Friday, October 29, 2010

தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி


தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி
- அ.ராமசாமி
தமிழ்ச் சிந்தனைத்தளம் -அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியம், போராட்டம் - என அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அது வரை பிராமணர்கள்/ பிராமணர் அல்லாதார் எனப்பிளவுபடுத்திப் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் இன்று தலித்/ தலித் அல்லாதார் என எதிர்வு களை நிறுத்தி விவாதிக்கவும் விளக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனக்கோருகிறது இந்த நெருக்கடி. இந்த நெருக்கடியின் விதைகள் தூவப்பட்டு பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டிய தலித் எழுச்சியின் விதைகள் தான் இன்றுள்ள நெருக்கடிக்கான காரணங்கள். பிராமணரல்லாத இடைநிலைச் சாதி உயிரி ஒன்று இந்த நெருக்கடியை எப்படி எதிர் கொள்கிறது என்பதில் தான் அதன் தன்னிலையும் நிலைப்பாடும் அடங்கியிருக்கிறது எனக் கருதிட வேண்டும்.
ஞாபக அடுக்குகளிலிருந்து இரண்டு செய்திகள்: செய்தி ஒன்று.
நான், 1989-ல் பணி நிமித்தமாகப் புதுவைக்கு வந்து ஓராண்டுக்குப்பின் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவை அமைத்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தவும் செய்தோம். புதுவையிலும்,அதனைச்சுற்றியுள்ள சில கிராமங்களிலும் சுற்றுச் சூழல் மற்றும் சமூக அவலங்கள் பற்றிய வீதி நாடகங்களை நடத்தி வந்த கூட்டுக்குரல் ,1990-களில் தலித் இயக்கம், கலை இலக்கியத் துறைகளில் வீச்சைத் தொடங்கும் போது அதனுடன் இணைந்து வீதி நாடகங்களை நடத்தத் தொடங்கியது. வெண்மணி முதல் சுண்டூர் வரை, நியாயங்கள், வார்த்தை மிருகம், தண்ணீர் முதலான தலித் பிரச்சினைகளை மையமிட்ட நாடகங்களை அரங்கேற்றவும் செய்தோம். புதுவையில் மட்டுமல்லாமல் நெய்வேலி, கடலூர்,பண்ருட்டி போன்ற ஊர்களில் நடந்த தலித் கலை விழாக்களிலும் பின்னர் மதுரையில் நடந்த தலித் கலைவிழாவிலும் இரண்டு முறை நாடகங்களை அரங்கேற்றினோம்..அந்தக் கூட்டுக்குரல் 1996-க்குப் பின்,- 'தலித் இலக்கியங்களை தலித்துகள் தான் எழுதவேண்டும்' என்ற விவாதம் ஒரு முடிவுக்கு வந்தபின்பு- தலித் நாடகம் எதையும் செய்யவில்லை. அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டதற்கு இந்தக் கருத்தியலை அப்படியே ஒத்துக் கொண்டது மட்டும் தான் காரணம் என்று இப்பொழுது நான் சொன்னால் முழுமையும் உண்மையாக இருக்காது. ஆனால் அதுவும் ஒரு காரணம்தான்.
அந்த நேரத்தில் தலித் நாடக முயற்சிகளில் ஈடுபட்ட நண்பரும் நாடகத்துறையின் தலைவருமான முனைவர் கே.ஏ.குணசேகரன், எனது மாணவியான முனைவர் மு.ஜீவா ஆகியோரின் வாய்ப்புகள் என்னால் பறிபோவதாக அவர்கள் நினைத்ததும் உண்டு. அவர்களது நினைப்பு தவறானது அல்ல. நானும், ரவிக்குமாரும் நண்பர்கள். எங்களை நாங்கள் இடதுசாரிகளாக உணர்ந்துகொண்ட நிலையில் தலித் உணர்வுகள் உருண்டு திரள்வதற்கு முன்பே சேர்ந்து சில காரியங்கள் செய்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே தலித் அலையிலும் பங்கெடுக்கிறோம். நண்பர் ரவிக்குமாரே பலநேரங்களில் தலித் கலை விழாக்களைத் திட்டமிடும் மையமாக இருந்தார். அந்த வகையில் அவர் முதலில் கேட்பது என்னைத்தான். நானும் நாடகத்தயாரிப்புச் செலவுகளைப் பற்றியெல்லாம் விவாதிக்காமல் சரியென்று ஒத்துக் கொள்வதுண்டு. என்னுடன் கூட்டுக்குரலில் இணைந்து பணியாற்றிய அருணன், கோமதி, பாலசரவணன்,வேலாயுதம், பெருமாள், பூபாலன் போன்ற நண்பர்களும் மறுப்புச் சொல்ல மாட்டார்கள். காரணம் இவர்களில் பெரும்பாலோர் இடதுசாரிச் சிந்தனையின்பாலும் நவீனத்துவ வாழ்க்கை முறையின்பாலும் நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாக இருந்தது என்பதுதான்.ஆனால் அவர்கள் யாரும் பிறப்பு காரணமாக தீண்டாமையை அனுபவித்த தலித்துக்கள் இல்லை.
"நான் பலதடவை என்னையே நான் கேட்டுக்கொண்டதுண்டு; நீ ஏன் தலித் நாடக முயற்சிகளில் ஈடுபடுகிறாய்.."என்று..? அந்தக் கேள்விகளுக்கு ஊடாக, "ஒரு தலித் தனக்கான நாடகத்தை ரத்தமும் சதையுமாய் செய்து மேடையேற்றும் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறேனோ" என்று நினைத்ததும் உண்டு. அந்த நினைப்பு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலித் நாடக முயற்சிகளிலிருந்து விலகச் செய்தது. நாடக இயக்கங்களைக் கட்டுவதிலிருந்து மட்டுமல்லாமல் நாடகத்துறைச் செயல்பாடுகளிலிருந்தும் விலகி, எழுதுவதுடன் நிறுத்திக் கொள்வது என்று திருநெல்வேலிக்குப் போய் துறையையும் மாற்றிக்கொண்டு விட்டேன். நாடகத்துறையிலிருந்து தமிழியல் துறையை நோக்கிய எனது விலகலைப் போலவேதான் மற்றவர்களும் விலகினார்கள் என்று சொல்வதற் கில்லை. வெவ்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.
செய்தி இரண்டு.
புதுவையிலிருந்த காலங்களில் நடந்த இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் கவிஞர் பழமலய்யைச் சந்தித்திருக்கிறேன். தீவிரமாக அவர் கவிதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்த நேரம். பத்திரிகைகளும் அவர் கவிதைகள் இடம்பெறுவதை விரும்பிய காலகட்டம் அது.அவரும் புதுவையில் நடக்கும் கூட்டங்களுக்குத் தவறாது வருவார். அவர் வருவதை முதலில் பார்ப்பவர், வேடிக்கையாக 'இலக்கியத்தாசில்தார் வருகிறார்' என்று சொல்வார். எல்லோருடைய சாதியையும் தெரிந்து கொள்வதில் அவர் ஆர்வமாக இருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம். 'ரகசியமாகத் தெரிந்து கொள்ள முயல்வதைவிட வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள முயல்வது தவறில்லை' என்ற அவரது வாதத்தில் இருக்கும் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. தன்னை தலித் கவிஞராக நினைத்துக் கொள்ளத் தொடங்கிய பழமலய் பின்னர் தலித்தல்லாத தலித் ஆதரவுக் கவிஞராக ஒதுங்கிக் கொண்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது அவரது நிலைப்பாடுகள் என்ன..? என்று எனக்குத்தெரியாது. ஆனால் வன்னிய அறிவுஜீவிகள் அடங்கிய கருத்துப் பட்டறையில் அவர் கலந்து கொண்டார் என்றும், அவர்தான் பொறுப்பாக இருந்து அப்பட்டறையை நடத்தினார் என்றும் திருநெல்வேலிப் பக்கம் செய்தி மிதந்துவந்தது. முதலில் கொஞ்சம் அதிர்ந்து போனேன்.பிறகு அதுவும் நல்லதுக்குத்தான் என்று தேற்றிக்கொண்டேன்.வன்னிய கலை இலக்கியவாதிகள் மட்டுமல்ல நாயக்க எழுத்தாளர்கள், தேவரினப் படைப்பாளிகள், கவுண்டர் கலைஞர்கள், பிள்ளைமார்கள் கவிஞர்கள், நாடார் அறிவுஜீவிகள் என ஒன்றிணைவதும் பட்டறைகள் நடத்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைத் தடுக்கவும் முடியாது என்பதை நான் அறிவேன்.காரணம் அவர்கள் முன்னுள்ள அச்சமும் பயமும்தான் என்பதுகூடப் புரியக் கூடியதுதான். அச்சத்தையும் பயத்தையும் உண்டு பண்ணியதில் தலித் எழுச்சிக்கும் பங்கு இருக்கிறது.
நெருக்கடியின் விளைவுகள்
இப்படிப் பலரையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள தலித் எழுச்சி, தலித் அல்லாத அறிவுஜீவிகளை- தாங்களும் தலித் இயக்கங்களுடன் இருக்கவேண்டும்; தலித் இலக்கியம் படைக்கவேண்டும் ; தலித் விடுதலையில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பிய இடதுசாரி உணர்வுகொண்ட கலை இலக்கியவாதிகளை- உங்களுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லி ஒதுங்கச்செய்துவிட்டது. அதனுடன் அண்மைக்காலங்களில் தலித் சிந்தனையாளர்கள், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சிந்தனைகள் மீதும் அவர் நடத்திய போராட்டங்கள் மீதும் விமரிசனங்களை எழுப்பி அவரை ஒரு பிராமணரல்லாத இடைநிலைச்சாதிகளின் நலன்விரும்பி எனக்கூறியபோது இடதுசாரிகளை மட்டுமல்லாமல் 'தமிழால் ஐக்கியம்' பற்றிப்பேசி வந்த தமிழ்த்தேசியவாதிகளையும் ஒதுங்கிக் கொள்ளச் செய்து விட்டது. இத்தகைய ஒதுங்குதல்களும் ஒதுக்குதல்களும் அவசியமானவைகள் தானா என்று திரும்பவும் நிதானமாக யோசிக்கவேண்டும்; விவாதிக்கவேண்டும்; முடிவுகள் எடுக்கவேண்டும். அப்படி நடக்காத நிலையில் ஏற்படும் பின்விளைவுகள் மிகமோசமானவைகளாக இருக்கக் கூடும் என்பதற்கான அடையாளங்கள் வெளிப்படத் தொடங்கிவிட்டன.
தலித் எழுச்சியும், மதவாத அரசியலும் தமிழ்நாட்டின் நடுநிலையான அறிவுஜீவிகளை- சாதி, மதங்களைக் கடக்கும் பயணத்தில் இருந்ததாக நம்பிய அறிவுஜீவி அல்லது கலை இலக்கியவாதி எனக் கருதிக் கொண்டிருந்த பலரை-அவரவர் சாதியடையாளங்களைத் தேடும் அறிவுஜீவிகளாகவும் மாற்றியுள்ளன. மண்ணின் மணம், பாரம்பரியப்பற்று, பண்பாட்டின் வேர்களைத்தேடுதல், பெருநெறிக் கெதிராக சிறுநெறிகளை முன்நிறுத்துதல் எனப்பேசித்திரும்பவும் சாதி அடுக்குகளில் மனதை அலையவிடும் நிலமானிய காலத்துச் சிந்தனைகளுக்குள் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அதன் வெளிப்பாடுகளாக ஒவ்வொரு இடைநிலைச் சாதிகளின் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் தனித்துப்பேசுவதும் ஒன்றிணைவதும் இணக்கமாகச் செயல் படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இணக்கத்தில் வணிக எழுத்து, வெகுமக்கள் எழுத்து, பிற்போக்கு எழுத்து என்ற சொல்லாடல்கள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அவைகளுக்கெதிராக இருந்த மனோபாவங்கள் துடைக்கப்படுகின்றன. எல்லாமே எழுத்துக்கள்தான் ; எல்லாமே பிரதிகள்தான் என்ற பின் அமைப்பியல் வாதச் சிந்தனைகளை இதில் பொருத்திப் பார்த்து அவற்றையும் நேர்மறை அம்சமாகக்கருதுவது சரியா...? என்று மட்டும்தான் இப்பொழுது கேட்கத் தோன்றுகிறது. இல்லை; இல்லை, இவையெல்லாம் பிராமணியத்திற்கெதிரான செயல்பாடு என்று கருதிக்கொண்டே பிராமணியத்தின் வலைக்குள் அகப்படுதல் என்றுகூற இன்னும் சில காலங்கள் ஆகலாம்.
இடைநிலைச்சாதி இலக்கியவாதிகள் தங்களுக்குள் ஒன்றிணைவதும் இணக்கமாகச் செயல்படுவதும் முற்றிலும் தலித் விடுதலைக்கெதிரான பயணத்தின் தொடக்கம் என்று கருத வேண்டியதில்லை. .இருக்கின்ற வேறுபாடுகளை மட்டுமே தொடர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கும்போது அதன் விளைவுகள் எதிர்மறையாக அமையும் ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நிலைமைகளின் நடப்புஎதார்த்தம்கூட அவ்வாறுதான் இருக்கின்றன.இந்த நெருக்கடிகளைத் தவிர்க்க என்ன செய்வது என்று யோசிக்கவேண்டிய கட்டாயம் இருதரப்பினர் முன்னேயும் இருக்கிறது. இதில் யார் விட்டுக்கொடுப்பது..? யார் சமரசம் செய்துகொள்ள வேண்டும்..? என்ற பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. தங்களுக்குப் பெரிய இழப்புக்கள் எதுவும் இல்லை எனக்கருதும் இடைநிலைச்சாதி எழுத்தாளர்கள் ஒருதலைப்பட்சமாகத் தலித் எழுத்தாளர்கள் தான் விட்டுத்தரவேண்டும் என்றும், முன்வைக்கும் விமரிசனங்களை விட்டுவிட வேண்டும் என்றும் நினைப்பது தெளிவாகவே புரிகிறது. இதுவரைத்தீவிரமாகத் தலித் இலக்கியம், தலித் சிந்தனை,தலித் விடுதலை எனப்பேசி வந்த, ஆதரித்துவந்த தலித் அல்லாதவர்கள்,' அது அவர்கள் பிரச்சினை ; அவர்களே பார்த்துக் கொள்வார்கள்' என ஒதுங்கத் தொடங்கி விட்டதன் வெளிப்பாடு இதனைத்தான் காட்டுகின்றன. இப்படி ஒதுங்கிக் கொள்வது தலித்துக்களைப் பொறுத்தவரையில் ஓரளவுக்கு நல்லதுதான். ஆனால் தலித் அல்லாதவர்களைப் பொறுத்த வரையில் நல்லதல்ல என்று உறுதியாகச்சொல்லமுடியும்.
ஏற்புடையவைகள் தானா இந்தக்காரணங்கள்:
விட்டுக்கொடுத்தல், சமரசம் எனப்பேசி-தலித் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் இடைநிலைச் சாதி அரசியலான பிராமணரல்லாதார் அரசியல் மீதும் அதன் தலைவர்கள் மீதும் அதன் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மீதும் முன்வைக்கும் விமரிசனங்களைக்கைவிட வேண்டும் எனக்கூறுவது கூட பிராமணீயத்தின் சாதிக்கட்டமைப்பின் வெளிப்பாடுதான். இடைநிலைச்சாதி எழுத்தாளர்களின் படைப்புக்களை மறுவாசிப்புச் செய்வதை விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அதுதான் செயல்படுகிறது."நான் நம்புவதும் பின்பற்றியதும் உலகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறைகொண்ட -சர்வதேசமனிதனை நோக்கிய மனிதநேயச் சிந்தனை; அதற்குள் சாதிவேறுபாடுகளை ஒத்துக் கொள்ளும் மனநிலையும் சுயசாதி அபிமானமும் இருக்க வாய்ப்பே இருக்க முடியாது" எனக் கருதுவதன் வெளிப்பாடாகவே தங்கள் எழுத்துக் களைத் தலித்தியச் சிந்தனையின் ஊடாக மறுவாசிப்புச் செய்கின்றபோது கோபம் கொள்கின்றனர். எழுத்து என்பது ஒருவிதத்தில் நனவிலி மனத்தின் வெளிப்பாடு எனக் கருதுகிறவர்கள் கூட தனது எழுத்தைப்பற்றிய விமரிசனத்தைத் தன்னைப்பற்றிய விமரிசன மாகவே கருதிக் கொள்கின்றனர். இத்தகைய கோபங்களும் சகிப்பின்மையும் சாதீயம்சார்ந்த தன்னகங்காரங்கள் அல்லாமல் வேறல்ல. நாகரீக சமுதாயத்தில் வாழுகிறவர் களாக நம்புகிற சாதாரண மனிதர்களுக்கே இத்தகைய தன்னகங்காரங்கள் தவிர்க்கப்பட வேண்டிய குணங்கள். ஜனநாயக சமூகம் இத்தகைய குணங்களை அனுமதிப் பதில்லை.அதிலும் தன்னையறிவதிலும் தன்னை யுருவாக்கும் சமூகத்தை அறிவதிலும் முழுமையும் ஈடுபட்டு அதையே எழுத்தாக வடிக்கும் கலை இலக்கிய வாதிகளிடம் அத்தகைய கோபங்களும் சகிப்பின்மையும் வெளிப்படுகின்றன என்றால் அவர்களை எழுத்தாளர்கள் என்று மதிப்பது இருக்கட்டும்;சாதாரணமான மனிதர்கள் என்று மதிப்பதே கேள்விக்குரிய ஒன்று.
ஓர் ஊரில் சாதிவேறுபாடு காரணமாக மனிதர்கள் சேரிகளில் வாழ நேர்ந்துள்ள பிரச்சினை தலித்துகளின் பிரச்சினை மட்டும்தானா..? அவர்களது தாகம்போக்கும் குடிதண்ணீரை எடுத்துக் கொள்ள விதிக்கப்படும் தடைகளும், மீறுகிறவர்கள் வாயில் சிறுநீரைக் கழிப்பதும் மலத்தைத் தினிப்பதும் நடக்கிறதென்றால், அவை யெல்லாம் தலித்துகளின் சொந்தப் பிரச்சினை தான் என்று கருதிவிட முடியுமா...? சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அதிகாரத்தில் அனைவரும் பங்கேற்கும் வாய்ப்பை இந்த அரசியல் நிர்ணயச்சட்டம் தர விரும்புகிறது என முடிவு செய்து அதற்கென இடஒதுக்கீடு போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என ஒத்துக்கொண்டு ஐம்பது ஆண்டுகள் ஆனபின்பும் ஒருசில ஊர்களில் தேர்தலையே நடத்தமுடியவில்லை என்பதும், தேர்வுசெய்யப்பட்டவர் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் ,சாதி காரணமாகவே தேர்வு செய்யப் பட்ட கிராமத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்படுகிறார், என்பதும் நிச்சயமாகத் தலித்துகளின் பிரச்சினைகள் அல்ல. இந்தத் தேசத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளில் முதலில் உள்ள பிரச்சினைகள். இத்தகைய தேசத்தில் வாழநேரும் ஒவ்வொரும் வெட்கப்பட வேண்டிய பிரச்சினைகள். 'புண்ணியபூமி' யெனப் பெருமை பேசும் சித்தாந்திகள் இதனைக் களைய வழிசொல்லவேண்டாமா..?. ‘இந்தியா ஒளிர்கிறது' எனச் சொன்னவர்களும் இனி அதனையே வேறு வார்த்தைகளில் சொல்லப் போகின்றவர்களும் இதையெல்லாம் அறியாதவர்களா...தெரிந்துகொண்டே நடிக்கும் சுதேசிகளாய் இருப்பது எதுவரை..? இப்படியான கேள்விகள் பலவற்றையும் தலித் எழுச்சி காரணமான நெருக்கடி நம்முன் நிறுத்தியுள்ளது.
தங்கள் சாதியில் தோன்றிய முன்னோர்கள் இந்நாட்டை ஆளும் சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர் களாயிருந்தார்கள் என்பதற்காகப் பெருமைப்படும்போது, சத்திரிய தர்மம் என்பது சாதி வேற்றுமையைப் பாதுகாத்த தர்மம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. தங்களுக்கு மேலே பிராமணர்களை வைத்துக் கொண்டு அவர்களின் யோசனையின் பேரில் வரம்பற்ற அதிகாரத்தையும் வன்முறையையும் நிகழ்த்தி யிருப்பார்கள் என்பதை மறந்து விடக் கூடாது; மறுத்து விடமுடியாது. எனது கடவுள் ஆரியக்கடவுள் அல்ல என் ஊரில் இருக்கும் அம்மன் என்றோ மாடன் என்றோ சொல்லிப்பெருமை பேசும் அதேநேரத்தில் அந்த அம்மனும் மாடனும் சாதி வேறுபாடு காரணமாகக் கொலை செய்யப்பட்டவர்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டவர்கள் என்பதை நினைக்கும் போது குற்றவுணர்வு உண்டாகாமல் போகாது. நமது பாரம்பரியம் சாதிகாத்த பாரம்பரியம்; நமது பண்பாடு சாதிகாக்கும் பண்பாடு. நமது அடையாளங்கள் சாதிசார்ந்த அடையாளங்கள்; நமது பெருமைகள் சாதி மேன்மை பேசும் பெருமை கள்தான் என்பதை எழுத்தாளர்களும் கலைஞர்களும் அறிவுஜீவிகளும் உணர்ந்து கொள்ளவில்லை யென்றால் வேறு யாரால் உணர்ந்து கொள்ள முடியும்?
இந்த நிலையில் தங்களுக்குள் ஒன்றிணையும் இடைநிலைச் சாதிகளின் கலைஞர்கள் தாங்கள் நடத்தும் பட்டறைகளில் தங்களின் அடையாளங்களை, பழம்பெருமைகளை, வரலாற்றை எப்படிப்பதிவு செய்வது என்பதைப் பற்றிய விவாதங்களை முதலில் ஒதுக்கி வைக்க வேண்டும்; அதற்குப் பதிலாகத் தங்கள் சாதி மனிதர்களிடம் நிலவும் அறியாமையைப் போக்கும் மொழியைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக சாதிப்படி நிலைகள் சார்ந்த அறியாமை முதலில் களையப் படவேண்டும் என்பதைத் தீர்மானமாக்கி விவாதிக்க வேண்டும். தலித் அல்லாதவர்களும் தலித்துக் களும் இணைந்து வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். சாதிவேறுபாடு காரணமாக நிலவும் மனிதத் தன்மையற்ற மனோபாவத்தை விட்டொழித்தவர்களாகத் தங்கள் சாதியினரை மாற்றும் மிக முக்கியமான பொறுப்பு தலித் அல்லாத வர்களுக்கு இருக்கிறது. தலித் அல்லாதவர்கள் என்ற வகைப் பாட்டில் இடைநிலைச்சாதிகள் மட்டும் இருப்பதாக நான் நம்பவில்லை. பிராமணர்களும் தலித்தல்லாதவர்கள் என்ற வகைக்குள் தான் அடக்கம்.

தீண்டாமை என்பதன் தீவிரமும் நம்பிக்கையும்


நம்மில் பல இனத்தவரைப் பற்றி தவறான கருத்துகளை சிலர் கொண்டுள்ளனர். குறிப்பாக ஜாதி என்ற சொல்லைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை. வரலாற்று அடிப்படையில் ஜாதிகளைப்பற்றி அறிந்தால் சமுதாயச் சீர்திருத்தங்களை செவ்வனே செய்ய இயலும். இதற்கு நம்மிடையே வரலாற்று அறிவு வளர்தல் வேண்டும். வரலாற்று அறிவு சிறக்க அடிப்படை ஆதாரங்களாக விளங்குபவை கல்வெட்டுகள். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கல்வெட்டுகள் நம் நாட்டில் தான் அதிகம் உள்ளன. ஆயினும் அதற்கு முதலிடம் கொடாமல் கடை இடம் கூட கொடுக்காமல் இன்றும் இருக்கிறோம். இந்த பின் அணியில் ஒரு சில கருத்துக்களைப் பார்க்கலாம்.
கொங்கு நாடு உழுகுடிகளான வெள்ளாளர்கள் அதிகம் வாழ்கின்ற நாடு. வெள்ளாளப் பெருமக்களை கவுண்டர்கள் என அழைப்பது மரபு. அவர்களில் வெள்ளாளக் கவுணடர்கள் என்றும் வேட்டுவக் கவுண்டர்கள் என்றும் பொதுவாக கூறுவர். அவர்களைப் பற்றிய ஏராளமான செய்திகளை கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகட்கு முந்திய கல்வெட்டுகளில் இப்பகுதியில் அவர்களே அதிகம் வாழ்ந்தார்கள் என்ற செய்தி வெளிப்படுகிறது. மற்ற குடியினர் இருந்தபோதிலும் வெள்ளாளர்களே நிறைந்து விளங்கிய பகுதி இது என ஐய்யம் திரிபற கல்வட்டுகள் வாயிலாக அறிகிறோம். அவர்கள் நிலச்சுவாந்தார்களாகவும், பொருள் படைத்தவர்களாகவும், பரந்தமனப்பான்மை படைத்தவர்களாகவும் திகழ்ந்து இருக்கிறார்கள். நம் கோயில்களைக்கட்டி திருப்பணிகளைச்செய்து ஏராளமான பொருள்களை அளித்து காத்தவர்கள் இவர்களே, எனக்கல்வெட்டுகள் காட்டுகின்றன.
இவர்களில் பலர் பல்லவரையன் போன்ற பட்டங்களை பெற்றிருந்தார்கள். நீதி மன்றங்களில் வழக்குகளை ஆராய்ந்து நீதி கிடைக்க வழிவகை செய்த வெள்ளாளர்களை மன்றாடிகள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்பணியை மன்றாட்டு என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.அத்துடன் சமுதாயத்தில் முன்னின்றதோடு அரசுப்பணிகளிலும் முதலிடம் பெற்று முதலிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பிள்ளைகள் என்றும் சில கல்வெட்டுகளில் காண்கிறோம்.
இவை தவிர வெள்ளாளர்களில் பல குடிப்பிரிவுகள் இருந்தன. கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் பதினாறுக்கும் மேற்பட்ட குடிப்பிரிவுகள் குறிக்கப்படுகின்றன. கொற்றந்தை குலம், பூலுவர், மலையர், பைய்யர் பிள்ளந்தை, புல்லி, போன்ற குலப்பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றில் கொற்றந்தை என்ற குடி இரண்டாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது என அறிகிறோம். புகளூர் சேரமன்னன் கல்வெட்டின் அருகில் அதே கல்வெட்டில் கொற்றந்தை இளவன் என்பவன் குறிக்கப்படுகிறான்.
கொங்கு நாட்டு வேளாளர் குடிகளில் மேலும் சில பிரிவுகளும் உள்ளன. சேட்டர், விச்சர், உட்டமர், வகையர், என்ற பிற பெயர்களும் கல்வெட்டுகளில் கானப்படுகின்றன. வேறு சிலர் மாடை, வெள்ளெலி, முட்டை, ஊகை, கருன்தொழி என்றும் அழைக்கப்பட்டனர். கோவில் பாளையம் கல்வெட்டில் வெள்ளாளன் புல்லிகளில் கோவன் இருடன் ஆன இராஜ நாராயண காமுண்டன் என்பவன் குறிக்கப்படுகிறான். இடிகரைக் கல்வெட்டில் "வெள்ளாளன் மலையரில் சோழக்கமுண்டன் மன்றாடி" குறிக்கப்பெறுகிறான். இக்கல்வெட்டு 1275ல் விக்கிரமசோழன் கல்வெட்டில் குறிக்கப்படுவதாகும். கடத்தூர் கல்வெட்டில் 1222ல் வீரராஜேந்திரசோழன் காலத்தில் "வெள்ளாளன் குமரன் குமரனான தனஞ்செய பல்லவரையன்" குறிக்கப்பெறுகிறான். இங்கு பல்லவரையன் என்பது பட்டப்பெயர் என்பது தெளிவு.
கல்வெட்டுகளில் வெள்ளாளரைப்பற்றிக் கூறும்போது முதலில் அவன் வெள்ளாளன் எனக்கூறி பின்னர் அவனது உட்குடிப்பெயர் கூறி, பின் அவனது இயற் பெயரைக்கூறி, அவனது பட்டப் பெயரைக் கூறி அவன் கொடுத்த கொடையைக் கூறுவது மரபு. இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்வரும் கல்வெட்டைக் கூறலாம்.
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றி வித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூர் என அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.
இப்பின்னணியில் வேறுசில கல்வெட்டுகளையும் இங்கு காணலாம். இவர்களில் பையர் என்ற பிரிவினர்களைப் பார்த்தோம். இப்பையருக்குள் மற்றும் ஒரு உட்பிரிவு உண்டு. அவர்களை கல்வெட்டுக் கூறுகிறது. அவ்வுட்பிரிவினர் பறையர் என்று அழைக்கப்பட்டனர். இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நுற்றாண்டில்) கோயிலில் விளக்கு எரிக்க பத்து வராஹன் பணம் கொடுத்தவன் பெயர் "கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்" என்று உள்ளது. வெள்ளாளரில் பைய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவினர் இருந்துள்ளனர் என இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் "வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான். இது போல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். "வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்" என்பவன் குறிக்கப்பெறுகிறான். இதிலிருந்த்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளது. இவன் நாட்டுக்காமுண்டன் என்று அழைக்கப்படுவதிலிருந்து வடபரிசார நாட்டுக்கே வெள்ளாளர் குடியில் தலைவனாகவும் இருந்திருக்கிறான் என்று அறிகிறோம். ஆதலின் இவர்கள் நிலச்சுவாந்தாராகவும்,பொருளுடையோராகவும் மக்களிலே சிறந்தோராகவும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது.
பறையன் (Pariahs) என்னும் சொல் தமிழகத்தின் பூர்வகுடியினரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதோடு, இந்திய அளவில் தீண்டப்படாத சாதியினரைக் குறிக்கும் பொதுச்சொல்லாகவும் சர்வதேச அளவில் விலக்கப்பட்டவர்களையும் ஏதாவதொரு வகையில் இழிவானவர்களைக் குறிக்கும் எதிர்மறைச் சொல்லாகவும் கையாளப்படுகிறது. விரிவான பொருளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் இச்சொல் தமிழிலிருந்து சென்றதாகும். தமிழில் புரிந்துகொள்ளப்படும் பொருளிலேயே எல்லா இடங்களிலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்பது உண்மையேயாயினும், பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் மோசமான பொருளைத் தரும் விதத்திலேயே கையாளப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். தமிழகத்தில் பறையன் என்னும் சொல்லின் பொருள் என்ன? சாதியா இனமா கருத்தா என்று தேடிப் பார்த்தால் இவை எல்லாவற்றோடும் தொடர்புடைய சொல்லாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தான் இப்பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினையை உள்ளடக்கிய சமூகப் பண்பாட்டுப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய மொழிகளுக்குள் நுழைந்து ஆங்கிலத்தில் அகராதிச் சொல்லாக மாறிவிட்டது இச்சொல். அதனால் சாதியடிப்படையைக் குறிக்கும் சொல் என்பதையறியாமலேயே உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய மொழிகளுக்குள் இச்சொல் சென்ற மூலத்தினைச் சரியாகக் கண்டுணர முடியவில்லை. போர்த்துக்கீசிய அல்லது பிரெஞ்சு மொழிவழியாக ஆங்கிலத்திற்குச் சென்றிருக்க வேண்டும் எனத் தோன்று கிறது. கி.பி 1613இல்தான் ஆங்கிலத்தில் இச்சொல் முதன்முதலாகப் பதிவுசெய்யப்பட்டது என்று கூறுகிறார் ரவிக்குமார் ('தலித்' பிப்ரவரி 2007). மேலும் பிரெஞ்சுப் புரட்சியின் 'பயங்கர'ங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்தியாவுக்கு ஓடிவந்து 1729 முதல் 1823 வரை தென்னிந்தியாவில் கிறித்துவ மதப் பிரச்சாரம் செய்த கிறித்துவப் பாதிரியாரான ஜே. ஏ. துபுவா (1770-1838) பறையர்களைக் குறித்த இழிவான சித்திரத்தோடு பறையன் என்னும் சொல்லை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதாக ராஜ்கௌதமன் கூறுகிறார். ('தலித்திய விமர்சனக் கட்டுரைகள்', பிப்ரவரி 2005, காலச்சுவடு) இதைக் குறித்து மேலும் அறிய ஐரோப்பியர்களின் பயணக் கட்டுரைகளையும் மிஷினரிகளின் குறிப்புகளையும் ஆவணக்காப்பகத்தின் ஆதாரங்களையும் ஆழமாகத் தேட வேண்டியிருந்தது. கி.பி 1498இல் இந்தியாவின் தென் பகுதியில் வந்திறங்கிய ஐரோப்பியர்களில் போர்த்துக்கீசியர்களின் அரசியல், சமய, பண்பாட்டு நடவடிக்கைகள் அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகள் இங்கிருந்தன. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் மொழியோடு, சாதிய அடுக்குகளின் சமூகப் பாத்திரத்தையும் கற்றுக்கொண்ட நொபிலி என்னும் மதபோதகர் அதன் அடிப்படையிலேயே மறைப்பணியினைச் செயல்படுத்தினார். சமூகத்தை மேலிருந்து கீழாக நோக்கும் அணுகுமுறை ஐரோப்பியர்களால் வரிந்துகொள்ளப்பட்டதும் இக்காலத்தில்தான். பறையன் என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளுக்குள் சென்றதை இப்பின்னணியில் வைத்துத் தேடவும் வாய்ப்பிருக்கிறது. இச்சூழலைப் பூரணமாக விவரிக்க முடியவில்லை என்றாலும் இக்காலத்திற்குப் பிறகே மேற்கத்திய அறிவுலகச் சட்டகமும் இலக்கியப் பிரதிகளும் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஐரீஷ் போராளிகளை இழிவுக்குள்ளாக்க இங்கிலாந்து இச்சொல்லைப் பெருமளவில் பயன்படுத்தியிருக்கிறது. அவை எல்லாவற்றையும் கடந்து இச்சொல்லின் வேர்ப்பாகுபாட்டைக் கற்பிக்கும் சாதியமைப்பையும் பாகுபடுத்தப்பட்ட சமூகம் குறித்த இழிவையும் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்பொழுது அதன் அர்த்தம் மறு உற்பத்தி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வுடைய யாரும் இதனை மறுப்பதை ஏற்றுக்கொள்வர்.

ஐரோப்பிய மொழியில் இச்சொல் கொண்டுசெல்லப்பட்டமை தற்செயலானதாக இருக்க வாய்ப்பில்லை. பாகுபாட்டைக் கற்பித்து நிலவச் செய்வதால் பலன்பெறும் பிரிவினரே இச்சொல்லின் பரவலாக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இச்சொல்லை மிகவும் இழிவான பொருளில் இங்கு ஆதிக்க இந்து சாதியினர் பரப்பிவந்தனர் என்பதை அறிந்தால் மட்டுமே இத்தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும். இதன் பின்னணி குறித்துத் தேடுவது சாதி, தீண்டாமை குறித்த வேறுவகையான புரிதல்களை நமக்குத் தரக்கூடும். இதற்கான தேடலில் பயன்படும் ஒரே ஆதாரமாகக் கிடைப்பது அயோத்திதாசரின் எழுத்துகள்தாம். பறையன் என்னும் சொல்மீது இந்துக்கள் வெளிப்படுத்திய வெறுப்பு, இழிவான பொருளில் அச்சொல்லைப் பரப்பிய முறை குறித்து மிக விரிவாகவே அவர் எழுதியிருக்கிறார். பறை என்பது பெயர்ச்சொல் அல்ல. மாறாகப் புத்த தன்மத்தைப் பறைசாற்றும்-சாதிபேதமுள்ளோரின் உண்மைத் தோற்றத்தைப் பறைந்து சொல்லும் வினைச் சொல்லாகவும் பிறந்தது என்பது அவருடைய முதல் கருத்து.

பிராமணர், பறையர் ஆகிய சாதிகளுக்கிடையேயான முரண்களை ஏடுகளின் மூலமாகவும் வழக்காறுகள் மூலமாகவும் கண்டுகொண்ட அவர், அதற்கான காரணங்களையும் முரண்பாடு செயல்படும் வேறுதளங்களையும் தேடினார். சாதிபேதத்தின் அடிப்படையிலேயே இம்முரண்பாடு செயல்படுவதாகக் கருதிய அயோத்திதாசர், இம்முரண்பாட்டில் சாதிபேதத்தை ஏற்க மறுத்து, சாதியமைப்பிற்கு வெளியே நின்றவர்கள் தீண்டப்படாதார் ஆனார் என்று விளக்கினார். சாதியமைப்பு தோன்றுவதற்கு முன்னர் "இன்றைய இழிவுகளை”ச் சுமக்காதவர்களாய் இவர்கள் இருந்தனர் என்றும் சாதியமைப்பின் காலம் சில நூறாண்டுகளுக்கு உட்பட்டதே என்றும் சொன்னார். இதற்குப் பின்னரே தீண்டப்படாதார்மீது இழிவான சாதிப்பெயர்களையும் இழிதொழில்களையும் சுமத்தி அவையே நிலையானவை என்னும் கருத்துகளை ஓயாமல் பரப்பினர் என்றார். இந்தப் பரவலாக்கம் குறித்து அயோத்திதாசர் நுட்பமான பதிவுகளைத் தந்திருக்கிறார். முரண்பாடுடைய இவ்விரண்டு சாதிகளை எதிரெதிராக நிறுத்தி, பறையர் வகுப்பினரை இழிவாகவும் பிராமண வகுப்பினரை உயர்வாகவும் கற்பித்துக் கதைகளும் பாடல்களும் புனையப்பட்டுள்ளதை அவர் கண்டித்ததோடு அவற்றை மறுத்தும் எழுதினார். பாரதியாரின் கவிதைகளும் 'சுதேசமித்திர'னின் பதிவுகளும்கூட அவரால் இக்காரணத்திற்காகக் கண்டிக்கப்பட்டன. பறையன் என்னும் பெயர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப்படுவதினால் அச்சாதி குறித்த இழிவு, நிலைத்த உண்மையாகிவிடுகிறது என்னும் எச்சரிக்கை அவரிடமிருந்தததை இதனால் அறிய முடிகிறது. பாப்பார மயினா ஜ் பறை மயினா, பாப்பார காகம் ஜ் பறை காகம் என்றெல்லாம் எதிர்வுகளைக் கட்டமைத்தவர்கள் நாயைக் குறிக்கும்போது, பறை நாய் என்னும் சொல்லை மட்டும் உருவாக்கிவிட்டு இழிவாக இருக்குமெனக் கருதிப் பாப்பார நாய் என்னும் சொல்லை உருவாக்கவில்லை என்பதையும் சுட்டிச் சென்றுள்ளார்.

தீண்டாமை என்பதன் தீவிரமும் நம்பிக்கையும் மற்ற அடித்தட்டுச் சாதிகளைவிடப் பறையர் எனப்படும் சாதியைக்கொண்டே அதிகமும் நிறுவப்பட்டுள்ளதை இச்சொல்லின் புழக்கமும் பரவலாக்கமும் காட்டுகின்றன. இவ்விரண்டு சாதியினரைக் கொண்டு அயோத்திதாசர் கூறிய விளக்கங்கள் பிற சான்றுகளாலும் நிறுவப்பட்டுள்ளன. பறையர்கள் குருமார்களாக இருக்கும் சிறுதெய்வக் கோயில்கள் பலவற்றை இன்றும் காண முடியும். அண்மைக்காலம்வரை திருவாரூர் கோவிலில் யானையேறும் பெரும்பறையன் என்னும் பெயரில் இச்சாதியாருக்கு இருந்துவந்த உரிமை பலருக்கும் தெரிந்ததுதான். பறையர்கள் குருமார்களாக இருந்தனர். அதுவே பிறகு, பிராமணர்களிடம் பெயர்ந்தது என்று ஜார்ஜ் எல். ஹார்ட் போன்றவர்களும் சொல்கிறார்கள். குருமார்களாக இருந்த பறையர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காகவே பிற்காலத்தில் குருமார்களான பிராமணர்களை இளமை பொருந்திய பார்ப்பு எனும் சொல்லின் அடியாகப் பார்ப்பான், பார்ப்பனர் என அழைத்தனர் என்கிறார் தொ. பரமசிவன். மேலும் தென்மாவட்டங்களில் பனம் பழத்தின் ஒரு முனையினைப் பார்ப்பான் முனை என்றும் மற்றொரு முனையைப் பறையன் முனை என்றும் கேலிசெய்து நகையாடும் வழக்கம் உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ('பண்பாட்டு அசைவுகள்', காலச்சுவடு, பக். 180, 181) பனம் பழத்தின் முனைகளுள் சுவையற்ற பகுதியையே பறையன் முனை என்று அழைப்பதிலிருந்து அயோத்திதாசர் கூறும் இழிவு கருதும் அர்த்தம் தொக்கியிருப்பதை அறியலாம். "பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச் சாதியானான்” என்னும் பழமொழியும் தமிழகத்தில் பரவலாக வழக்கிலுள்ளது. பறையர் சாதி குறித்த இன்றைய இழிவாழ்வு என்றென்றைக்குமானதாக இருந்ததில்லை என்பதை இன்றைய கல்வெட்டுச் சான்றுகளும் ஆய்வாளர்களும் மெய்ப்பித்திருக்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொண்டால்தான் அதன் பரவலாக்கத்திற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடியும். மேலும் பறையர் சாதியாரை அடிப்படையாகக் கொண்டு சாதியமைப்பை ஆராயும் அயோத்திதாசரின் அணுகுமுறையைக்கூட இதன் பின்னணியில் புரிந்துகொள்ளலாம்.

இந்து வேதங்களையே இந்தியத் தத்துவங்களென நம்பி எழுதிய கர்னல் போலியர், ராபார்ட் சேம்பர், ஜெனரல் மார்ட்டீன், வில்லியம் ஜோன்ஸ், கோல்புரூக் போன்ற ஐரோப்பிய அறிஞர்களை விமர்சித்து எழுதிய அயோத்திதாசர் இந்து உயர்சாதிப் பிராமணர்கள் கொடுத்த பொய்யான தகவல்களே இதற்குக் காரணம் என்றார். ஐரோப்பியர்களிடம் நெருக்கம் காட்டி வாழும் இப்பிராமணர்களால்தான் சாதி சார்ந்த பொய்களும் பரப்பப்படும் என்று அவர் கூறினார். இதற்கான சான்றுகளெனச் சிலவற்றை அவர் எடுத்துவைத்தார். அதாவது "சீவசெந்துகளின் மூலமாகவும் புராணங்களின் மூலமாகவும் கீர்த்தனைகளின் மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச்செய்தது மட்டுமின்றி, ரெவரண்ட் ஜெ.பி ராட்லர் என்னும் துரை, அகராதி எழுதிய காலத்தில் அவருக்கு உதவியவர்கள் 13 வகையான பறையர்களின் பெயர்களோடு, இன்னுஞ் சில நூதனப் பெயர்களை வகுத்துப் புத்தகத்தில் பதியவைத்து அதினாலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தார்கள். ஆனால் பார்ப்பார்களில் இன்னின்ன பார்ப்பார்கள் என்று குறிப்பிடவில்லை” என்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் Tamil Lexicionஐ எழுதப் பயன்படுத்தப்பட்ட அகராதிகளில் ஒன்றான Rottler's Dictionary (1840) யையே அவர் இங்குக் குறிப்பிடுகிறார். பறையர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் சாதிய அநீதி குறித்துப் பிராமணர்கள் மூலம் ஐரோப்பியர்கள் அறிந்திருந்தார்கள் எனக் கூறும் அவர், 1853இல் ய. ஆரிங்டன் என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் சொல்லித் தந்த பிராமண ஆசிரியர்கள் பறையர்கள்மீது வஞ்சம் கொண்டு கூறியதையும் சான்றாக நிறுவுகிறார். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இங்கு ஐரோப்பிய ஆய்வாளர்களையும் மதபோதகர்களையும் அதிகாரிகளையும் இந்து உயர் சாதியினரின் இந்நடைமுறை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதன் விளைவாகவே அவர்களிடம் சாதி என்னும் கருத்தாக்கத்தைக் கொண்டு இந்தியச் சமூகத்தை மதிப்பிடும் ஓரியண்டலிசப் பார்வை உருவாகியிருக்கிறது. சான்றாக: அபே துபேய். இதையே தம் வார்த்தைகளில் விவரிக்கும் அயோத்திதாசர் "பின்புவந்து தோன்றிய துரை மக்கள் யாவரும் பெரிய சாதிகள் என்போர் வார்த்தைகளையே பெரிதென்றெண்ணிக் கொண்டு தாழ்ந்த சாதி என்றழைக்கப்பட்டார்களைத் தாழ்ந்தவர்கள் என்றே எண்ணிக்கொண்டும் தலையெடுக்கவிடாமலும் ஏழைகளை ஈடேற்றாமலும் விட்டு விட்டார்கள்” என்றார். அயோத்திதாசரால் பறையர் என்னும் சொல் பல்வேறு தளங்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பரப்பப்படுவது குறித்து எழுதப்பட்டிருந்தாலும் ஆங்கில அகராதிச் சொல்லாக மாறியதைக் குறித்து நேரடியாகத் தகவலேதும் இல்லை. ஆனால் இச்சொல் பரப்பப்பட்டதற்கான அரசியலை அவரிடமிருந்து பெற முடிகிறது. சில நூறாண்டுகளுக்கு முன்பே இச்சொல் சார்ந்த அரசியல் தொடங்கிவிட்டது என்று அவர் கூறுவதைவைத்துப் பார்க்கும்பொழுது காலப்பொருத்தம் கிட்டுகிறது.

பறையன் என்னும் பெயரைச் சொல்லி எழுதுவது சட்டப்படி குற்றமாகும். சென்னையிலிருந்து வெளியாகும் ஊடகங்களிலும் இப்போக்கு தொடர்வது நல்லதல்ல. ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் தமிழன் என்பதற்கான வரையறையாக Tamil Lexicion. Vol III 'பறையனொழிந்த தமிழ்ச்சாதியான்' என்றுதான் விளக்கம் அளித்தது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சாதாரண மக்களாலும் வசைச் சொல்லாக இது கையாளப்படுகிறது. இச்சொல் மட்டுமல்ல, சாதியை அடிப்படையாகக் கொண்ட எல்லாச் சொற்களும் அடையாளங்களும் இல்லாதொழிய வேண்டும். ஊடகங்களில் கையாளப்படும் பல்வேறு சொற்பிரயோகங்களும் கருத்துகளும் பழமையான சமூகத்தின் மரபுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. இப்போக்கு நீடிப்பது என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆதிக்கத்திற்கு வலுசேர்க்கக் கூடியவையாக ஊடகங்களே இருக்கின்றன. கறுப்பின மக்களை நீக்ரோ என்று அழைத்துவந்த அமெரிக்கா கறுப்பினத்தவர்களின் கோரிக்கையை ஏற்று, "ஆப்ரோ அமெரிக்கர்கள்” என்றே அழைக்கிறது. இம்மாற்றத்திற்குக் கறுப்பின மக்களின் போராட்டமே அடிப்படைக் காரணமென்றாலும் அதனை ஏற்கும் மனநிலையை அமெரிக்க அரசும் ஊடகங்களும் பெற்றிருந்தன என்பது முக்கியமானதாகும்.