுறை’’தான் அது.
கலப்புத் திருமணத்தை எதிர்க்கும் இஸ்லாம்
அவர் கூறியதாவது:
…… பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துகளைப்போன்றே முஸ்லீம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லீம்களில் மேட்டுதட்டுப்பிரிவினரும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும்.
உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றான். அவன் அவமானப் படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான்.
இஸ்லாம் இழிவு செய்யும் தொழிலாளர் சாதிகள்
இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது. அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாடமுடியும்.
ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.’’
இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடிமதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.
ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.’’ என்று அம்பேத்கர் எழுதுகிறார்.
சகோதரத்துவம், சமத்துவம் வேண்டி மதமாற்றத்தை அறிவித்த அம்பேத்கர் அந்த சகோதரத்துவம், சமத்துவம் இல்லாத இஸ்லாத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்? அம்பேத்கர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்காததற்கு இஸ்லாத்தில் நிலவிய ஜாதி முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.
இஸ்லாம் மதம் பெண்களை மதிக்கிறதா ? அம்பேத்கர் அது பற்றி என்ன சொல்லுகிறார் ?
அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
No comments:
Post a Comment