Monday, January 18, 2010

அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள்

- ஸ்டீஃபன் ஹாக்கிங்

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாம் வாழும் உலகம் கடந்த நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளில் மேலும் பல மாற்றங்கள் உண்டாகும். இம்மாற்றங்களை நிறுத்திவிட்டு, தூய்மையானது எளிமையானது என நினைக்கப்படும் முற்காலத்திற்கு செல்ல வேண்டும் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் கடந்தகாலம் அப்படி ஒன்றும் அலாதியானது அல்ல என்பதையே வரலாறு நமக்கு சொல்கிறது. நவீன மருத்துவ வசதிகள் இல்லாதிருந்தும், பெண்களுக்கு பிள்ளைப்பேறு ஆபத்தான ஒன்றாக இருந்தும் – அதிகாரம் பொருந்திய சிறிய சதவிகித மக்களுக்கு கடந்த காலம் பிரச்சனைகள் அதிகமற்றதாகவே இருந்தது. ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை கரடுமுரடாக, அற்பாயுசுடன் முடிந்தது.

எப்படியும், நாம் விரும்பினாலும், காலத்தை பின்னகர்த்தி முற்காலத்திற்கு செல்வது சாத்தியம் இல்லை. சேகரித்த அறிவையும் தொழிற்நுட்பத்தையும் மறந்துவிட முடியாது. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் வளர்ச்சிகளை தடுக்கவும் முடியாது. ஆராய்ச்சிக்கு என செலவிடும் பணத்தை அரசு முழுமையாக நிறுத்தினாலும் (தற்போதைய அரசு இதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறது) சந்தை போட்டிச் சூழல் தொழிற்நுட்ப வளர்ச்சிகளை உண்டாக்கும். மேலும், தேடல் கொண்ட உள்ளங்கள் அடிப்படை அறிவியல் குறித்து சிந்தித்துக்கொண்டு தான் இருக்கும், சம்பளம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். வளர்ச்சியை தடுப்பதற்கான ஒரே வழி உலகம் தழுவிய அடக்குமுறை அரசு ஒன்று புதியவை அனைத்தையும் ஒடுக்குவது தான். ஆனால் மனித முனைப்பும் அறிவும் இதை வென்றுவிடும். இது போன்றதொரு அடக்குமுறை வளர்ச்சி வேகத்தை குறைக்குமே அன்றி தடுக்காது.

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சிகள் நமது உலகில் மாற்றங்கள் உண்டாக்குவதை தடுக்க முடியாது என்பதை ஒத்துக்கொள்வோமேயானால், அம்மாற்றங்கள் சரியான திசையில் செல்ல நம்மாலான முயற்சிகளை செய்யலாம். ஒரு மக்களாட்சி சமூகத்தில் இது நிகழ, அறிவியல் குறித்த அடிப்படை புரிதல்கள் மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். இப்புரிதல், அறிவியல் குறித்த முடிவுகளை வல்லுனர்கள் கைகளில் விடாமல் மக்களே எடுக்க உதவும். அறிவியல் குறித்த மக்களின் தற்போதைய மனப்போக்கு விருப்பும் வெருப்பும் கலந்த ஒன்றாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் உண்டாகும் வாழ்நிலையின் சீரான வளர்ச்சியை எதிர்ப்பாக்கும் அதே வேளையில், அறிவியல் குறித்த புரியாமையினால் விளையும் நம்பிக்கையின்மையும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நம்பிக்கையின்மை, கார்ட்டூன்களில் வரும், ஃப்ராங்கிஸ்டைனை உருவாக்க இரவு பகலாக உழைக்கும் பித்தேறிய விஞ்ஞானியின் வாயிலாக வெளிப்படுகிறது. பசுமைக் கட்சிகளுக்கான ஆதரவிற்கான முக்கிய காரணியாக இந்த நம்பிக்கையின்மையே இருக்கிறது. அதே சமயம் அறிவியல் குறித்த ஆர்வமும் மக்களுக்கு இருந்துகொண்டு தான் இருக்கிறது, குறிப்பாக வானவியல் போன்ற துறைகளில். காஸ்மோஸ் (Cosmos) போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு பெருகி வரும் பார்வையாளர்க் கூட்டமும், அறிவியல் புனைவுகளுக்கு பெருகிவரும் முக்கியத்துவமும் இதை நிரூபிக்கின்றன.

இந்த ஆர்வத்தை எவ்வாறு பயன்படுத்தி மக்களுக்கு அமில மழை, கண்ணாடி கூண்டு அனல் விளைவு பசுமைக்குடில் விளைவு( greenhouse effect), அணு ஆயுதம், மரபுப் பொறியியல் (genetic engineering) போன்ற முக்கிய அறிவியல் நிகழ்வுகள் குறித்த சரியான முடிவுகளை எடுப்பதற்கான அறிவியல் புரிதலை ஏற்படுத்தலாம்? நிச்சயமாக இது பள்ளிகளில் இருந்தே தொடங்கப்படவேண்டும். ஆனால் பள்ளிகளில் அறிவியல் வரண்ட , ஆர்வமூட்டாத வகையிலேயே புகட்டப்படுகிறது. பிள்ளைகளும், நாம் வாழும் உலகில் அவற்றின் பயன்பாடு குறித்து எந்த புரிதலும் இன்றி, மதிப்பெண்களுக்காகவே படிக்கின்றனர். மேலும், அறிவியல் பெரும்பாலும் சமன்பாடுகளைக்கொண்டே சொல்லித்தரப்படுகிறது. கணித கருத்துக்களை விளக்க சமன்பாடுகள் சரியான முறை தான் என்றாலும் அவை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தவே செய்கிறது. சமீபத்தில் நான் ஓர் பிரபல புத்தகத்தை எழுதுகையில், நான் பயன்படுத்தும் ஒவ்வொரு சமன்பாடும் விற்பனையை பாதியாக குறைக்கும் என அறிவுருத்தப்பட்டேன். ஒரே ஒரு சமன்பாட்டை பயன்படுத்தினேன், ஐன்ஸ்டைனின் பிரபல சமன்பாடான E = mc2. ஒருவேளை அது இல்லாதிருந்தால் விற்பனை இரட்டிப்பாகி இருக்கலாம்.

விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்களது கருத்துக்களை சமன்பாடுகளாக வெளிப்படுத்துகின்றனர், ஏனெனில் அவர்களுக்கு எண்ணிக்கை ரீதியில் துல்லியமான விடை தேவைப்படுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அறிவியல் விடயங்களில் கருத்தாக்க ரீதியிலான புரிதலே போதுமானது. இதற்கு, சொற்களும் விவரண படங்களுமே போதுமானது, சமன்பாடுகள் தேவையில்லை.


பள்ளியில் கற்பிக்கப்படும் அறிவியல் மக்களுக்கு ஓர் அடிப்படை கட்டுமானத்தை அளிக்கிறது. தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி விகிதத்தை கணக்கில் கொள்ளவேண்டும். பள்ளி, பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேருவதற்குள் பல புதிய முன்னேற்றங்கள் நிகழ்துவிடுகின்றன. எனக்கு பள்ளியில் மூலக்கூறு உயிரியலை (molecular biology) குறித்தோ, டிரான்ஸிஸ்டர்கள் குறித்தோ சொல்லித்தரப்படவில்லை, ஆனால் மரபுப் பொறியியலும், கணினிகளும் நமது எதிர்கால வாழ்வை முற்றிலுமாய் மாற்றப்போகின்றன. அறிவியல் பற்றிய பிரபல புத்தகங்களும் பத்திரிக்கை கட்டுரைகளும் புதிய முன்னேற்றங்களைக் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறலாம். ஆனால் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகமும் மக்கள்தொகையில் ஓர் சிறு சதவிகிதத்தினரையே சென்றடைகிறது. மிகப் பரவலாக மக்களை சென்றடைய தொலைக்காட்சி தான் சிறந்த ஊடகம். தொலைக்காட்சிகளில் அறிவியல் குறித்த சில நல்ல நிகழ்ச்சிகள் உள்ளன. ஆனால் அவை அறிவியல் அற்புதங்களை, விளக்கங்களோ அறிவியல் கருத்தாங்களில் இந்நிகழ்வுகளில் பங்கு குறித்தோ ஏதும் கூறாமல், ஒரு மந்திரத்தை போல காட்டுகின்றன. பொழுதுபோக்கு மட்டுமன்றி மக்களுக்கு கற்பிக்கும் கடமையும் தங்களுக்கு இருப்பதை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்கள் உணரவேண்டும்.

மக்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அறிவியல் சம்மந்தப்பட்ட விவகாரங்கள் எவை?

மிக முக்கியமானது அணு ஆயுத விவகாரம். மற்ற பிரச்சனைகளின் – உணவு கையிருப்பு, கண்ணாடி கூண்டு அனல் விளைவு (greenhouse effect) போன்றவற்றின் – விளைவுகள் அதிக கால அளவில் தெரிய வரும். ஆனால் அணு ஆயுதப் போர் சில நாட்களுக்குள் மனித இனத்தையே அழித்துவிடும் வல்லமைக்கொண்டது.

No comments:

Post a Comment