Sunday, April 25, 2010

சூஃபி இஸ்லாம்
சூஃபி இஸ்லாம்
எச்.முஜீப் ரஹ்மான்

சூஃபிசம் அல்லது சூஃபிவழி என்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானதா இல்லை இஸ்லாத்துடன் இணைந்ததா என்பது பற்றிய பல விவாதங்கள் உலகெங்கும் இன்றும் இருக்கிறது. இந்து மதத்திலிருந்துதான் சூஃபிசம் பிறந்தது என்பதுதான் இந்த வாதத்தின் அடிப்படை. இதனால்கூட சூஃபிஸத்தை எல்லாரும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருப்பதாக தோன்றுகிறது.சூபியிசம் இஸ்லாத்தின் விரோதமாக பாவிக்கப்படும் வகாபிய பேரினவாத சூட்சுமங்கள் நிறைய மலிந்திருக்கையில் சூபி இஸ்லாம் குறித்து பேசுவது சரியான ஒன்றாகும்.
சூஃபி-வழி என்பது ஒரு மகானின் கல்லறையில் செய்யப்படும் வழிபாட்டு முறைகளென்று ஒரு பொதுவான கருத்தில் வாதம் இருக்கிறது இது தவறா சரியா என்பதை விவாதிப்பதைவிட இறைவனை அடையும் ஒரு வழிகளில் இதுவும் ஒன்றுதான் என்கிற கண்ணோட்டத்தில் எந்தமுறையும் தவறானதில்லை என்பது என் கருத்து. சூஃபிசம் விவாதங்கள் எப்படி இருந்தாலும் சூஃபி இசையை அனைவரும் ரசிக்க முடியும்.
சூஃபி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை சுல்ஹ்-இ-குல் என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் 'அனைத்துடனும் சமாதானம் ' என்பதாகும். பெர்ஷிய மொழியில் குரானென மதிக்கப்படும் மாஸ்னவி என்ற புத்தகத்தை எழுதிய மெளலானா ருமி தன்னுடைய கவிதைகளில் ஒன்றில் ஒற்றுமையை ஏற்படுத்த வந்ததாகவும், பிரிவினையை ஏற்படுத்த வரவில்லை என்றும் எழுதுகிறார். ஒருமை அல்லது இணைப்பு (வஸல்) என்பதே சூஃபி கவிதைகளில் அடிப்படை கருத்தாக்கம்.
இன்னொரு மாபெரும் சூஃபி துறவியான முஹியுத்தின் இபின்-ஈ-அராபி பேசிய புகழ்பெற்ற கொள்கையான 'இருப்பின் ஒருமை ' (unity of being அல்லது அத்வைதம் வாஹ்தட்-அல்-வுஜ்உத் ) பல வழிகளில் புரட்சிகரமானது. இந்தக் கொள்கையின் முக்கியமான அங்கம், உண்மையான பொருள் என்பது ஒன்றுதான், அதாவது கடவுள் மட்டுமே உண்மையான பொருள். நாம் எல்லோரும் அதன் வெளிப்பாடுகள் (manifestations). உலகின் எல்லா மனிதர்களும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும், கடவுளின் படைப்புக்களே என்பதையும், அவைகள் எல்லாமும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறது. இந்தக் கொள்கை மனிதர்களைப் பிரிக்கும் எல்லா சுவர்களையும், சமூக வெறுப்புக்களையும் இடித்துத் தள்ளுகிறது.
சூஃபி இஸ்லாம் அன்பு மயமானது. மசூதிகளில் பேசப்படும் இஸ்லாம் சட்டப்பூர்வமானது, (ஷாரியா என்ற இஸ்லாமிய சட்டத்தை முக்கியப்படுத்தியது. இதுவே முக்கியமான வித்தியாசம்). மதத்தத்துவவாதிகளால் ( theologians) ஷாரியா சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்பவர்களை மன்னிக்க முடிவதில்லை. ஆனால், சூஃபி இஸ்லாம் அன்பு மயமானதென்பதால், ஷாரியாவை எல்லாம் முக்கியமாகக் கருதுவதில்லை. அது அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மானுடம் மீது அன்பு; கடவுளின் மீது அன்பு. என்னுடைய இருதயத்தின் மையம் அன்பில் இருக்கிறது, என் இருதயமே மசூதி, கோவிலல், மாதாகோவில், யூதக்கோவில் என்று முஹியுதின் இபின் அராபி சொல்வதில் ஆச்சரியமில்லை.
இந்தியாவில் இருக்கும் எல்லா சூஃபிகளும் சிஸ்டி கற்பித்த டஸாவஃப் (சூஃபியிஸம்) இனை பின்பற்றுகிறார்கள். இது முஹியுதின் இபின் அராபி அவர்களது வாஹ்தட்-அல்-வுஜ்உத் கொள்கையின் 'இருப்பின் ஒருமை ' யின் படி, கடவுளின் பார்வையில், ஒரு மனிதனின் கடவுள் நம்பிக்கையோ, அவனது கடவுள் நம்பிக்கையின்மையோ எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. சூஃபிகளுக்கும், இஸ்லாமிய மதத்தத்துவவாதிகளுக்கும் உள்ள இன்னொரு வித்தியாசம், சூஃபிகள் பிராந்திய மொழிக்கும், பிராந்திய கலாச்சாரத்துக்கும், பிராந்திய பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்;ளிஸ்லமிய மதத்தத்துவவாதிகள் 'தூய இஸ்லாம் ' என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, பிராந்திய கலாச்சாரத்துக்குள் முஸ்லீம்கள் இணைவதை எதிர்த்தார்கள்.
11ஆம் நூற்றாண்டு பஞ்சாப் மாநிலத்தின் சிறந்த சூஃபியான பாபா ஃபாரித் அவர்கள் பெர்ஷிய மொழியிலும், அராபிய மொழியிலும் பாண்டித்யம் பெற்றவராக இருந்தாலும், பஞ்சாபி மொழியிலேயே தன் கவிதைகளை எழுதினார். சொல்லப்போனால், அவர்தான் பஞ்சாபி கவிதையின் பிதாமகர். குரு நானக் தன்னுடைய ஆதி கிரந்த் சாஹிப்பில் பாபா பாரித் அவர்களது 112 கவிதைகளை சேர்த்திருக்கிறார். சீக்கியர்கள் பாபா பரித் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறார்கள். சிஸ்டி கற்பித்த சூஃபி வழியில் வந்த மிகவும் மூத்த துறவிகளில் ஒருவர் பாபா பாரித்.
இந்த தாராளவாத பள்ளியின் முக்கியமான இன்னொரு சூஃபி துறவி, இவரது சீடரான நிஜாமுதின் அவுலியா. இவர் டெல்லியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவரைப்பற்றிய ஒரு புகழ்பெற்ற கதை இன்னமும் சொல்லப்படுகிறது. இவர் ஒருமுறை யமுனை நதிக்கரையில் குளித்துக்கொண்டிருந்த சில இந்துப்பெண்கள் சூரியனைக் கும்பிடுவதைப் பார்த்தார். அவர் தன்னுடைய புகழ்பெற்ற சீடரான குஸ்ரோவிடம், இந்தப்பெண்களும் கடவுளை தங்களுடைய வழியில் கும்பிடுகிறார்கள் என்று கூறி, குரானிலிருந்து ஒரு வசனத்தை ஓதினார். 'ஒவ்வொருவரும் அவர்கள் திரும்ப ஒரு திசையைக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, நல்ல வேலை செய்வதில் ஒருவரோடொருவர் போட்டியிடுங்கள் ' (2:148) ( 'And every one has a direction to which he turns (himself), so vie with one another in good works '. (2:148) )
குரானின் உண்மையான செய்தி 'நல்ல வேலைகளைச் செய்வதில் ஒருவரோடொருவர் போட்டியிடுங்கள் ', சடங்குகளைப் பற்றி சண்டை போடாதீர்கள் என்பதுதான். இந்த செய்தியே சூஃபி துறவிகளால் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டது. அதனாலேயே, லட்சக்கணக்கான மக்கள் மத சார்புகளைத் தாண்டி, இந்த சூஃபி கோவில்களில் வந்து அவர்கள்க்கு மரியாதை செய்கிறார்கள். க்வாஜா மொயினுத்தின் சிஸ்டி அவர்களின் புகழ் பெற்ற சீடரான ஹாமிதுத்தின் நகோரி, தன்னைச் சுற்றி இருப்பவர்களை மதிக்கும் வண்ணம் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவராக ஆனார். அவர் ஒரு பசுவை வளர்த்துவந்தார். ஒரு இந்து விவசாயியை போலவே அவர் நிலத்தை உழுதார். தீவிரமான சைவ உணவுக்காரராக இருந்தார்.
க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி இந்தியாவின் புகழ்பெற்ற சூஃபி துறவி. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இந்துக்களும், முஸ்லீம்களும், பார்ஸிகளும் கிரிஸ்துவர்களும் அவரது கோவிலுக்கு வருகிறார்கள். சிஸ்டி அவர்கள் தன்னைச் சுற்றி இருந்தவர்களின் கலாச்சார பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொண்டார். க்வாஜா அவர்களது கோவிலின் மடைப்பள்ளி எப்போதும் சைவ உணவை மட்டுமே சமைக்கிறது. ஏனெனில் அப்போதுதான், ஜாதி மத சார்பின்றி அனைவரும் அங்கு உணவருந்த முடியும் என்பதே காரணம்.. இந்த சூஃபி துறவிகள் அப்போதைய அரசர்களிடமிருந்து விலகியே இருந்தார்கள்.
நிஜாமுதின் அவுலியா தன்னுடைய வாழ்நாளில் ஐந்து சுல்தான்களைப் பார்த்துவிட்டார். இருப்பினும், அவர் எந்த ஒரு சுல்தானின் தர்பாருக்கும் செல்ல மறுத்துவிட்டார். அவரிடம் தெரிவிக்காமல், அவர் இருக்கும் இடத்துக்கு ஜலாலுதீன் கால்ஜி வந்து அவரைப்பார்க்க விரும்பியபோது, நிஜாமுதீன் அவுலியாவின் சீடரான குஸ்ரோ சென்று அவுலியாவிடம் இதனை தெரிவித்தார். சுல்தானைப் பார்க்க விருப்பமின்றி இன்னொரு வாசல் வழியாக அவுலியா வெளியே சென்றுவிட்டார். உர்து கவிஞரான இக்பால் இந்தக் குணத்தை ஷான்-ஈ-தர்வேஷி என்று அழைக்கிறார். (அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றிய கவலையின்மை)
இந்த சூஃபிகள், மதபேதம் , ஜாதிபேதம் இன்றி எல்லோருடனும் கலந்துறவாடினார்கள். சமூகத்தில் மரியாதை கிட்டாத, தாழ்த்தப் பட்ட சாதியினர் இதனாலேயே இவர்களைச் சுற்றி குழுமினார்கள். இவர்களிடம் அவர்கள் மனிதர்களுக்கு உரிய மரியாதையும், துயருற்ற உள்மனத்துக்கான ஆறுதலையும் பெற்றார்கள்.
'Those who disbelieve in Allah and His messengers and desire to make a distinction between Allah and His messengers and say: we believe in some and disbelieve in others; and desire to take a course in between — these are truly unbelievers '. (4:150-51) என்று குரான் சொல்வதை சூஃபிகள் உண்மையுடன் பின்பற்றினார்கள். சூஃபி துறவிகள் அல்லாவின் ஒருதிறைத்தூதருக்கும் இன்னொரு இறைத்தூதருக்கும் எந்த வித வித்தியாசமும் பார்க்காமல் மரியாதை செலுத்தினார்கள். அல்லா இந்தியாவுக்கும் இறைத்தூதர்களை அனுப்பினார் என்று சூஃபிகள் நம்புகிறார்கள். இந்த சூஃபிகள் உண்மையிலேயே அமைதிக்கும் சமாதானத்துக்கும் வழி வகுக்கும் பெரியோர்கள்.
சுபி கதையொன்றை பார்ப்போம்.
இரு மகன்களுக்குத் தந்தையான ஒருவர், தீடிரென காலமானார். அவர் விட்டுச் சென்றிருந்த சொத்துக்களை பங்கிட்டுகொள்வதில் சகோதரர்களுக்கிடையே சண்டை முளைத்தது. குறிப்பாக அண்ணன்,தம்பிக்கு குறைவான பங்கைக் கொடுத்து தான் அதிக ஆதாயம் அடைய நினைத்தான். அப்போது அந்த ஊரில் தங்கியிருந்த சூஃபி ஞானியிடம் சென்று தம்பி முறையிட்டான். ஊர் மக்கள் மத்தியில் அவர்கள் இருவரிடையேயும் சமரசம் செய்து வைக்க முன் வந்தார் ஞானி.
மூத்தவனிடம் "ஏன் நீ இவ்வாறு செய்கிறாய்..?" என்று கேட்டார். அவனோ "சாகும் தருவாயில்,எனக்கு பிடித்ததை தம்பிக்கு கொடுக்கச் சொல்லி தந்தையார் என்னிடமிருந்து வாக்கு பெற்றார்" என்றான். "சரி, நீ தம்பிக்கு எதையேல்லாம் கொடுக்கப் போகிறாய்?" என்று ஞானி கேட்டபோது, ஒரு சிறு பட்டியலை அவரிடம் காட்டினான் அண்ணன்.

"மீதியேல்லாம்?"
"எனக்கு'
"நீ எடுத்துக் கொண்ட இதெல்லாம் உனக்கு மிகவும் பிடித்ததா?'
"ஆமாம் அதனால்தான் எடுத்துகொண்டேன்."
"ஆனால் உனக்கு பிடித்ததை உன் தம்பிக்கு கொடுக்க வேண்டும் என்றூ உன் தகப்பனார் சொன்னதாக நீதானே சொன்னாய்? அதனால் உனக்கு படித்ததாக நீ எடுத்துக்கொண்டிருக்கும் இதையெல்லாம் நீ உன் தம்பிக்குத்தான் கொடுக்க வேண்டும். அவனுக்கு கொடுத்திருக்கும் பங்கை நீ எடுத்துக்கொள்ள வேண்டும். உன் வாதப்படியே அதுதானே சரி?" ஞானியின் இந்த கேள்விக்கு அண்ணனால் பதில் சொல்ல முடியவில்லை. தலை குனிந்துக் கொண்டான்.

உடனே தம்பி "ஐயா, எனக்கு இவ்வளவு பங்கும் வேண்டாம். எனக்கும் அண்ணனுக்கு சமமாகவே பிரித்துக்கொடுக்க ஏற்பாடுகள் செய்துகொடுங்கள், போதும்." என்று ஞானியிடம் சொன்னான். அண்ணன் இன்னும் கூனிக் குறுகிப் போனான்.