Tuesday, January 19, 2010

விரிவடையும் இஸ்லாமியப் பார்வை


விரிவடையும் இஸ்லாமியப் பார்வை

களந்தை பீர்முகம்மது


இஸ்லாம் குறித்து இன்று உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் அரசியல் அணுகு முறைகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்கள் குறித்தும் விரிவான அளவில் பேசப்படுகின்றது. அதே சமயத்தில் இஸ்லாத்தின் உட்கூறுகள் பற்றிப் பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராய்ந்து வருகின்றனர். தம் மனதிற்குகந்த முடிவுகள் எனில் அதை வரவேற்பதும் ஒப்புக்கொள்ள முடியாத பட்சத்தில் கடும் எதிர்ப்புக் காட்டுவதும் ஒருசேர நடந்துவருகின்றது. மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படுகையில், அதற்கு முகம் கொடுத்துத் தக்க பதில்கள் கூற ஏராளமான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் அது போன்ற வாய்ப்புகளைச் சமூகம் நிராகரித்துவிடுகின்றது. ஹெச்.ஜி. ரசூல் இது போன்ற விஷயங்களை எதிர்கொள்கிறார்; உடன்பாடாகவோ சற்றே எதிர்மறையாகவோ பதில் கூறுகிறார். ஆனாலும் காலங்காலமாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள கருத்துகளின் மேல் ஒரு சிறு விலகல் நேர்ந்தாலும் அதை ஒப்புக்கொள்கிற சூழல் இல்லை, விவாதிப்பதும் இல்லை.

‘குர்ஆனிய மொழியாடல்கள் - மீள் வாசிப்பின் தருணம்’ என்பது அவருடைய புதிய தொகுப்பு நூல். முக்கியமான பத்துத் தலைப்புகள் இதில் உள்ளன. மதம் என்றாலே உணர்ச்சிமயமானது. மற்றவர்கள் உணர்ச்சிமயமாய் இயங்குகின்ற தளத்தில், ரசூல் அறிவுபூர்வமாக இயங்குகிறார். கீலீஹ் மி ணீனீ ஸீஷீt ணீ னீusறீவீனீ எனும் இப்னு வராக்கின் நூல் குறித்து ரசூல் கூறும்போது, ‘இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய கருத்துப் படிமங்களை இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; புனிதங்களின் பெயராலோ மரபுவழி குர்ஆனிய ஆய்வு அணுகுமுறைகளாலோ இவற்றை எதிர்கொள்ள முடியாது’ என்றுதான் தன் கருத்தை முன்வைக்கிறார். பின்-நவீன கால நெருக்கடிகளையொட்டி குர்ஆனை ஆழமாக வாசித்துப் புதிய அர்த்தங்களைக் கண்டடைய வேண்டும் என்கிற நோக்கிலேயே அவருடைய இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.

‘மௌனங்களைப் பேசவைத்த தப்ஸீர்’ எனும் கட்டுரை விளிம்புநிலை அரசியலுக்கான தேடலை முன்வைக்கின்றது. ‘அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்; தொழுகையைக் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (பிறருக்கு) செலவுசெய்வார்கள் (2:3)’ என்கின்ற இந்த வசனம் இறைவழிபாட்டை முன்னிறுத்தும் அதே அளவிற்குத் தானம் வழங்குதலையும் முன்வைக்கின்றது. தொழுகையை நிறைவேற்ற அனைவரும் தக்க மனநிலை கொண்டவர்கள்தான். ‘ஜகாத்’ எனப்படும் செலவு - ஒருவருடைய வருவாயில் 2.5 சதவிகிதம் மாத்திரமே. ஆனால் நடைமுறையில் ‘தொழுகை’ அளவிற்கு ஜகாத் முன்னிலை பெறுவதில்லை. ஏன் இவ்வாறு ஆக வேண்டும்? அது ஒரு பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை; தொழுகையைப் போன்ற ஓர் உடல் மொழி அல்ல. ஒரு மனிதனின் தேவை என்ன அளவில் என்பதை எவராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. உலகமயம் குவிக்கும் நுகர்வுப் பொருள்கள் ஒரு மனிதனைப் பித்துறச் செய்கிறது. ஆசைக்கான எல்லைக் கோடுகள் தாமாகவே அழிந்துவிடுகின்றன. இதில் ‘ஜகாத்’ பற்றிய சிந்தனைகள் தாக்குப்பிடிப்பதில்லை. எனவே, ஒருவனின் பொருளாதார நிலை மார்க்கக் கடமையின் மீதான பற்றுதலை ஓரங்கட்டி விடுகின்றது. நம் பொருளாதாரத்தை மீறி ஆன்மிகம் சுடர்விட முடிவதில்லை. இங்கேதான் ஆன்மிக நாட்டத்தையும் பொருளாதார வாழ்வையும் இணைத்துப் பரிசீலித்து, மாற்று வழிகளைத் தேட வேண்டும். இந்தப் புள்ளியில் ரசூலின் பயணம் தொடர்கின்றது; மார்க்க மேதைகளின் பயணம் நின்றுவிடுகின்றது. பயணத்தைத் தொடர்வோர்க்கு எந்த முரண்பாடுகளும் இல்லை; தொடர முடியாமலும் தொடர விரும்பா மலும் நின்றுவிடுவோர்க்கு அதன்பின் சொல்லப்படும் எல்லாக் கருத்துகளும் முரண்படுகின்றன. இந்தத் தேக்கமே உலகளாவிய பல நெருக்கடிகளையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டு வந்து திணிக்கிறது. இதைக் கடைசி வரையிலும் ஆன்மிகக் கருத்தியல்களுக்கு உள்ளேயே பேசி முடிப்பதால், ‘இஸ்லாமியச் செல்வம்’ பங்கீடு செய்யப்பட முடியாமல் போகின்றது. சவூதி மன்னர்கள் செல்வச் செழிப்பில் மிதக்க, மிக அண்மையிலுள்ள எதியோப்பியாவில் தாய்ப்பாலுக்காகப் பரிதவிக்கும் ஒரு முஸ்லிம் நீக்ரோ குழந்தையைக் கழுகு தன் விருந்தாகத் தூக்கிக்கொண்டு செல்கின்றது.

குர்ஆன் சமூகத்தை நோக்கிய ஒரு பிரகடனம். அந்தக் குர்ஆனியத் தளத்தில் நின்றபடிக்கே வெளியுலகை எட்டிப் பார்க்கலாம். இஸ்லாமியப் பொருத்தப்பாட்டைக் கருதி விவாதம் செய்யலாம். ஆன்மிகக் கருத்திலேயே நின்று உழலும்படி குர்ஆனோ ஹதீஸ்களோ வலியுறுத்துவதில்லை. ஆனால், குர்ஆன் இன்றளவிலும் ஓர் ஆன்மிகப் பிரதியாக மட்டுமே வாசிக்கப்படுகின்றது.

குர்ஆனியத் தத்துவயியலும் சூஃபித்துவமும், பீர்முகம்மது வலியுல்லாவின் குர்ஆனிய உரையாடல் என்கிற இரண்டு கட்டுரைகளும் சூஃபிசத்தின் விரிவைக் காண்பவை. சூஃபித்துவம் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பினும் தமிழ்ச் சிந்தனையின் தனித்த அடையாளமும் கொண்டது என்கிறார் ரசூல். சூஃபித்துவமும் ஆன்மிகக் கருத்தையே பேசுகின்றது. ஆனால் அதன் அடிப்படையை வரையறுக்கக் காரணமாயிருந்தவை அரசியல் கருத்தாக்கங்கள்; லௌகீக வாழ்வில் காணப்பட்ட வெறித்தனமான சுயநலப் போக்குகள்! இறைவழிபாட்டை வெறும் சமயச் சடங்காச்சாரமாக்கியவர்களுக்கு எதிரான கருத்துகள் சூஃபித் துவத்தில் அடங்கியுள்ளன. சூஃபிகள் மக்களுக்குச் சேவையாற்றவும் மனித மனங்களை அன்பால் இணைக்கவுமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள். மேலும் இஸ்லாமியக் கலை இலக்கியத்தின் விதைகள் சூஃபித்துவத்தின் பயன்களே! இலக்கியம் தழைக்கும்போது மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தோன்றிவிடுகின்றன அல்லவா? இஸ்லாமிய அரசர்கள் சூஃபித்துவத்தை இதன் காரணமாகவே தான் வெறுத்தார்களோ? பீர்முகம்மது வலியுல்லாவின் ஞானப்புகழ்ச்சியில் வரும் பல வரிகளில் ஏழ்மை, வறுமை, பசி போன்ற சொல்லாடல்கள் இடம் பெறுவது மட்டுமல்லாமல் வித்தார வாழ்வு தருவாய், குறையாத செல்வம் தருவாய் போன்ற வேண்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. சூஃபித்துவம் ஆன்மிகத்தை மாத்திரமே பேசாமல், மக்களின் வாழ்நிலை பற்றியும் பேசுவதால் அரசர்களின் பீடம் அசைவதற்கான இயக்கு சக்திகள் உண்டாகின்றன. இலக்கிய வடிவங்களை நிராகரிப்பதின் மூலம் இஸ்லாமிய அரசாட்சிகள் வறட்டுத் தன்மையைக் கொண்டுள்ளன. சமூக அவல நிலைகளைக் கண்ணுறும் பீரப்பா, அதிகாரத்திலிருந்து மீட்சிபெறும் வழியைத் தேடுகிறார். அதிகாரத்திலிருந்து மீட்சி பெறுவதை அரசர்கள் விரும்புவார்களா?

இலண்டன் நகரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பின் காலனியக் கல்வியியல் பேராசிரியராகப் பணியாற்றும் ஜியாவுதீன் சர்தாரின் முக்கியப் பணிகளில் ஒன்று, ஷரீஅத் எனப்படும் இஸ்லாமியச் சட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும் சிந்தனைகளை முன்வைப்பது. நபிகள் நாயகத்தின் காலத்தில் பள்ளிவாசலில் மக்களோடு கலந்தே பல பிரச்சினைகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் நவீன கால இஸ்லாமிய ஆட்சிமுறைகளில் இப்படி ஒரு அரசியல் பண்பாட்டைத் தேடிப் பார்க்கவும் முடியாது. மத்திய காலச் சூழலில் இஸ்லாமிய அறிஞர்களால் வரையறைக்குள்ளான ஷரீஅத் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தின் வடிவமாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளதை விவரிக்கும் கட்டுரை ‘மறு சிந்தனையில் இஸ்லாமியக் கருத்தாடல்கள்’ என்பது. சமூகநலன் குறித்து இயங்க வேண்டிய ஷரீஅத், மக்களின் பங்கேற்புக்கு வாய்ப்பு தராமல் சமய அறிஞர்களின் ஒருமித்த கருத்து என்கிற அளவில் சுருக்கப்பட்டுள்ளது. ஜிகாத் என்கிற கருத்தாக்கம் ஒரு முஸ்லிமின் ஆன்மிகம் (மற்றும் உளவியல்) எல்லைக்குள்ளே உலவ வேண்டிய ஒன்று. ஆனால் அதன் பொருள் இஸ்லாமிய வெளிவட்டத்தில் மாற்றுச் சமூகத்தினருக்கு எதிரான சொல்லாடலாக மாற்றம் பெற்றுள்ளது. குர்ஆனின் சில வசனங்களை அதன் தோற்றுவாய்த் தன்மைக்கு மாறாக, நவீன அரசியல் நடவடிக்கைகளுக்கான அர்த்தமாகப் புரிந்துகொள்ளும் போது விகற்பமான செயல்பாடுகள் தோன்றுகின்றன. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப இஸ்லாமியக் கோட்பாடுகள் இயங்கியல் தன்மையைப் பெற வேண்டும். அவ்வாறு பெறாதுபோனால் அது பொது இழப்பாகும். எனவே ஜியாவுதீன் சர்தாரின் கருத்துகளைச் சமூகம் உள்வாங்கிக்கொள்ள முயல வேண்டும் என்பது அந்தக் கட்டுரையின் நோக்கமாக உள்ளது.

இஸ்லாம் ஏன் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்க வேண்டும்? முந்திய கட்டுரையில் சொல்லப்படும் அதே தன்மைகளைக் கொண்டே இந்தக் கேள்விக்கான பதிலையும் காணலாம். சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு யூதர் என்பதால் அவர் வகுத்த உளவியல் கோட்பாடுகளை இஸ்லாம் சமூகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையும்விட வலுவான காரணம் இன்னொன்று இருக்கின்றது. உளவியல் பகுப்பாய்வு இறுதியில் இறை நிராகரிப்பைச் செய்துவிடும் என்பதான அச்சம். இப்படியொரு அச்சம் சரிதானா? தங்களின் வேதத்தின் மீது முஸ்லிம்களுக்கு இன்னும் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்கின்ற நிலைக்குத்தானே இந்நிராகரிப்பு கொண்டு சேர்க்கும்? இந்தக் கட்டுரை இன்னும் விரிவாக எழுதப் பட்டிருக்கலாம்.

‘அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்’ குடிப் பண்பாடு பற்றிய அவரது கட்டுரையால் உண்டான விளைவுகளைப் பேசுகின்றது. அப்போது உண்டான சலசலப்புக்குரிய காரணங்களையும் குறைபாடான புரிதல்களையும் தன் கட்டுரைக்கு ஆதரவான தரவுகளையும் இக்கட்டுரையில் விவரிக்கிறார். குர்ஆன் உலகப் பொதுமறை என்றே சொல்லப்படுகின்றது. ஆனால் உலகில் பல விசித்திரமான அல்லது கடினமான தொழில் முறைகள் உள்ளன. இந்தத் தொழிலைக் கொண்டே ஜீவிப்பவர்களிடம் உண்டான குடிப் பழக்கம் வெறும் ரவுடித்தனம் அல்லது கெட்ட சகவாசம் அல்லது பொறுப்பின்மை சார்ந்து உருவான பண்பாடல்ல என்று நாம் புரிந்துகொள்ளலாம். அது அவர்களின் வாழ்க்கைமுறை சார்ந்த பொது அம்சம். மலக்கிடங்கைச் சுத்தம்செய்யும் ஒரு தொழிலாளியின் மனநிலையை ஒரு முஸ்லிம் உணர்ந்து அறியாதவரைக்கும், உச்சி வெயிலில் வியர்வை சொட்டச் சொட்டக் கல்லுடைக்கும் ஒரு தொழிலாளியின் போராட்டத்தை உணர்ந்து அறியாதவரைக்கும் இங்கே எதையும் பேசிவிட முடியாது. குர்ஆன்-ஹதீஸ் பற்றிய ஒரு முஸ்லிமின் கருத்து வெற்றுப் பிரமைகளால் உண்டாக்கப்பட்டதாகத்தான் இருக்கும். அவனிடம் உள்ள குர்ஆனியப் பார்வையானது, இஸ்லாமின் மேட்டுக்குடி சார்ந்த, மூளை உழைப்பாளியின் பார்வை சார்ந்த ஒரு குறுகிய தளமாகவே இருக்கும். ஓர் உலகப் பொதுமறை, மலக்கிடங்கைச் சுத்தம் செய்பவனையும் கல்லுடைக்கும் தொழிலாளியையும் அரவணைக்க முடியாமல்தானே போகும்? அறிவுஜீவிகளுக்கு வாய்த்த இஸ்லாம் உலக வாழ்க்கைமுறை சார்ந்து வெளிப்படவில்லை. பொது அரங்கில் தங்களையும் ஒரு தூய முஸ்லிமாகக் காட்ட வேண்டி நிறையப் பேர் அப்போது சின்னச் சின்ன டிராமாக்களை நடத்திக் கொண்டிருந் தனர்-ரசூலுக்கு எதிரானவர்கள் என்னும் போர்வையில்! (முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையோடு இறுகிப் பிணைந்துள்ள ‘வட்டியும் வட்டி சார்ந்த வருவாய்க்கும்’ எதிரான குர்ஆனிய வாளை அப்போது எந்த இடைக்கச்சில் அவர்கள் சொருகி வைத்திருந்தார்கள் என்பதையே பார்க்க முடியாமல் போயிற்று.) ‘தாராளமய ஷரீ அத்’ கட்டுரையை இன்னும் புரியும் படியாக அவர் விளக்கியிருக்க வேண்டும். சொல்லவந்த கருத்துகளை விட்டுவிட்டு வேகவேகமான ஓட்டம். ஷரீ அத்தைத் தாராளமய நோக்கில் பார்ப்பதற்கு நமக்கு முதலும் முடிவுமாக உதவுவது இந்த காலம் ஜ் வெளி, காலம் ஜ் சூழல் போன்ற தரவுகள்தான். ஓர் அறிவுஜீவியும்கூடக் கடினமான தடைகளைத் தாண்டியே ரசூலின் இந்தக் கட்டுரையைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அக்கட்டுரையை அவர் ஒரு கருத்தரங்கில் வாசித்திருக்கிறார். அப்படியானால் வரிக்கு வரி அவர் இடை நின்று விளக்கம் கொடுத்திருப்பாராய் இருக்கும்.

‘முக்கானத்துன்’ என்னும் அரபிச் சொல் மூன்றாம் பாலினத்தாரைக் குறிக்கிறது. அரவானிகள் குறித்துத் தெளிவான வசனங்கள் குர்ஆனில் இல்லை. ஷான்மாமோன் என்ற பெண் ஆய்வாளர் அரவானிகளைப் பற்றிய ஆய்வைச் செய்துள்ளார். மெக்காவின் கஃபத்துல்லாவின் ஹரம் எல்லையிலும் மெதினாவில் உள்ள நபி முகம்மதுவின் சமாதியிலும் அவர்கள் காவலர்களாகப் பணியாற்றுகிறார்கள். இதைத் தவிர அவர்களுக்குக் கௌரவ மளிக்கும் தகவல்கள் (குர்ஆனிலோ-ஹதீஸிலோ) இல்லை. இப்போது நிலவிவரும் அதே மனப்பான்மைதான் அந்தக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது. முன்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள காலம் ஜ் வெளி போன்ற தரவுகள், மருத்துவ ஆய்வுகள் இன்னும் இஸ்லாமிய உலகில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது தெரிய வருகிறது. 1984க்குப் பிறகு பாதுகாவல் பணிக்கு மூன்றாம் பாலினத்தாரைச் சவூதி அரசு தேர்வுசெய்யவில்லை. இதெல்லாம் மூன்றாம் பாலினத்திற்கு எதிரான அநீதிகளே.

தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்துமே இஸ்லாமியப் பார்வையை விரிவுபடுத்தக்கூடியவை. அரேபிய மார்க்கவாதிகளும் மேலை நாட்டு அறிஞர்களும் இஸ்லாத்தைப் பற்றிக்கொள்கிற சாதகமும் பாதகமுமான தகவல்களை உடனடியாகத் தமிழுலகின் கவனத்திற்குக் கொண்டு வருகிற பணியை ஹெச்.ஜி. ரசூல் நீண்டகாலமாகவே செய்துகொண்டிருக்கிறார். முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதிலடியைத் தருவதிலும் அவர் பின்தங்கியதில்லை.

இந்த நூலை வெளிக்கொண்டு வந்ததில் கீற்றுப் பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. ஆனால் தமிழப் பதிப்புலகம் கண்டிருக்கும் பாய்ச்சலைக் கீற்றுப் பதிப்பகம் கவனத்தில் கொள்ள வேண்டும். துணைப்பாட நூல்தான் என்றெண்ணும்படியாக அச்சும் அமைப்பும் உள்ளது.

குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்

ஹெச்.ஜி. ரசூல்
பக். : 92 விலை: ரூ. 50
முதல் பதிப்பு: ஜூலை 2008
வெளியீடு
கீற்று வெளியீட்டகம்
1-48கி, அழகிய மண்டபம்
முளகுமூடு அஞ்சல் - 629 167
குமரி மாவட்டம்

நன்றி:காலச்சுவடு

Monday, January 18, 2010

அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்



அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்

- ஸ்டீஃபன் ஹாக்கிங்

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாம் வாழும் உலகம் கடந்த நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகும். இம்மாற்றங்களை நிறுத்திவிட்டு, தூய்மையானது எளிமையானது என நினைக்கப்படும் முற்காலத்திற்கு செல்ல வேண்டும் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் கடந்தகாலம் அப்படி ஒன்றும் அலாதியானது அல்ல என்பதையே வரலாறு நமக்கு சொல்கிறது. நவீன மருத்துவ வசதிகள் இல்லாதிருந்தும், பெண்களுக்கு பிள்ளைப்பேறு ஆபத்தான ஒன்றாக இருந்தும் – அதிகாரம் பொருந்திய சிறிய சதவிகித மக்களுக்கு கடந்த காலம் பிரச்சனைகள் அதிகமற்றதாகவே இருந்தது. ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை கரடுமுரடாக, அற்பாயுசுடன் முடிந்தது.

எப்படியும், நாம் விரும்பினாலும், காலத்தை பின்னகர்த்தி முற்காலத்திற்கு செல்வது சாத்தியம் இல்லை. சேகரித்த அறிவையும் தொழிற்நுட்பத்தையும் மறந்துவிட முடியாது. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் வளர்ச்சிகளை தடுக்கவும் முடியாது. ஆராய்ச்சிக்கு என செலவிடும் பணத்தை அரசு முழுமையாக நிறுத்தினாலும் (தற்போதைய அரசு இதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறது) சந்தை போட்டிச் சூழல் தொழிற்நுட்ப வளர்ச்சிகளை உண்டாக்கும். மேலும், தேடல் கொண்ட உள்ளங்கள் அடிப்படை அறிவியல் குறித்து சிந்தித்துக்கொண்டு தான் இருக்கும், சம்பளம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். வளர்ச்சியை தடுப்பதற்கான ஒரே வழி உலகம் தழுவிய அடக்குமுறை அரசு ஒன்று புதியவை அனைத்தையும் ஒடுக்குவது தான். ஆனால் மனித முனைப்பும் அறிவும் இதை வென்றுவிடும். இது போன்றதொரு அடக்குமுறை வளர்ச்சி வேகத்தை குறைக்குமே அன்றி தடுக்காது.

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சிகள் நமது உலகில் மாற்றங்கள் உண்டாக்குவதை தடுக்க முடியாது என்பதை ஒத்துக்கொள்வோமேயானால், அம்மாற்றங்கள் சரியான திசையில் செல்ல நம்மாலான முயற்சிகளை செய்யலாம். ஒரு மக்களாட்சி சமூகத்தில் இது நிகழ, அறிவியல் குறித்த அடிப்படை புரிதல்கள் மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். இப்புரிதல், அறிவியல் குறித்த முடிவுகளை வல்லுனர்கள் கைகளில் விடாமல் மக்களே எடுக்க உதவும். அறிவியல் குறித்த மக்களின் தற்போதைய மனப்போக்கு விருப்பும் வெருப்பும் கலந்த ஒன்றாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் உண்டாகும் வாழ்நிலையின் சீரான வளர்ச்சியை எதிர்ப்பாக்கும் அதே வேளையில், அறிவியல் குறித்த புரியாமையினால் விளையும் நம்பிக்கையின்மையும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நம்பிக்கையின்மை, கார்ட்டூன்களில் வரும், ஃப்ராங்கிஸ்டைனை உருவாக்க இரவு பகலாக உழைக்கும் பித்தேறிய விஞ்ஞானியின் வாயிலாக வெளிப்படுகிறது. பசுமைக் கட்சிகளுக்கான ஆதரவிற்கான முக்கிய காரணியாக இந்த நம்பிக்கையின்மையே இருக்கிறது. அதே சமயம் அறிவியல் குறித்த ஆர்வமும் மக்களுக்கு இருந்துகொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக வானவியல் போன்ற துறைகளில். காஸ்மோஸ் (Cosmos) போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெருகி வரும் பார்வையாளர்க் கூட்டமும், அறிவியல் புனைவுகளுக்கு பெருகிவரும் முக்கியத்துவமும் இதை நிரூபிக்கின்றன.

இந்த ஆர்வத்தை எவ்வாறு பயன்படுத்தி மக்களுக்கு அமில மழை, கண்ணாடி கூண்டு அனல் விளைவு பசுமைக்குடில் விளைவு( greenhouse effect), அணு ஆயுதம், மரபுப் பொறியியல் (genetic engineering) போன்ற முக்கிய அறிவியல் நிகழ்வுகள் குறித்த சரியான முடிவுகளை எடுப்பதற்கான அறிவியல் புரிதலை ஏற்படுத்தலாம்? நிச்சயமாக இது பள்ளிகளில் இருந்தே தொடங்கப்படவேண்டும். ஆனால் பள்ளிகளில் அறிவியல் வரண்ட , ஆர்வமூட்டாத வகையிலேயே புகட்டப்படுகிறது. பிள்ளைகளும், நாம் வாழும் உலகில் அவற்றின் பயன்பாடு குறித்து எந்த புரிதலும் இன்றி, மதிப்பெண்களுக்காகவே படிக்கின்றனர். மேலும், அறிவியல் பெரும்பாலும் சமன்பாடுகளைக்கொண்டே சொல்லித்தரப்படுகிறது. கணித கருத்துக்களை விளக்க சமன்பாடுகள் சரியான முறை தான் என்றாலும் அவை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தவே செய்கிறது. சமீபத்தில் நான் ஓர் பிரபல புத்தகத்தை எழுதுகையில், நான் பயன்படுத்தும் ஒவ்வொரு சமன்பாடும் விற்பனையை பாதியாக குறைக்கும் என அறிவுருத்தப்பட்டேன். ஒரே ஒரு சமன்பாட்டை பயன்படுத்தினேன், ஐன்ஸ்டைனின் பிரபல சமன்பாடான E = mc2. ஒருவேளை அது இல்லாதிருந்தால் விற்பனை இரட்டிப்பாகி இருக்கலாம்.

விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்களது கருத்துக்களை சமன்பாடுகளாக வெளிப்படுத்துகின்றனர், ஏனெனில் அவர்களுக்கு எண்ணிக்கை ரீதியில் துல்லியமான விடை தேவைப்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அறிவியல் விடயங்களில் கருத்தாக்க ரீதியிலான புரிதலே போதுமானது. இதற்கு, சொற்களும் விவரண படங்களுமே போதுமானது, சமன்பாடுகள் தேவையில்லை.


பள்ளியில் கற்பிக்கப்படும் அறிவியல் மக்களுக்கு ஓர் அடிப்படை கட்டுமானத்தை அளிக்கிறது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் கொள்ளவேண்டும். பள்ளி, பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேருவதற்குள் பல புதிய முன்னேற்றங்கள் நிகழ்துவிடுகின்றன. எனக்கு பள்ளியில் மூலக்கூறு உயிரியலை (molecular biology) குறித்தோ, டிரான்ஸிஸ்டர்கள் குறித்தோ சொல்லித்தரப்படவில்லை, ஆனால் மரபுப் பொறியியலும், கணினிகளும் நமது எதிர்கால வாழ்வை முற்றிலுமாய் மாற்றப்போகின்றன. அறிவியல் பற்றிய பிரபல புத்தகங்களும் பத்திரிக்கை கட்டுரைகளும் புதிய முன்னேற்றங்களைக் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறலாம். ஆனால் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் மக்கள்தொகையில் ஓர் சிறு சதவிகிதத்தினரையே சென்றடைகிறது. மிகப் பரவலாக மக்களை சென்றடைய தொலைக்காட்சி தான் சிறந்த ஊடகம். தொலைக்காட்சிகளில் அறிவியல் குறித்த சில நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன. ஆனால் அவை அறிவியல் அற்புதங்களை, விளக்கங்களோ அறிவியல் கருத்தாங்களில் இந்நிகழ்வுகளில் பங்கு குறித்தோ ஏதும் கூறாமல், ஒரு மந்திரத்தை போல காட்டுகின்றன. பொழுதுபோக்கு மட்டுமன்றி மக்களுக்கு கற்பிக்கும் கடமையும் தங்களுக்கு இருப்பதை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்கள் உணரவேண்டும்.

மக்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அறிவியல் சம்மந்தப்பட்ட விவகாரங்கள் எவை?

மிக முக்கியமானது அணு ஆயுத விவகாரம். மற்ற பிரச்சனைகளின் – உணவு கையிருப்பு, கண்ணாடி கூண்டு அனல் விளைவு (greenhouse effect) போன்றவற்றின் – விளைவுகள் அதிக கால அளவில் தெரிய வரும். ஆனால் அணு ஆயுதப் போர் சில நாட்களுக்குள் மனித இனத்தையே அழித்துவிடும் வல்லமைக்கொண்டது.

Saturday, January 9, 2010

பெண் எப்போது பெண்ணியவாதி ஆகிறாள்?



நம் சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களிலும் பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அப்படி இருப்பது பற்றிய சுய பிரக்ஞை இல்லாமல் வாழ்வதற்கு விதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள். சமயங்களில் ஆண்களுடனான முரண்கள் ஏற்படும்போதும் அது பெண்களுக்கான பிரத்யேகப் பிரச்சினைகளின் அடிப்படையில் இருப்பதில்லை.




இந்தச் சூழலில் ஒரு பெண் தனது, தன்னைப் போலுள்ள பிற பெண்களின் உரிமைகளை உணர்ந்து அதனடிப்படையில் செயல்படுவதைப் பெண்ணியவாதச் செயல்பாடு எனக் கொள்ளலாம்.




பெண்ணியவாதச் செயல்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தூண்டும் காரணிகளாக இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, வாசிப்பின் மூலம் வரும் புரிதல், விழிப்புணர்வு. சிமொன் டி பிவோரிலிருந்து க்ளோரியா ஸ்டெயினம் வரை இதற்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். (க்ளோரியா ஸ்டெயினத்தின் குழந்தைப் பருவம் மோசமாக இருந்தாலும் அதற்கு அவர் தந்தையோ பிற ஆண்களோ காரணமல்ல). இரண்டாவது காரணம் அடக்குமுறை. ஒரு பெண் வன்முறைக்குட்படுத்தப்படும்போது, அடக்கு முறைக்கு ஆளாக்கப்படும்போது அதை மீறும் செயல்பாடுகளின் வழியாகப் பெண்ணியம் குறித்த புரிதல்கள் அவளுக்கு ஏற்படுகின்றன. பல சமயங்களில் பெண்கள் இப்படித்தான் பெண்ணியவாதிகளாக மாறுகிறார்கள்.




இந்த வகையில் குறிப்பிடத்தகுந்த உதாரணம் முக்தார் மாய். பாகிஸ்தானிலுள்ள மீராவாலா என்னும் குக்கிராமத்தில் பிறந்த 37 வயது முக்தார் மாய் 2002இல் அவரது கிராமப் (கட்ட) பஞ்சாயத்தாரால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். மேல் ஜாதியைச் சேர்ந்த சல்மா என்னும் 27 வயதுப் பெண்ணுடன் முக்தாரின் 12 வயதுத் தம்பி ஷாகூர் பாலியல் உறவு கொண்டான் என்பதுதான் வழக்கு. முக்தாரின் குடும்பம் எவ்வளவோ மன்றாடியும் முக்தார் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கூட்டுப் பாலியல் வல்லுறவு (gang-rape). அவரது தந்தை மற்றும் பிற உறவினர்களின் முன்னிலையிலேயே சல்மாவின் சகோதரன் அப்துல் காலிக் உள்பட நான்கு பேர் முக்தாரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கிட்டத்தட்ட நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.




இப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்படும் முதல் பெண்ணல்ல முக்தார். அவரது சாதியில் பல பெண்கள் இத்தண்டனையைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய தண்டனைக்குள்ளாகும் பெண்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதுதான் வழக்கம். தண்டனை விதிப்பவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் தன்னைப் பற்றி வரும் ஒரு பத்திரிகைச் செய்தி, அதன் மூலம் கிடைத்த ஆதரவு தற்கொலை முடிவுக்குக் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட முக்தாரைத் தன் முடிவை மாற்றிக்கொள்ள வைக்கிறது. இந்த அநீதியை இழைத்தவர்களுக்கு எதிராகப் போராட முடிவுசெய்கிறார். அதிலும் பல சிக்கல்கள். உதாரணத்துக்குச் சில: எழுத, படிக்கத் தெரியாத முக்தார் கொடுக்கும் வாக்குமூலத்தைக் குற்றவாளிகளுக்குச் சாதகமான ஒன்றாக எழுதுகிறார்கள் காவல் துறையினர். குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆபத்து உண்டாகும் என மிரட்டுகிறார்கள். முக்தாரின் உறுதியையும் போராட்டக் குணத்தையும் பற்றிப் பத்திரிகைகள் மூலம் கேள்விப்படும் பல தேசங்களைச் சேர்ந்த பெண்ணிய அமைப்பினர் அவரைத் தங்கள் தேசங்களுக்கு அழைத்துப் பேச வைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு அவப்பெயர் உண்டாக்குகிறார் என்று பெர்வெஸ் முஷ்ஷரப் தலைமையிலான பாக். அரசு அவரை ஒருமுறை வெளிநாடு செல்லக் கூடாது எனத் தடுத்தது. “புகழ், பணம், எளிதில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேண்டுமென்றால் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் போதும்” என்று அவரைப் பற்றி அரசாங்க மேல்மட்டத்தில் ஒருவர் சொன்னார்.




இங்கு இன்னொரு வழக்கு பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 2005இல் ஷாசியா காலித் என்னும் மருத்துவரை அவரது வீட்டிலேயே வைத்துப் பாலியல் வல்லுறவுள்ளாக்குகிறான் ஒரு ராணுவ அதிகாரி. ஷாசியா காலித்துக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மாறாக அவர் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி குற்றவாளியல்ல என முஷ்ஷரப்பே சொல்கிறார். கடுமையான நெருக்கடிகளுக்கிடையில் ஷாசியா காலித் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில் பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டார். முக்தாரின் தொடர்ச்சியான போராட்டமும் அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வும் பாகிஸ்தானிய சமூகத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவந்துவிடவில்லை என்றாலும் முக்தாரின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.




முக்தார் இப்போதும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். தனக்குப் படிப்பறிவு இல்லாத காரணத்தால் தான் இப்படியொரு நிலை என்று உணர்ந்தவர் தனக்கு வந்த நஷ்ட ஈட்டுப் பணத்தில் மீராவாலா கிராமத்தில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 300 பேர் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்.




முக்தார் மாய் வழக்கு இன்னும் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 15ஆந் தேதி அப்பாஸ் கபோல் என்னும் காவலரை மணந்திருக்கிறார் முக்தார். முக்தாரின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது அவரது வீட்டுப் பாதுகாப்புப் பணிக்கு வந்தவர் அப்பாஸ். ஏற்கனவே திருமணம் ஆனவர். முக்தாரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்தான். அப்பாஸ் முக்தாரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது முக்தார் மறுத்திருக்கிறார். அப்பாஸ் தற்கொலைக்கு முயன்றதுடன் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். அதனால் பயந்துபோன அவரது முதல் மனைவி முக்தாரிடம் வந்து கேட்ட பிறகே திருமணம் நடந்திருக்கிறது. தவிர, திருமணத்துக்கும் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார் முக்தார். அதனடிப்படையில் அப்பாஸின் சம்பளமும் சொத்தும் முதல் மனைவிக்கே சேரும்.




இதனால் பெண்ணியவாதிகள் கடுப்பாகியிருக்கிறார்கள். பெண்ணியவாதியாக இருந்த முக்தார் இப்போது அந்த நிலையிலிருந்து வழுவிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே மணமானவரை மீண்டும் மணந்துகொண்டதன் மூலம் பல ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு ஆதர்சமாக இருந்த முக்தார் அந்தப் பீடத்திலிருந்து விழுந்துவிட்டதாக விமர்சிக்கிறார்கள்.




தனது 66 வயதுவரை திருமணம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் கொண்டிருந்த க்ளோரியா ஸ்டெயினம் திடீரென்று 2000இல் பிரபல நடிகரான கிரிஸ்டியன் பேலின் தந்தை டேவிட் பேலைத் திருமணம் செய்துகொண்டார். பேல் ஏற்கனவே இரண்டுமுறை விவாகரத்தானவர். முக்தாருக்குக் கிளம்பியது போல ஸ்டெயினத்துக்கு எதிராகவும் விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. “1960களிலிருந்து இப்போதுவரை திருமணம் என்கிற சமூக அமைப்பு பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. அப்போது போல இப்போது நான் எனது உரிமைகளை விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லை” எனச் சொல்லி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ச்சியான பெண்ணியச் செயல்பாடுகளாலும் விமர்சனங்களை முறியடித்தார்.




க்ளோரியா ஸ்டெயினம் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பு முக்தார் மாய்க்கு மறுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த சமூகத்தின் பின்புலம் காரணமாக இருக்கலாம்.




கட்டமைக்கப்பட்ட பெண்ணியத்தின் (Institutionalised feminism) கடினமான கூறுகளை முக்தார் என்றுமே தன்மீது திணித்துக்கொண்டதில்லை. தான் ஒரு தீவிரமான பெண்ணியவாதி அல்ல என அவரது சுயசரிதையில் சொல்கிறார். “என்னை ஊடகங்கள் அப்படி நினைத்தபோதும் நான் தீவிரப் பெண்ணியவாதி அல்ல. நான் பெண்ணியவாதியாக மாறியதற்குக் காரணம் எனது அனுபவம். அதிலிருந்து நான் மீண்டது தான் காரணம். அப்படி நடந்திருக்காவிட்டால் ஆண்கள் ஆளும் சமூகத்தில் நான் ஒரு எளிமையான பெண்ணாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பேன். ஆனால் நாம் மதிக்கப்பட வேண்டுமென்றால் அது ஆண்களை வெறுப்பதன் மூலம் நடக்காது. அவர்களை வெற்றிகொள்வதில்தான் நமது வெற்றி இருக்கிறது” என்கிறார்.




அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன் தான் செவிவழி கற்ற குர்ரானைப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் பணியைச் செய்திருக்கிறார் முக்தார். ஆனால் அதன் பின்னர் அப்படிப் பிள்ளைகள் வளருவதில்லை எனத் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.




எப்படிப்பட்ட வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் முக்காடு இன்றி முக்தாரைப் பார்க்க முடியாது. இப்போதும் இஸ்லாத்தின் மீதும் குர்ரானின் மீதும் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அசாத்தியமானது. மிகத் தீவிரமான பெண்ணியவாதிகளின் பார்வையில் இவையும் பிரச்சினைகளாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில் நம்பிக்கையுள்ள முக்தார் இரண்டாவது மனைவியாகச் சம்மதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.




திருமணம் என்கிற முடிவை எடுக்கும்போதுகூடப் பெண்ணிய நிலை நோக்கிலேயே அதை அணுகியிருக்கிறார் முக்தார். “என்னைப் பொறுத்தவரை நான் மூன்று பெண்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறேன்” என்கிறார். பின்னணி இதுதான்: முக்தார் வாழும் பகுதியில் மிகப் பிரபலமான பழக்கம் வட்ட சட்டா என்னும் பழக்கம். அதாவது தன் தங்கையை ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுக்கும் ஆண் பதிலுக்கு அவரது தங்கையைத் திருமணம் செய்வதுதான். அப்பாஸின் இரண்டு தங்கைகளை அவரது முதல் மனைவியின் அண்ணன்மார்கள் திருமணம் செய்திருக்கிறார்கள். அப்பாஸ் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்தால் பதிலுக்கு அவர் தங்கைகளை அவர் மனைவியின் அண்ணன்மார்கள் விவாகரத்துச் செய்வார்கள். தவிர கல்லும் கரையும் என்பது போலத் தான் தனக்கும் ‘அப்பாஸ்மீது காதல் உண்டானதாக’ முக்தார் சொல்கிறார்.




மேலும் அப்பாஸ் தற்கொலை உள்ளிட்ட மிரட்டல்கள் மூலம்தான் முக்தாரைப் பணிய வைத்தாரென்றாலும் அதற்கு முக்தாரை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கும்?




நமது சமூகத்திலும் திரைப்படங்களிலும் இது மிகச் சாதாரணமான விஷயம். காதல் தோல்வியால், காதல் நிராகரிப்பால் தற்கொலைக்கு முயலும் ஆண்கள் பற்றிய செய்திகள் வராத தினசரிகளே இப்போதெல்லாம் வருவதில்லை. தன்னைக் கதாநாயகியின் மீது திணித்துக்கொள்ளத் தற்கொலை போன்ற ஆயுதங்களைப் பிரயோகிப்பான். . . எந்த கதாநாயகி அந்த ஆயுதத்திற்கு விழாமல் இருந்திருக்கிறாள்? அப்படி இருந்துவிட்டால் அவள் கல்நெஞ்சம் கொண்டவளாகவும் கதாநாயகன் பரிதாபத்துக்குரியவனாகவும் கருதப்படும் அவலநிலைதான் இருக்கிறது. அப்படி முன்முடிவுகள் கொண்ட சமூகத்தில் முக்தார் மாய் போன்றவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?




முக்தார் பிறந்து வளர்ந்த எளிய பின்புலத்திலிருந்து பார்க்கும்போது அவரால் வேறு எந்த முடிவும் எடுத்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து மீளும் உறுதிகொண்ட முக்தார், அன்பு மற்றும் அது சார்ந்த ஆதிக்கத்திலிருந்து மீள முடியாமல் தோற்றுப் போனது அவரது தவறு அல்ல என்றே தோன்றுகிறது.




தவிர, தன்னால் இயன்றவரை இதிலும் பல விதிமீறல்களைச் செய்திருக்கிறார். அப்பாஸைவிட ஏழு வயது மூத்தவர் முக்தார். பாகிஸ்தான் போன்ற நாட்டில் இது ஒரு சாதனை. முதல் மனைவியின் உரிமைகளும் சலுகைகளும் கொஞ்சமும் பாதிக்காத வகையில் அவர் செயல்பட்டிருக்கிறார். இந்தத் திருமணத்தால் தான் நடத்தும் பள்ளிக்கூடத்துக்கும் தனது லட்சியத்துக்கும் எந்தத் தடையும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.




முதல் கணவருடன் விவாகரத்து ஆன பிறகு குர்ரான் சொல்லித் தருவதிலும் சப்பாத்தி இடுவதிலும் தனது எஞ்சிய காலத்தைக் கடத்தியிருக்க வேண்டிய முக்தார் மாய், வாழ்வு அவருக்குக் கற்றுக்கொடுத்த பெண்ணியக் கருத்தியலைப் பல சமரசங்களுக்கிடையிலாவது தான் சார்ந்த சமூகத்தில் கடைபிடிப்பது தான் அவரது வெற்றி. போராட்டம், தற்கொலை என்னும் இரண்டு பாதைகள் தெரிந்தபோது தனக்கு முன்பிருந்தவர்கள் செய்தது போலத் தற்கொலை என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் கடினமானதெனினும் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் முக்தார் மாய் என்னும் பெண்ணியவாதியின் அசலான அடையாளம்.

நன்றி - காலச்சுவடு