Friday, July 10, 2009

சென்னை சேரிவாழ்முஸ்லிம்கள -அடித்தள தொழில்கள்





ஹெச்.ஜி.ரசூல்

1)அடித்தள தொழில்கள் குறித்து

நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்களில் 95 சதவிகித்ததிற்கும் மேல்கவிஞர் சோதுகுடியானின் கருத்துக்களின் அடிப்படையில் அடித்தள தொழில்களைச் செய்து வருகின்றனர். நீலம்பாஷா தர்கா பகுதியில் வாழும் முஸ்லிம்களின் தொழில் மூன்றுவிதமாக பிரித்துக் காட்டப்படுகின்றது.

முதல்பிரிவினர் சாம்பிராணி புகைபோடும் தட்டுக்களோடு கடைகளுக்கு சென்று யாசகம் பெறுவோர், வாரம் ஒருமுறை தப்ஸ்கொட்டி வீடுவீடாக யாசகம் செய்வோர்,விதவை இளம்சிறார், முதியோர் என பள்ளிவாசல்,தர்கா வாசல்களில் உட்கார்ந்து யாசகம் செய்வோர், என்பதாக இடம் பெறுகின்றனர்.




இரண்டாம் பிரிவினர் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பிரியாணி மற்றும் உணவு சமைக்க செல்லுவோர்,சுன்ணாம்பு,பெயின்ட் அடிப்போர், ஆட்டோ ஓட்டுவோர், நகைபெட்டி ஒட்டும் வேலை செய்வோர்,என தொழில் செய்கின்றனர்.


ஸ்மாயில் கிரவுண்டில் வாழ்பவர்கள் மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி பொருள் விற்பவர்கள், கடற்கரை மணலில் வடை,பஜ்ஜி சுட்டு விற்பவ்ர்கள்,மாட்டுக்கறியில் கபாப் செய்து விற்பவர்கள் என இவர்கள் அன்றாடம் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள்.




லால்குண்டா பகுதியில் சிறுவியாபாரம் தவிர்த்து பீடிக் கம்பெனிகளின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால் கூலிக்கு பீடி சுற்றுவது மார்வாடிகளிடம் மணிகள் வாங்கி கூலிக்கு மாலை கோர்ப்பது, வீடுகளில் தையல் மெஷின் வைத்து நைட்டியை கூலிக்கு தைப்பது, எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் ஸ்டீல் பட்டறைகளில் கூலிவேலை, ரோட்டோரம் கடைவிரித்து வியாபாரம் என தொழில்கள் செய்கின்றனர்.


ுளியந்தோப்பில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி கடையினருக்கு மாநகராட்சியால் வெட்டி விற்கப்படும் கறித் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆடுமாடுகளை அறுக்கும் தொழில், கோழிக்கறி,மாட்டுக்கறி கடை, தையல்கடை,லேத்துப்பட்டறை, குப்பைபொறுக்கும் சாமான் வாங்கும் கடை எனவும் தொழில் செய்கிறார்கள். ஆசாத்நகர் பகுதியில் லேகிய வியாபாரம், மூலிகைகள் நாட்டுபுற மருந்துக்கடைவிரித்து நோய்தீரச் சொல்லி வியாபாரம், பழைய பேப்பர், பழைய இரும்பு சாமான்களுக்கு மாற்றாக கிழங்கு தரும் வியாபாரம் எனவும் தொழில்கள் செய்கின்றனர். இதைத் தவிர தள்ளுவண்டியில் தையல் மெஷினோடு தெருத் தெருவாய் கிழிந்த ஆடைதைத்தல்,டீக்கடை,ஓட்டலில் வேலை பேக் தைக்கும் தொழில் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.


சென்னை புறநகர் பகுதி ஒலிமுகமது பேட்டையில் பிரதானமாக இருந்த கைத்தறித் தொழில் விசைத்தறி வருகையால் நசிவடைந்தபிறகு அப்பளத் தொழில் முக்கியமாக நடைபெறுகிறது. பிரபல் அப்பள கம்பெனிகளுக்கு கூலிக்கு அப்பளம் உருட்டிக் கொடுக்கும் பணியைச் செய்கிறார்கள். மழைக்காலத்தில் இத்தொழிலை செய்ய முடியாது. ஆயிரம் அப்பளம் உருட்ட நூறு ரூபாய் கூலி வழ்ங்கப்படுகிறது.


மாங்காபட்டூரில் வயதான பெரும்பாலோர் பீடி சுற்றும் தொழிலை செய்கின்றனர். மாத்திற்கு பத்து நாள் மட்டுமே இந்த வேலை செய்ய முடிகிறது.


சமையல் தொழில், கசாப்புத் தொழில்,தள்ளுவண்டியில் பொருள் வியாபாரம் பிளாட்பார வியாபாரம்,ஆட்டோ ஓட்டுதல்,பெயின்ட் அடிக்கும் வேலை,ஸ்டீல் பட்டறைகளில் கூலிவேலை, பீடி சுற்றுதல், அப்பளம் உருட்டுதல் என்பதான கூலித் தொழில், சிறுவியாபாரம், சார்ந்த வேலைகளின் மூலமாகவே சம்பாதித்து அன்றாட கஷ்ட ஜீவிதத்தை மிகவும் நெருக்கடியான சூழலில் நடத்துகிறார்கள்.




2)
இடப் பெயர்வு


இம் மக்களின் பூர்வீகம் பற்றி சில தடயங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
தமிழகத்தின் தெற்குப்பகுதியிலிருந்து சமூக பொருளாதார நெருக்கடியின் காரணமாக உள்நாட்டு இடப் பெயர்வு நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி, மேலப்பளயம் பகுதிமக்களின் தொப்பூள் கொடி உறவாய் மாங்காடு பட்டூர் பகுதி மக்களில் ஒரு பகுதியினர் உள்ளனர்.இராமநாதபுரம், அபிராமம், மதுரை, பெரியகுளம்வாசிகள் இடம் பெயர்ந்து ஆசாத் நகரில் வசிக்கிறார்கள்.


தமிழகத்திலிருந்து வாழ வழியற்று பர்மாவிற்கு சென்ற முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் வலுப் பெற்று வளங்கினார்கள். பர்மா தேக்குமரங்களை கப்பலில் கொண்டுவந்து இறக்கி இங்கு வீடு கட்டியவர்களும் உண்டு. ஆனால் 1940 - 45 இரண்டாம் உலக யுத்த காலத்தில் யுத்தத்தின் சீரழிவால் பர்மாவிலிருந்து கல்கத்தாவிற்கு தரைவழி நடந்தே புலம்பெயர்ந்த போது இன்னும் வாழ்வின் அடிப்படைகள் தகர்ந்தது. யுத்தத்திற்கு பின் பத்து ஆண்டுகளில் 1958ல் ராணுவ ஆட்சி ஏற்பட்ட போது தமிழக முஸ்லிம்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெறுங்கையோடு தமிழகத்திற்கு அனுப்பப்பட்டனர். புழல், ரெட்ஹில்ஸ், கும்மிடிப்பூண்டி,தஞ்சைப் பகுதிகளில் பர்மா அகதி முஸ்லிம்கள் குடியமர்ந்தனர்.புலம்பெயர் பர்மா அகதிகள் வியாசர்பாடியிலும் வாழ்கின்றனர்.




முஸ்லிம் இளம் பெண்கள் பிற சமய வாலிபர்களோடு திருமணம் செய்து கொள்வதும் சிறிது காலத்திற்குப் இறகு அவர்கள் கைவிடப்பட்டு அநாதைகள ஆக்கப்படுவதும் சில பகுதிகளில் நேர்கிறது. இரு சமயங்களின் கலாச் சாரங்களுக்கிடையே அல்லல்பட்டு அடையாள நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்களாக இவை இருக்கின்றன.இவற்றை கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வுகளின் தரவுகளிலிருந்து தருவித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment