Saturday, January 9, 2010
பெண் எப்போது பெண்ணியவாதி ஆகிறாள்?
நம் சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களிலும் பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அப்படி இருப்பது பற்றிய சுய பிரக்ஞை இல்லாமல் வாழ்வதற்கு விதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள். சமயங்களில் ஆண்களுடனான முரண்கள் ஏற்படும்போதும் அது பெண்களுக்கான பிரத்யேகப் பிரச்சினைகளின் அடிப்படையில் இருப்பதில்லை.
இந்தச் சூழலில் ஒரு பெண் தனது, தன்னைப் போலுள்ள பிற பெண்களின் உரிமைகளை உணர்ந்து அதனடிப்படையில் செயல்படுவதைப் பெண்ணியவாதச் செயல்பாடு எனக் கொள்ளலாம்.
பெண்ணியவாதச் செயல்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தூண்டும் காரணிகளாக இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, வாசிப்பின் மூலம் வரும் புரிதல், விழிப்புணர்வு. சிமொன் டி பிவோரிலிருந்து க்ளோரியா ஸ்டெயினம் வரை இதற்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். (க்ளோரியா ஸ்டெயினத்தின் குழந்தைப் பருவம் மோசமாக இருந்தாலும் அதற்கு அவர் தந்தையோ பிற ஆண்களோ காரணமல்ல). இரண்டாவது காரணம் அடக்குமுறை. ஒரு பெண் வன்முறைக்குட்படுத்தப்படும்போது, அடக்கு முறைக்கு ஆளாக்கப்படும்போது அதை மீறும் செயல்பாடுகளின் வழியாகப் பெண்ணியம் குறித்த புரிதல்கள் அவளுக்கு ஏற்படுகின்றன. பல சமயங்களில் பெண்கள் இப்படித்தான் பெண்ணியவாதிகளாக மாறுகிறார்கள்.
இந்த வகையில் குறிப்பிடத்தகுந்த உதாரணம் முக்தார் மாய். பாகிஸ்தானிலுள்ள மீராவாலா என்னும் குக்கிராமத்தில் பிறந்த 37 வயது முக்தார் மாய் 2002இல் அவரது கிராமப் (கட்ட) பஞ்சாயத்தாரால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். மேல் ஜாதியைச் சேர்ந்த சல்மா என்னும் 27 வயதுப் பெண்ணுடன் முக்தாரின் 12 வயதுத் தம்பி ஷாகூர் பாலியல் உறவு கொண்டான் என்பதுதான் வழக்கு. முக்தாரின் குடும்பம் எவ்வளவோ மன்றாடியும் முக்தார் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கூட்டுப் பாலியல் வல்லுறவு (gang-rape). அவரது தந்தை மற்றும் பிற உறவினர்களின் முன்னிலையிலேயே சல்மாவின் சகோதரன் அப்துல் காலிக் உள்பட நான்கு பேர் முக்தாரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கிட்டத்தட்ட நிர்வாணமாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.
இப்படிப்பட்ட தண்டனை விதிக்கப்படும் முதல் பெண்ணல்ல முக்தார். அவரது சாதியில் பல பெண்கள் இத்தண்டனையைப் பெற்றிருக்கிறார்கள். இத்தகைய தண்டனைக்குள்ளாகும் பெண்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதுதான் வழக்கம். தண்டனை விதிப்பவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் தன்னைப் பற்றி வரும் ஒரு பத்திரிகைச் செய்தி, அதன் மூலம் கிடைத்த ஆதரவு தற்கொலை முடிவுக்குக் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட முக்தாரைத் தன் முடிவை மாற்றிக்கொள்ள வைக்கிறது. இந்த அநீதியை இழைத்தவர்களுக்கு எதிராகப் போராட முடிவுசெய்கிறார். அதிலும் பல சிக்கல்கள். உதாரணத்துக்குச் சில: எழுத, படிக்கத் தெரியாத முக்தார் கொடுக்கும் வாக்குமூலத்தைக் குற்றவாளிகளுக்குச் சாதகமான ஒன்றாக எழுதுகிறார்கள் காவல் துறையினர். குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டால் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆபத்து உண்டாகும் என மிரட்டுகிறார்கள். முக்தாரின் உறுதியையும் போராட்டக் குணத்தையும் பற்றிப் பத்திரிகைகள் மூலம் கேள்விப்படும் பல தேசங்களைச் சேர்ந்த பெண்ணிய அமைப்பினர் அவரைத் தங்கள் தேசங்களுக்கு அழைத்துப் பேச வைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு அவப்பெயர் உண்டாக்குகிறார் என்று பெர்வெஸ் முஷ்ஷரப் தலைமையிலான பாக். அரசு அவரை ஒருமுறை வெளிநாடு செல்லக் கூடாது எனத் தடுத்தது. “புகழ், பணம், எளிதில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வேண்டுமென்றால் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் போதும்” என்று அவரைப் பற்றி அரசாங்க மேல்மட்டத்தில் ஒருவர் சொன்னார்.
இங்கு இன்னொரு வழக்கு பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 2005இல் ஷாசியா காலித் என்னும் மருத்துவரை அவரது வீட்டிலேயே வைத்துப் பாலியல் வல்லுறவுள்ளாக்குகிறான் ஒரு ராணுவ அதிகாரி. ஷாசியா காலித்துக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மாறாக அவர் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி குற்றவாளியல்ல என முஷ்ஷரப்பே சொல்கிறார். கடுமையான நெருக்கடிகளுக்கிடையில் ஷாசியா காலித் உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில் பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டார். முக்தாரின் தொடர்ச்சியான போராட்டமும் அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வும் பாகிஸ்தானிய சமூகத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவந்துவிடவில்லை என்றாலும் முக்தாரின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
முக்தார் இப்போதும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். தனக்குப் படிப்பறிவு இல்லாத காரணத்தால் தான் இப்படியொரு நிலை என்று உணர்ந்தவர் தனக்கு வந்த நஷ்ட ஈட்டுப் பணத்தில் மீராவாலா கிராமத்தில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 300 பேர் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்.
முக்தார் மாய் வழக்கு இன்னும் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 15ஆந் தேதி அப்பாஸ் கபோல் என்னும் காவலரை மணந்திருக்கிறார் முக்தார். முக்தாரின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது அவரது வீட்டுப் பாதுகாப்புப் பணிக்கு வந்தவர் அப்பாஸ். ஏற்கனவே திருமணம் ஆனவர். முக்தாரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்தான். அப்பாஸ் முக்தாரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது முக்தார் மறுத்திருக்கிறார். அப்பாஸ் தற்கொலைக்கு முயன்றதுடன் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். அதனால் பயந்துபோன அவரது முதல் மனைவி முக்தாரிடம் வந்து கேட்ட பிறகே திருமணம் நடந்திருக்கிறது. தவிர, திருமணத்துக்கும் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார் முக்தார். அதனடிப்படையில் அப்பாஸின் சம்பளமும் சொத்தும் முதல் மனைவிக்கே சேரும்.
இதனால் பெண்ணியவாதிகள் கடுப்பாகியிருக்கிறார்கள். பெண்ணியவாதியாக இருந்த முக்தார் இப்போது அந்த நிலையிலிருந்து வழுவிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே மணமானவரை மீண்டும் மணந்துகொண்டதன் மூலம் பல ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு ஆதர்சமாக இருந்த முக்தார் அந்தப் பீடத்திலிருந்து விழுந்துவிட்டதாக விமர்சிக்கிறார்கள்.
தனது 66 வயதுவரை திருமணம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் கொண்டிருந்த க்ளோரியா ஸ்டெயினம் திடீரென்று 2000இல் பிரபல நடிகரான கிரிஸ்டியன் பேலின் தந்தை டேவிட் பேலைத் திருமணம் செய்துகொண்டார். பேல் ஏற்கனவே இரண்டுமுறை விவாகரத்தானவர். முக்தாருக்குக் கிளம்பியது போல ஸ்டெயினத்துக்கு எதிராகவும் விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. “1960களிலிருந்து இப்போதுவரை திருமணம் என்கிற சமூக அமைப்பு பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. அப்போது போல இப்போது நான் எனது உரிமைகளை விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லை” எனச் சொல்லி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ச்சியான பெண்ணியச் செயல்பாடுகளாலும் விமர்சனங்களை முறியடித்தார்.
க்ளோரியா ஸ்டெயினம் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பு முக்தார் மாய்க்கு மறுக்கப்படுவதற்கு அவர் சார்ந்த சமூகத்தின் பின்புலம் காரணமாக இருக்கலாம்.
கட்டமைக்கப்பட்ட பெண்ணியத்தின் (Institutionalised feminism) கடினமான கூறுகளை முக்தார் என்றுமே தன்மீது திணித்துக்கொண்டதில்லை. தான் ஒரு தீவிரமான பெண்ணியவாதி அல்ல என அவரது சுயசரிதையில் சொல்கிறார். “என்னை ஊடகங்கள் அப்படி நினைத்தபோதும் நான் தீவிரப் பெண்ணியவாதி அல்ல. நான் பெண்ணியவாதியாக மாறியதற்குக் காரணம் எனது அனுபவம். அதிலிருந்து நான் மீண்டது தான் காரணம். அப்படி நடந்திருக்காவிட்டால் ஆண்கள் ஆளும் சமூகத்தில் நான் ஒரு எளிமையான பெண்ணாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பேன். ஆனால் நாம் மதிக்கப்பட வேண்டுமென்றால் அது ஆண்களை வெறுப்பதன் மூலம் நடக்காது. அவர்களை வெற்றிகொள்வதில்தான் நமது வெற்றி இருக்கிறது” என்கிறார்.
அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன் தான் செவிவழி கற்ற குர்ரானைப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் பணியைச் செய்திருக்கிறார் முக்தார். ஆனால் அதன் பின்னர் அப்படிப் பிள்ளைகள் வளருவதில்லை எனத் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
எப்படிப்பட்ட வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் முக்காடு இன்றி முக்தாரைப் பார்க்க முடியாது. இப்போதும் இஸ்லாத்தின் மீதும் குர்ரானின் மீதும் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அசாத்தியமானது. மிகத் தீவிரமான பெண்ணியவாதிகளின் பார்வையில் இவையும் பிரச்சினைகளாக இருக்க வேண்டும். இஸ்லாத்தில் நம்பிக்கையுள்ள முக்தார் இரண்டாவது மனைவியாகச் சம்மதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
திருமணம் என்கிற முடிவை எடுக்கும்போதுகூடப் பெண்ணிய நிலை நோக்கிலேயே அதை அணுகியிருக்கிறார் முக்தார். “என்னைப் பொறுத்தவரை நான் மூன்று பெண்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறேன்” என்கிறார். பின்னணி இதுதான்: முக்தார் வாழும் பகுதியில் மிகப் பிரபலமான பழக்கம் வட்ட சட்டா என்னும் பழக்கம். அதாவது தன் தங்கையை ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுக்கும் ஆண் பதிலுக்கு அவரது தங்கையைத் திருமணம் செய்வதுதான். அப்பாஸின் இரண்டு தங்கைகளை அவரது முதல் மனைவியின் அண்ணன்மார்கள் திருமணம் செய்திருக்கிறார்கள். அப்பாஸ் தன் முதல் மனைவியை விவாகரத்துச் செய்தால் பதிலுக்கு அவர் தங்கைகளை அவர் மனைவியின் அண்ணன்மார்கள் விவாகரத்துச் செய்வார்கள். தவிர கல்லும் கரையும் என்பது போலத் தான் தனக்கும் ‘அப்பாஸ்மீது காதல் உண்டானதாக’ முக்தார் சொல்கிறார்.
மேலும் அப்பாஸ் தற்கொலை உள்ளிட்ட மிரட்டல்கள் மூலம்தான் முக்தாரைப் பணிய வைத்தாரென்றாலும் அதற்கு முக்தாரை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கும்?
நமது சமூகத்திலும் திரைப்படங்களிலும் இது மிகச் சாதாரணமான விஷயம். காதல் தோல்வியால், காதல் நிராகரிப்பால் தற்கொலைக்கு முயலும் ஆண்கள் பற்றிய செய்திகள் வராத தினசரிகளே இப்போதெல்லாம் வருவதில்லை. தன்னைக் கதாநாயகியின் மீது திணித்துக்கொள்ளத் தற்கொலை போன்ற ஆயுதங்களைப் பிரயோகிப்பான். . . எந்த கதாநாயகி அந்த ஆயுதத்திற்கு விழாமல் இருந்திருக்கிறாள்? அப்படி இருந்துவிட்டால் அவள் கல்நெஞ்சம் கொண்டவளாகவும் கதாநாயகன் பரிதாபத்துக்குரியவனாகவும் கருதப்படும் அவலநிலைதான் இருக்கிறது. அப்படி முன்முடிவுகள் கொண்ட சமூகத்தில் முக்தார் மாய் போன்றவர்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?
முக்தார் பிறந்து வளர்ந்த எளிய பின்புலத்திலிருந்து பார்க்கும்போது அவரால் வேறு எந்த முடிவும் எடுத்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து மீளும் உறுதிகொண்ட முக்தார், அன்பு மற்றும் அது சார்ந்த ஆதிக்கத்திலிருந்து மீள முடியாமல் தோற்றுப் போனது அவரது தவறு அல்ல என்றே தோன்றுகிறது.
தவிர, தன்னால் இயன்றவரை இதிலும் பல விதிமீறல்களைச் செய்திருக்கிறார். அப்பாஸைவிட ஏழு வயது மூத்தவர் முக்தார். பாகிஸ்தான் போன்ற நாட்டில் இது ஒரு சாதனை. முதல் மனைவியின் உரிமைகளும் சலுகைகளும் கொஞ்சமும் பாதிக்காத வகையில் அவர் செயல்பட்டிருக்கிறார். இந்தத் திருமணத்தால் தான் நடத்தும் பள்ளிக்கூடத்துக்கும் தனது லட்சியத்துக்கும் எந்தத் தடையும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
முதல் கணவருடன் விவாகரத்து ஆன பிறகு குர்ரான் சொல்லித் தருவதிலும் சப்பாத்தி இடுவதிலும் தனது எஞ்சிய காலத்தைக் கடத்தியிருக்க வேண்டிய முக்தார் மாய், வாழ்வு அவருக்குக் கற்றுக்கொடுத்த பெண்ணியக் கருத்தியலைப் பல சமரசங்களுக்கிடையிலாவது தான் சார்ந்த சமூகத்தில் கடைபிடிப்பது தான் அவரது வெற்றி. போராட்டம், தற்கொலை என்னும் இரண்டு பாதைகள் தெரிந்தபோது தனக்கு முன்பிருந்தவர்கள் செய்தது போலத் தற்கொலை என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் கடினமானதெனினும் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் முக்தார் மாய் என்னும் பெண்ணியவாதியின் அசலான அடையாளம்.
நன்றி - காலச்சுவடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment