Tuesday, August 31, 2010

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்

srchandranஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுகிறது.

aganesan


புத்தகம் பற்றிய மேலதிக விவரங்கள் www.sishri.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். - ஆசிரியர் குழு.

“தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.

தோள்சீலைக் கலகம் (Upper Cloth Revolt) என்று வழங்கப்படுகின்ற இப்பொருள் குறித்து எழுதியுள்ள ஆய்வாளர்களுள் பெரும்பாலானோர் - அனைவருமே என்றுகூடச் சொல்லலாம் - சாணார் சமூகத்துப் பெண்டிர் இடுப்புக்குமேல் உடையுடுத்துவதற்கு அனுமதிக்கப்படாதிருந்தனர் என்றும், லண்டன் மிஷனரி சொஸைட்டியைச் சேர்ந்த புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்களின் சமயப் பரப்புதல் பணியின் மூலம் மதம் மாறிய சாணார் சமூகத்தவர்கள் நாகரிகமான நடையுடை பாவனைகளைக் கற்றுக் கொண்டதன் விளைவாக அச்சமூகப் பெண்டிர் மார்பை மறைக்கும் வண்ணம் ரவிக்கையும் அதன் மேல் முன்றானை போன்ற சீலைத் துணியும் அணியத் தொடங்கினர் என்றும் எழுதி வருகின்றனர்.

bandaariமேலும், இப்படி அணியத் தொடங்கியதின் எதிர்விளைவாகவே உயர் சாதியினரான நாயர்-வேளாளர் சமூகத்தவர்கள் அடக்கு முறையில் ஈடுபட்டனர் என்றும், நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகவும், புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்களின் பரிந்துரையின் பேரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் ரெஸிடெண்ட் போன்ற அதிகாரிகள் தலையிட்டதன் பயனாகவும் சாணார் சமூகத்துப் பெண்டிர் ரவிக்கையும் தோள்சீலையும் அணிய அனுமதிக்கப்பட்டனர் என்றும் இந்த ஆய்வாளர்கள் ஒரு போக்கிலேயே எழுதி வருகின்றனர்.

இந்த ஐரோப்பிய மையவாத ஆய்வுக் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்கின்ற மேனாட்டு ஆய்வாளர்களும், ஆங்கிலேயக் காலனியாதிக்க மோகப் பித்து தெளியாத மனநிலையுடன் ஆய்வைத் தொடர்ந்து செய்துவரும் நம் நாட்டு ஆய்வாளர்களும், புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்களின் மானஸ புத்திரர்களாக அல்லது உணர்வுபூர்வமான பிள்ளைகளாக இயங்கிக் கொண்டிருக்கின்ற ஆய்வாளர்களும் இந்த ஒரு போக்கிலான ஆய்வுக் கருத்தையே தொடர்ந்து முன்னிறுத்தி வருகின்றனர்.

இந்திய மக்களில் பெரும்பாலோர் தன்மானமும் சுய அபிமானமும் கெளரவ உணர்ச்சியும் இன்றி மிருகங்களைப் போல வாழ்ந்து வந்தார்கள் என்றும், வெள்ளை இனத்துப் பாதிரிமார்களின் ஞான உபதேசத்தால்தான் அவர்களுக்குச் சிந்திக்கின்ற ஆற்றலே உருவாயிற்று என்றும் இத்தகைய ஆய்வாளர்கள் நினைக்கின்றார்கள் போலும்.

எடுத்துக்காட்டாக, என்.கே. ஜோஸ் என்ற ஆய்வாளர் “சாணார் லகளை” என்ற நூலில்1 பின்வருமாறு எழுதுகிறார்: “கேரளத்தில் இந்து சமய ஆசார வழக்கத்தின்படி அரைநிர்வாணமாக காலங்காலமாக அலைந்து அல்லலுற்றுவந்த சான்றோர் சமுதாயப் பெண்கள் கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்ட உடனே றவிக்கை அணியத் துணிந்தனர். அத்துடன் உயர்சாதியினருக்கு மட்டும் உரிமையுடைய தோள்சீலையையும் சேர்த்து அணியத் துணிந்துவிட்டனரே என்ற சவர்ணர்களின் ஆதங்கமே இத்தோள்சீலைக் கலகத்துக்குக் காரணமாயிற்று. ஆதலால் இவர்கள் தோள் சீலையுடன் றவிக்கையையும் சேர்த்துக் கிழிக்கத்தொடங்கினர்.”

இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள மேற்கோளில் இழிவுத் தொனியுடன்கூடிய சாணார் என்ற சொல்லுக்குப் பதிலாகச் சான்றோர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்தவரின் பிரக்ஞைச் சிக்கலால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாகும்.2 சான்றோர் என்ற சொல்லின் உட்பொருளுக்குச் சிறிதும் தொடர்பற்ற வகையில் சான்றோர் சமூகத்தவர் காலம் காலமாக இழிவான நிலையில்தான் இருந்து வந்துள்ளனர் என்றே எழுதுகிறார்கள் என்றால் இவர்களுடைய உள்நோக்கம் எவ்வளவு அப்பட்டமாக வெளிப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். நெல்லைச் சீமையில் 1842 முதல் 1881 வரை3 சமயப் பணி புரிந்த பிஷப் கால்டுவெல் குறித்து எழுதும்போது வின்சென்ட் குமாரதாஸ் என்ற ஆய்வாளர் “சாணார் சமூகத்துக்குச் சுயமாக சொந்தக் காலில் நிற்கின்ற தன்மையை ஏற்படுத்தியவர் கால்டுவெல்” என்று எழுதுகிறார்.4

இவற்றையெல்லாம் படிக்கும்போது திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் தென்பகுதியில் திவான் பேஷ்கராக இருந்த வி. நாகமையா அவர்கள் 1906ஆம் ஆண்டில் Travancore State Manual (திருவிதாங்கூர் சமஸ்தானக் கையேடு) முதல் தொகுதியில் பக்கம் 501-502இல் எழுதியுள்ள ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கருத்தினைத் தமிழில் தருகிறோம்:

“கிறிஸ்தவ மிஷனரிமார் எந்த மக்களைப் பற்றியும் நிறுவனங்களைப் பற்றியும் விவரித்து எழுத விழைந்தார்களோ அம்மக்கள் மற்றும் நிறுவனங்களின் பூர்விகம் பற்றிச் சரியான பரிச்சயம் அம்மிஷனரிமார்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்குத் தகவல் கொடுத்தவர்களும் காழ்ப்புணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். மிஷனரிமார்கள் மட்டுமின்றி ஆங்கிலேயர்கள் எல்லோரிடமும் இத்தகைய கண்ணோட்டம்தான் இருந்தது. தம் ஆயுள் முழுவதும் இந்தியாவிலேயே கழிக்க நேர்ந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு இம்மக்கள் பற்றி ஒரு சரியான புரிதல் ஏற்படுவதில்லை.”

தோள் சீலைக் கலகம் நிகழ்ந்த திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் தென்பகுதிக்குத் திவான் பேஷ்கராக இருந்த ஒருவர் எத்தகைய விருப்பு வெறுப்புமின்றி உண்மை நிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளார் என்பது இந்த மேற்கோளைப் படிக்கும்போது தெளிவாகத் தெரியவரும்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் சென்னையில் கலெக்டராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற நேர்மையான நிர்வாகி - ஆய்வாளர், ‘ஏசுர் வேதம்’ என்ற தலைப்பில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு சுவடியைப் பற்றிக் குறிப்பிடும்போது அச்சுவடி போலியானது என்றும் அச்செயல் கிறிஸ்தவ மிஷனரிகளின் குறும்புத்தனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.5

ஒரு சமூகத்தின் பாரம்பரியப் பெருமிதத்தைக் குலைக்கும் வகையிலும், தாழ்வு மனப்பான்மையை அவர்களிடம் உருவாக்கும் வகையிலும் வரலாற்றைத் திரித்து எழுதுவதென்பது கிறிஸ்தவ மிஷனரிமார்களின் செயல்திட்டங்கள் பலவற்றுள் முதன்மையானதாகும். இதற்கு மிக எளிமையான சிறந்த எடுத்துக்காட்டு சாணார் (Shanar) என்ற சொற்பிரயோகம் ஆகும். சான்றோர் குலம் என்பது இச்சமூகத்தின் பெயராகும். சான்றோர், சான்றார் என்ற சொல் வழக்குகள் தமிழ்க் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் இலக்கியங்களிலும் இச்சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று என்பது ஒண்ணு என்று வழங்கப்படுவதுபோல இச்சொல் காலப்போக்கில் மக்களின் பேச்சு வழக்கில் சாணார் எனத் திரிந்து வழங்கத் தொடங்கிற்று.

நெல்லைச் சீமையில் வாழும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தார், கம்மவார், பலிஜவார், பண்ட குல ரெட்டிமார் போன்றோர் சான்றவாளு என்றே இன்றுவரை இச்சமூகத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர். சான்றோர் அவர்கள் என்பது சான்றோர் அவாளு என்றும் சான்றவாளு என்றும் திரிந்துள்ளது. நிலைமை இப்படி இருக்க ஷானார் என்ற தங்களின் மழலை வழக்கையே பொது வழக்காக ஆக்கியதோடு அச்சொல்லுக்குச் சான்றோர் என்ற பெருமிதம் மிக்க பெயருடன் உள்ள தொடர்பைப் பொதுப் புத்தியிலிருந்து துண்டிக்கவும் செய்தவர்கள் ஐரோப்பியப் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மிஷனரிமார்களே.

dickkooimanநடுநிலையுடன் ஆய்வு செய்வதாகப் பறைசாற்றிக்கொள்கின்ற ஐரோப்பிய ஆய்வாளர்கள் பலரும் தங்களுடைய ஐரோப்பிய மைய நோக்கினையே நுட்பமாகவும் இலாகவமாகவும் பயன்படுத்தி வரலாற்றைத் திரித்து எழுதிவருகிறார்கள். சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த டிக் கூய்மன் (Dick Kooiman) என்ற ஐரோப்பிய ஆய்வாளரின் “Conversion and Social Equality in India” என்ற நூல் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.6 ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சாணார் சமூகத்தவரை அடிமைச் சாதிகள் என்றும், தீண்டத்தகாத சாதியினர் என்றுமே குறிப்பிட்டு எழுதிவரும் டிக் கூய்மன் ஐரோப்பியக் கிறிஸ்துவ மிஷனரிமார்களால்தான் சாணார் சமூகத்தவர் உய்வடைந்தனர் என ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.

இத்தகைய ஆய்வாளர்கள், ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்காவைக் கைப்பற்றி அண்மைக்காலம் வரை அந்த மண்ணின் மைந்தர்களை அடிமைகளாக நடத்தி வந்த வரலாற்றை ஆய்வு செய்யும்போதுகூட இதே கண்ணோட்டத்துடன்தான் எழுதுவார்கள் போலும். அடிமை முறையைச் சட்டபூர்வமாக ஒழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்த ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிறான்ஸ்வால், நேட்டால் போன்ற தங்கள் காலனியாதிக்கப் பகுதிகளில் ஒப்பந்தக்கூலிகளாக ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் குடியேற்றினர்.

இந்த இந்தியர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களாக இருந்தாலும்கூட அவர்களுடைய திருமணம் கிறிஸ்துவத் தேவாலயங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால்தான் அத்திருமணம் சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் என அறிவித்தனர். அவ்வாறு திருமணம் பதிவு செய்யப்படாவிட்டால் அவர்களுடைய குடும்ப உறவு சட்டபூர்வமான உறவாக அங்கீகரிக்கப்படாது. அதாவது அடிமைகளுக்குத் தாய் தந்தை குழந்தைகள் என்ற உறவு முறை இல்லை என்பதே சட்டத்தின் நிலைப்பாடு ஆகும். எனவே, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் அவர்கள் சுதந்திரமான மனிதர்கள் என்று பெயரளவிலாவது அங்கீகரிக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகவே இருக்க நேரும் என்பதுதான் இதன் உட்பொருளாகும்.

ஆங்கிலேயர்களின் இந்த அராஜகமான இனவெறி, மதவெறி நடவடிக்கையை எதிர்த்துத்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதநேயம் மிக்க வழக்கறிஞர் தென்னாப்பிரிகாவில் போராட்டம் நடத்தவும், தில்லையாடி வள்ளியம்மை போன்றோர் தங்கள் இன்னுயிரை அப்போராட்ட வேள்வியில் ஆகுதியாக்கவும் நேர்ந்தது. வரலாறு இப்படியிருக்க நடுநிலையோடு ஆய்வு செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஐரோப்பிய மைய வாத ஆய்வாளர்களின் பார்வைக்கு வேறு சித்திரம்தான் தென்படுகிறது.

ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்கர்களுக்கு நாகரிகத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற ‘நல்ல′ எண்ணத்துடன்தான் தென்னாப்பிரிக்காவைக் கைப்பற்றினார்கள் என்றும், ஒப்பந்தக் கூலிகளாக ஆயிரக்கணக்கில் இந்தியர்களை அங்குக் குடியேற்றி அவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றி அவர்கள் மூலம் படிப்படியாகத் தென்னாப்பிரிக்கர்களையும் நாகரிகமானவர்களாக மாற்ற வேண்டும் என்றுதான் ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள் என்றும்கூட இத்தகைய ஆய்வாளர்கள் எழுதுவார்கள்.

ஒருவகையில் பார்த்தால் இத்தகைய ஆய்வாளர்களைக் குறை சொல்வதில் பொருளில்லை. ஆங்கிலேயர்கள் நம்மை வென்றார்கள்; நாம் அடிமையானோம் என்பது வரலாற்று உண்மை. அடிமைகளின் குரல் என்றைக்குமே வரலாற்றில் இடம் பெற்றதில்லை என்பதும் உண்மைதான். வென்றவர்கள் எழுதி வைத்ததுதான் வரலாறு. இதுதான் வரலாற்றுப் பாடமாக இருந்து வருகிறது. ஆனால், வரலாற்றாய்வு என்பது இந்தப் பாடத்துடன் முடிந்துவிடுவதில்லை. வென்றவர்கள் அந்த வெற்றியை அடைவதற்குக் கையாண்ட உத்திகள் என்னென்ன; தோற்றவர்களின் பலம் எது? பலவீனம் எது? என்பதையெல்லாம் ஆய்வதுதான் வரலாற்றாய்வு. அந்த ஆய்வின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்தான் ஆய்வுப் பாடம்.

இத்தகைய ஆய்வுப் பாடத்தைக் கற்பிக்க வேண்டிய பொறுப்பு வரலாற்று ஆய்வாளர்களுக்கு இருக்கிறது. இதற்கு மாறாக இந்தியர்களிடம் இருந்தது, இருப்பது, இன்று வரை தொடர்வது எல்லாம் பலவீனம் மட்டுமே என்ற பாடத்தையே மீண்டும் மீண்டும் வரலாற்று மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்குக் கற்பித்து வருகின்ற இழிசெயலினையே மேற்குறித்த ஆய்வாளர்கள் தவறாது செய்து வருகின்றனர்.

வரலாறு குறித்த ஒரு தரவினைப் பதிவு செய்வதென்பது ஆய்வின் ஒரு கட்டம். அதற்குப் பொருள் விளக்கம் கூறுவதென்பது ஆய்வின் அடுத்த கட்டம். சாணார்கள் தீண்டத் தகாதவர்களாகவும் அடிமைகளாகவும் இந்து சமூகத்தில் உயர் சாதியினரால் நடத்தப்பட்டனர் என்ற ஒரு கருத்தினை ஆய்வாளர் டிக் கூய்மன் மேற்குறித்த நூலில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் மேலாளர்களிடம் பணிந்து நடத்தல், பிரச்சினைகளை உருவாக்காமல் - கலகம் செய்யாமல் - இருத்தல் போன்ற நற்பண்புகள் அவர்களிடம் காணப்படுவதற்குக் காரணம் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் கற்பிக்கப்பட்ட கட்டுப்பாடு, கடமை உணர்வு ஆகியவைதாம் என்றும் குறிப்பிடுகிறார்.7

அதாவது, இந்த மண்ணின் மைந்தர்கள் வெறும் களிமண் கட்டிகள். இந்தக் களிமண் கட்டிகள் நல்ல வடிவழகு மிக்க பொம்மைகளாக - தலையாட்டி பொம்மைகளாக என்றே வைத்துக் கொள்ளலாமே - உருவாகியுள்ளனர் என்றால் அது பொம்மை செய்தவனின் திறமை காரணமாகத்தான் என்பது போன்ற அப்பட்டமான ஆணவம் மிக்க ஐரோப்பிய மைய நோக்கு இதில் தொனிப்பதைக் காணலாம்.

இதில் ஒரு பெரிய நகைமுரண் என்னவென்றால் சான்றோர் சமூகத்தவரின் பணிவான நடத்தை, அடாவடித்தன்மை இல்லாத அணுகுமுறை போன்றவற்றைப் பற்றி 1846ஆம் ஆண்டில் எழுதுகின்ற ஸாரா டக்கர்,8 இது அவர்களின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று பொருள் கொள்கிறார். சாணார்கள் ஒரு தாசில்தாரைச் சந்தித்து ஒரு புகார் மனு சமர்ப்பிக்க நேர்ந்தால் அலுவலகத் தாழ்வாரத்திற்கு வெளியே நின்று ஜன்னல் வழியாகவே புகார் மனுவைக் கொடுப்பார்கள் என்றும், அவ்வாறில்லாவிட்டால் அலுவலகத்திற்கு அருகிலுள்ள கூரைக் கொட்டகை ஒன்றிற்குச் சென்று தாசில்தார் அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொள்வார் என்றும், சாணார் சமூகத்தவரால் ஏற்படும் தீட்டினைத் தவிர்ப்பதற்காகவே அதிகாரிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

ஒரே விதமான ஆய்வுத் தரவு (அது சரியான தரவுதானா என்ற கேள்வி ஒருபுறமிருக்க) இருவேறு விதமான பொருள் விளக்கங்களுக்கு இடமளித்துள்ள விந்தையை நாம் ஐரோப்பியர்களின் எழுத்துகளில் காணமுடியும். சாணார் சமூகத்தவர் சூத்திரருக்குக் கீழ்ப்பட்ட சாதியினர் என்று ஓரிடத்திலும் (பாகம் 1, பக். 38, ஸாரா டக்கரின் மேற்குறித்த நூல்), சூத்திரர்களுள் உயர்ந்த பிரிவினர் என்று வேறோரிடத்திலும் (பாகம் 2, பக்கம் 49) ஒரே எழுத்தாளர் (ஸாரா டக்கர்) குறிப்பிடுகிற விந்தையையும் காண முடிகிறது.

மறவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சூத்திரப் பிரிவினர் அல்லர் என்றும் ஆனால் சூத்திரரின் சில உட்பிரிவினருக்கு இணையான தகுதி உடையவர்கள் என்றும் இருவேறு விதமாக இவர் எழுதியுள்ளார். (பாகம் 2, பக். 49, மேற்படி நூல்.) மறவர்கள் இராமாயணத்தில் குறிப்பிடப்படும் கரடிகள் மற்றும் குரங்குகளின் வம்சாவளியினராக இருப்பது சாத்தியமானதே என்றும் குறிப்பிடுகிறார். (பக். 49, மேற்படி நூல், பாகம் 2.) ஸாரா டக்கருடைய கடித வடிவில் அமைந்துள்ள தொகுப்பு நூலான மேற்குறித்த நூலில் இந்து மதப் புராண இதிகாச நூல்கள் இந்த நாட்டு மண்ணின் மைந்தர்கள் மீது ஆரியர்கள் படையெடுத்து நிகழ்த்திய தாக்குதல்களின் நினைவுப் பதிவுகளே என்ற விளக்கம் பல இடங்களில் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலிப் பகுதியில் புராடஸ்டண்ட் கிறிஸ்தவப் பணிபுரிந்த ரெவரெண்ட் டக்கர் என்பவரின் மனைவியாகிய ஸாரா டக்கர் பிஷப் கால்டுவெல் போன்றோருடன் நெருங்கிய பழக்கமும் ஒத்த கருத்தும் உடையவராவார். எனவே, ஆரிய திராவிட இனவாதம் என்பது புராடஸ்டண்ட் மிஷனரிமார்களின் செயல் திட்டத்தின் ஒரு முதன்மையான அங்கமாக இடம்பெற்றுவிட்டதில் வியப்பில்லை.

பெரும்பாலான சாணார்கள் மது அருந்துவதில்லை என்ற போதும்கூட கள்ளிறக்கும் தொழிலோடு அவர்களுக்கு இருந்த தொடர்பு இந்து சமயத்தில் அவர்கள் தூய்மையற்ற சாதியினராகக் கருதப்படக் காரணமாயிற்று என்று டிக் கூய்மன் குறிப்பிடுகிறார்.9 லண்டன் மிஷனரி சொசைட்டியின் சார்பில், தென் திருவிதாங்கோட்டுப் பகுதியில் பணிபுரிந்தவர் ரெவரண்டு சாமுவேல் மடீர் (கி.பி. 1835-1893) என்பவராவார். இந்து சமயத்தில் நீண்ட காலமாகச் சமூகக் கொடுமைகளையும் பொருளாதார ஒடுக்கு முறைகளையும் எதிர்த்துப் பேசக்கூட இயலாமல் ஏற்றுக்கொள்ள நேர்ந்ததால் சாணார்கள் பயந்த சுபாவமும் அறியாமையும் நிறைந்தவர்களாகவும் அதனாலேயே ஏமாற்றுகிற குணமுடையவர்களாகவும் உள்ளனர் எனத் தமது பணிக்காலத் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள ரெவரெண்ட் சாமுவேல் மடீர் பின்நாள்களில், சாணார்கள் முயற்சியுடையவர்கள் என்றும், பணத்தைச் சேமிக்கத் தெரிந்தவர்களாகவும் புதிய முயற்சிகளில் இறங்க முன்வருபவர்களாகவும் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.10

சாமுவேல் மடீர் இவ்வாறு முன்னுக்குப்பின் முரண்பாடாக எழுதியுள்ளது வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதால் இக்குழப்பத்தைச் சரி செய்வது தமது கடமை எனத் தற்கால ஐரோப்பிய ஆய்வாளர் டிக் கூய்மன் முடிவு செய்துள்ளார். சாமுவேல் மடீர் முதலில் குறிப்பிட்டுள்ளதே உண்மை என்று கூறும் டிக் கூய்மன், சாணார்கள் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதால் மகிழ்ச்சியடைந்து அவர்களைக் குளிர்விப்பதற்காக சாமுவேல் மடீர் தாம் முதலில் குறிப்பிட்டதற்கு முற்றிலும் முரணாகப் பின்னாள்களில் எழுதியுள்ளார் என விளக்கமளிக்கிறார்.

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இயல்பாக எந்த நற்பண்பும் இருந்ததில்லை என்பது டிக் கூய்மன் போன்ற ஆய்வாளர்களுடைய முடிந்த முடிபு. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய சான்றோர் சமூகத்தவர், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர் என்ற புள்ளிவிவரத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், ஆங்கிலேயர் வழங்கிய கல்வியறிவினைப் பெற்றுத் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக்கொண்ட சாணார்கள் பிறகு நன்றியுணர்வின்றி ஆங்கிலேயர்களையே எதிர்த்தனர் என்றும், நன்றியின்மை என்பது இந்து சமயத்தில் நீண்ட காலம் இருந்ததால் சாணார் குலத்தவரின் இயல்பில் கலந்துவிட்ட ஒன்று என்றும்கூட இத்தகைய ‘ஆய்வாளர்கள்’ எழுதக்கூடும்.

உன்னுடைய வீட்டிற்கு நான் வந்தால் எனக்கு என்ன கொடுத்து உபசரிப்பாய்? என்னுடைய வீட்டிற்கு நீ வந்தால் எனக்கு அன்பளிப்பாக என்ன கொண்டுவருவாய்? என்று கேட்கின்ற மனநிலை போன்றதே இத்தகைய ஆய்வு நோக்கு. விளைந்த நன்மைக்கெல்லாம் பொறுப்பு ஐரோப்பியர்களே; கேடுகள் விளைந்திருந்தால் அவை இந்த மண்ணின் வேரூன்றிவிட்ட மரபுகளால் விளைந்த இழிவுகளே. ஆகா, எவ்வளவு நடுநிலையான ஆய்வுக் கண்ணோட்டம்!

robertcaldwellநெல்லைச் சீமையில் சமயப்பணி புரிந்த பிஷப் கால்டுவெல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” (Comparative Grammar of Dravidian Languages) என்ற நூலை எழுதியவர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றினைத் தொகுத்து History of Tinnevelly என்ற தலைப்பில் கால்டுவெல் எழுதியுள்ளார். அந்த நூலில் அவர், ஆங்கிலேயரை எதிர்த்து 1790 முதல் 1801ஆம் ஆண்டு வரை போராடிய பாளையக்காரர்களைப் பற்றி இழிவான ஒரு சித்திரத்தை உருவாக்க முனைந்துள்ளார்.

பாளையப்பட்டுகளின் வரலாற்றினை ஆங்கிலேயக் கும்பினியினரின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸி கி.பி. 1803-1806ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொகுத்துள்ளார். பாளையப்பட்டுகளை ஜமீன்தாரிகளாக மாற்றியபோது பாளையப்பட்டுகளின் வரலாற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் அந்தந்தப் பாளையப்பட்டின் கணக்கர்கள் போன்ற அலுவலர்களை வைத்துத் தயாரித்துச் சரிபார்த்துக் கைபீதுகள் (Kaifiats) என்ற பெயரில் இவை மெக்கன்ஸியால் பதிவு செய்யப்பட்டன. காலின் மெக்கன்ஸி, சென்னை கலெக்டர் ஃப்ரான்ஸிஸ் வைட் எல்லிஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்விதக் காழ்ப்புணர்வுமின்றி ஓர் அரசு அலுவலரால் தொகுத்துச் சரிபார்க்கப்பட்ட அதிகாரபூர்வமான இவ்வரலாற்று ஆவணங்களை, “கட்டுக் கதையை விட மோசமானவை” என்று குறிப்பிடுகிறார் கால்டுவெல். கால்டுவெல்லைப் பொருத்தவரை இந்தியர்களிடமிருந்து வெளிப்படும் வரலாற்றுச் செய்திகள் அனைத்துமே பொய்யும் புனைசுருட்டும்தாம்.

திராவிட இயலின் பிதாமகனாகப் பலரால் கொண்டாடப்படுகிற கால்டுவெல் எத்தகைய ஐரோப்பிய மையவாத நோக்குடனே தம்முடைய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். மண்ணின் மைந்தர்களை மதம் மாற்ற வேண்டுமென்றால் அவர்கள் மனதிலிருந்து இந்த மண்ணின் மரபுகள் மீதும் தங்களுடைய பூர்விக வரலாறு குறித்தும் இருக்கின்ற பெருமிதத்தோடு கூடிய மரியாதையுணர்வை நீக்கிவிட வேண்டும். அவர்களுடைய தனித்தன்மையான வரலாற்று அடையாளங்கள் எல்லாமே இழிவானவைதாம் என்று போதித்து அவர்களைக் கொண்டே அவர்களின் அடையாளங்களை அழிக்கச்செய்து, அவர்களின் தற்சார்பையும் அழித்துவிட்டால் அவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி ஆங்கிலேயர்களின் மரபும் மதமும்தாம் தங்களை உய்விப்பதற்காக, வாராதவை போல் வந்த மாமணிகள் என்று எண்ணுவதற்கும், ஆங்கிலேயர்கள்பால் விசுவாசம் மிக்க அடிமைகளாக இருப்பதற்கும் அவர்களை ஆயத்தப்படுத்திவிட முடியும் என்பது கால்டுவெல் முதலிய மிஷனரிமார்களின் செயல் திட்டமாகும்.

அதே வேளையில் ஐரோப்பியர்களிலும், குறிப்பாக மிஷனரிமார்களிலும் இத்தகைய காழ்ப்புகள், உயர்வு மனப்பான்மை போன்ற திரைகளை விலக்கிவிட்டு உண்மையை எதிர்நோக்குகிற நேர்மையுணர்வு கொண்ட ஒரு சிலர் இருந்திருக்கிறார்கள். அத்தகையோர் விதிவிலக்குகள் ஆவர். இந்தியக் கிறிஸ்தவம் இந்து சமயத்தின் சாதிய ஒடுக்கு முறைகளிலிருந்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு விடுதலை வழங்கிற்று என்றும், ஆனால் இந்தியக் கிறிஸ்துவத்திலும் சாதி என்ற நச்சரவம் மெல்ல மெல்ல உள்ளே நுழைந்து காலப் போக்கில் படமெடுத்து ஆடத் தொடங்கிவிட்டது என்றும் ஒரு பொய்யான சித்திரத்தை இந்தியக் கிறிஸ்துவ மத நிறுவன அமைப்பு (clergy) வலியுறுத்தி வருகிறது. இன்றைய வெகுஜன அரசியல், வாக்கு வங்கி அரசியல், இட ஒதுக்கீடு அரசியலுக்கு இந்தப் பிரச்சாரம் உகந்ததாகவே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், வரலாறு காட்டும் உண்மை வேறு விதமானது.

1835ஆம் ஆண்டில் ரெவரெண்ட் வில்லியம் டெய்லர் என்ற புராடஸ்டண்ட் போதகரால் Oriental Historical Manuscripts in the Tamil Language என்ற தலைப்பில் தமிழ் ஓலைச்சுவடி இலக்கியங்கள் அச்சிடப்பட்டன. அந்நூலின் 11ஆம் தொகுதி பகுதி C-யில் அதிவீரராம பாண்டியனின் வெற்றி வேற்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அடங்கியுள்ளது. அந்நூலில் “சான்றோரில்லாத் தொல்பதி இருத்தலின் தேன் தேர் குறவர் தேயம் நன்றே” என்ற வெற்றிவேற்கை நூலின் வாசகம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: “Rather than dwelling in an ancient country without rulers it is better to live in the woods among wild people who feed on honey.” இங்குச் சான்றோர் என்ற சொல் ஆட்சியாளர் எனப் பொருள்படும் வகையில் rulers என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கவனத்துக்குரியது.

1865ஆம் ஆண்டில் ஜான் மர்டாக் என்பவரால் Classified Catalogue of Tamil Printed Books என்ற அட்டவணை நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இத்தொகுப்புப் பணியில் ஜான் மர்டாக்குக்கு உதவியவர்களில் ரெவரெண்ட் சற்குணம் வின்ஃப்ரெட் ஐயர் என்ற தமிழறிஞர் (கி.பி. 1817-1879) முதன்மையானவராவார். இவர் சான்றோர் குலத்தைச் சேர்ந்த புராடஸ்டண்ட் மத போதகர் ஆவார். இவர் கால்டுவெல் போன்ற சமயப் பரப்புநர்களுடன் இணைந்து பணியாற்றிய சமகால புராடஸ்டண்ட் மதப் பிரச்சாரகராயினும் தம்முடைய சாதி குறித்த தாழ்வு மனப்பான்மையோ இழிவுணர்ச்சியோ இல்லாதவராவார். இவர் 1870ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட “சான்றோர் குல மரபு காத்தல்” என்ற நூல் பெரும்பாலான மிஷனரிமார்களின் பொய்களைத் தகர்க்கும் ஆற்றலுடைய ஓர் அடிப்படையான நூலாகும். இந்த நூல் இலக்கிய - சாசனச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். திருவெண்காட்டுச் சான்றோர் மடத்துச் செப்பேட்டின் வாசகங்கள் வாசிக்கப்பட்டுப் பொருள் விளக்கத்துடன் வெளியிடப்பட்டிருப்பது இந்நூலில் மற்றொரு சிறப்பாகும்.11

1880ஆம் ஆண்டில் சாமுவேல் சற்குணர் என்ற அறிஞர் “திராவிடச் சத்திரியர்” என்ற நூலின் (பதிப்பு: கலாரத்னாகரம் பிரஸ், சென்னை) முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்:

தென்னிந்தியாவிலுள்ள சாதிகள் சிலவற்றைப்பற்றி இந்நாட்டில் வாழும் ஐரோப்பியர் சிலர் எழுதியுள்ளனர். அவர்களுள் இடையன்குடியிலுள்ள பிஷப் கால்டுவெல்லே தலையாயவர் எனக் கருதலாம். பிஷப் கால்டுவெல்லையே இவ்விஷயத்தில் ஆதாரபூர்வமான ஆய்வாளர் என மற்ற எல்லோரும் கருதுகின்றனர். அவர் திருநெல்வேலிச் சாணார்கள் என்ற நூல் எழுதியுள்ளார். அதன் பிறகும் அவர் எழுதிய சில கட்டுரைகளில், “சாணார்களிடையே நிலவும் சில பழக்கங்களைப் பார்க்கும்போது சூத்திர சாதியில்தான் அவர்களைச் சேர்த்துப் பார்க்கவேண்டும்” என்று ஓரிடத்திலும், “சாணார்களின் சில பழக்கங்களையும் நடைமுறைகளையும் பார்க்கும்போது அவர்கள் சூத்திரர்களைவிடக் கீழான சாதியினராகவே தோன்றுகிறது” என்று ஓரிடத்திலும், “சாணார்களில் சிலர் அவ்வப்பிரதேசங்களின் ஆட்சியாளர்களாகத் தோற்றமளிக்கின்றனர்” என்று ஓரிடத்திலும் முன்னுக்குப்பின் முரணாக எழுதியுள்ளார். இது சிந்தனைத் தெளிவின்மையின் விளைவே.

இத்தகைய உண்மையான வரலாற்றாய்வுக் கருத்துகளுக்கு மகுடம் சூட்டியது போன்று சைமோன்ஸ் பாதிரியாரின் ஒரு குறிப்பு அமைந்துள்ளது. “ஜாதிப் பெருமிதம் குல அபிமானம் போன்ற விஷயங்களைக் கிறிஸ்துவ மதம் அங்கீகரித்ததால்தான் இந்தியாவில் கிறிஸ்துவ மதம் இந்த அளவிற்குப் பரவ இயன்றது” என்று அவர் குறிப்பிடுகிறார். “சாதிக் கொள்கை (பழக்க வழக்கங்கள்) சிலவற்றை மாற்றாமலே கிறிஸ்து மதத்தை அனுசரிக்க இடங்கொடுத்திருந்ததால் இந்தியாவிலுள்ள சகல சாதிகளிலும் (சாதி ஹிந்துக்களிலும்) குலாபிமான விஷயமாய் மகா ரோஷம் மானம் பாராட்டும் சாதியான சான்றோர் தங்களுக்கு இடுக்கண் மிகுதியாயிருந்த காலத்தில் பெருந்தொகையினராய்க் கிறிஸ்து மதத்தில் சேரும்படியாயிற்று” என்று சைமோன்ஸ் பாதிரியார் எழுதியுள்ளார்.12

“தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற நமது நூல் ஐரோப்பிய மைய நோக்கிற்கு மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவின் பொற்காலம் குறித்த புளகாங்கித உணர்வுடன் எழுதப்பட்ட நூலன்று. கூடுமானவரை நடுநிலையுடன் ஆவணங்களை ஆராய்ந்து உண்மையைப் புலப்படுத்தும் நோக்கில் எழுதியுள்ளோம். சான்றோர் குலத்தவர்களுக்கும், வேளாளர்-நாயர் குலத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உயர்ந்த சாதியினர்க்கும் தாழ்ந்த சாதியினர்க்கும் இடையே ஏற்பட்டது அன்று. வீழ்ந்துபட்ட பழைய ஆட்சியாளர்களுக்கும், புதிய ஆட்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் திருவிதாங்கோடு பகுதியின் முதன்மையான சில சமூகத்தவர்களான ஈழவர் (இல்லத்துப் பிள்ளைமார்), முக்குவர்-பரதவர், இஸ்லாமியர்கள் போன்றோர் எந்தப் பங்கும் ஏற்காமல் ஒதுங்கி நின்றது; சில வேளைகளில் சான்றோர் சமூகத்தவர்க்கு எதிராக இயங்கியதும் ஏன்?

மேற்குறிப்பிட்ட சமூகத்தவருள் ஈழவர் சமூகப் பெண்டிர் நூற்றுக்கு நூறு சதமானத்தினரும் முக்குவர் சமூகப் பெண்டிருள் பெரும்பாலானோரும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இடுப்புக்குமேல் உடை உடுத்தாமலேயே இருந்துள்ளனர் என்பதற்கு நிழற்பட ஆதாரங்கள் உள்ளன. முக்குவர் சமூகத்துப் பெண்டிருள் மிகக் குறைந்த சதமானத்தினர் முலைக்கச்சு என்று சொல்லக்கூடிய மார்புக் கச்சையை மட்டும் அணிந்திருந்ததாகச் சில குறிப்புகளால் தெரியவருகிறது. தோள்சீலை என்பது எஜமானர்கள் அல்லது ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்டிர் மட்டுமே அணிவதற்கு உரிமை உடைய ஆடையாகும். தாங்கள் இந்த மண்ணின் எஜமானர்கள்தாம் என்ற தம் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையிலேயே சான்றோர் குலப் பெண்டிர் தொடர்ந்து தோள்சீலை உடுத்து வந்தனர்.

சமூகப் பொருளாதார அடுக்கில் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட புதிய ஆட்சியாளர்களான நாயர்கள் தங்கள் குலப் பெண்டிர்க்குக்கூட மரபுப்படி உரிமையல்லாத ஒரு வழக்கத்தினைத் தங்களைவிடச் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் கீழான நிலைக்கு வந்துவிட்ட சான்றோர் குலத்தைச் சேர்ந்த பெண்டிர் இயல்பாகக் கடைபிடித்து வருகிறார்களே என்ற ஆத்திரத்தில் அராஜகச் செயல்களில் ஈடுபட்டனர். சான்றோர் சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்களே இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயினர் என்பதால் உயர்மட்டச் சான்றோர் குலப் பிரிவினர் தமக்கு இப்பிரச்சினையில் எந்தவிதத் தொடர்பும் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு அமைதிகாத்தனர். சான்றோர் சமூகத்தவர் ஓரளவு சமூகப் பொருளாதார அந்தஸ்தைக் காத்து வந்த ஊர்களில் நாயர்-வேளாளர் சமூகத்தவர் அவர்களுக்கெதிரான அராஜகச் செயல்களிலும் ஈடுபடவில்லை. கலகத்தின் இறுதிக்கட்டங்களில்தான் உயர்மட்டச் சான்றோர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கினர். நாயர் சமூகத்தவர்கள் சான்றோர் குலப் பெண்டிருக்கு எதிராக எத்தகைய அராஜகங்களில் இறங்கினார்களோ அதற்குச் சற்றும் குறையாத வகையில் சான்றோர் குலத்தவரும் பதிலடி கொடுத்தனர்.

ஆனால் இத்தகைய எதிர் நடவடிக்கை பரவலாக எல்லா ஊர்களிலும் நிகழவில்லை. நாயர்-வேளாளர் சமூகத்தவர் எண்ணிக்கையிலும் பொருளாதாரத்திலும் வலிமையுடன் இருந்த திருவிதாங்கோடு, பத்மநாபபுரம் முதலிய அரசின் மையப் பகுதிகளிலும் இன்றைய விளவங்கோடு வட்டம் பாறைச்சாலை, திருவனந்தபுரம் முதலான இடங்களிலும் சான்றோர் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாகப் பல குற்ற வழக்குகள் பதிவாகின. ஆயினும், காவல்துறை, வருவாய் நிர்வாகத்துறை போன்ற அதிகாரம் மிக்க துறைகளில் பதவி வகித்தோருள் நாயர்-வேளாளர் சமூகத்தவர்களே பெரும்பான்மையினராக இருந்ததால் அராஜகத்தைத் தொடங்கிவைத்த நாயர்-வேளாளர் சமூகத்தவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நீதிபதி போன்ற செல்வாக்கு மிக்க பதவிகளில் இருந்த ஆங்கிலேயர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாதிக்கப்பட்ட சான்றோர் சமூகத்தவர்கள் பலரை மதமாற்றம் செய்ததோடு அவர்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பாதுகாப்பும் தார்மீக ஆதரவும் கிடைக்க வகை செய்தனர். தோற்ற அரசியல் கட்சிக்கும், வென்று ஆட்சியைப் பிடிக்கும் கட்சிக்கும் நடக்கும் சண்டையில் தொடர்பின்றி ஒதுங்கி நின்ற மூன்றாம் அணியினர் மற்றும் நடுநிலையாளர்கள் போல ஈழவர் சமூகத்தவர்களும், பிறரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வர்ணாஸ்ரம அமைப்புப்படி வேளாளர் என்ற சாதி சூத்திரர் என்ற நான்காம் வருணப் பிரிவைச் சேர்ந்ததாகும். நாயர் மற்றும் வேளாளர்கள் சூத்திரர்கள் என்றுதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 19-20ஆம் நூற்றாண்டின் அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அந்தணர் ஈன்ற காராளர், அரசர் ஈன்ற காராளர் என்ற இரண்டு வகையான வேளாளர்கள் தமிழ் இலக்கண நூல்களில் குறிப்பிடப்படுகின்றனர். இரண்டு பத்திரி வழி வேளாளர்கள் எனக் கி.பி. 15ஆம் நூற்றாண்டுக்குரிய தென்காசிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பரசுராம க்ஷேத்திரம் என்று பெருமிதத்தோடு குறிப்பிடப்படும் கேரளத்தில் நம்பூதிரி பிராம்மணர்களின் பிள்ளைகள் என்று சொல்லத்தக்க நாயர் சமூகத்தவர்கள் 18-19ஆம் நூற்றாண்டுகளில் ஆதிக்க சமூகத்தவராக உயர்ந்தனர். அரசர் ஈன்ற காராளர் என்று சொல்லத்தக்க ஈழவர் (இல்லத்துப் பிள்ளைமார்) சமூகத்தவர் தங்களைச் சூத்திரர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டதில்லை. ஆயினும், சான்றோர் சமூகத்தவருடன் அவர்களுக்கு இருந்த உறவு நெடுங்காலத்துக்கு முன்னரே அற்றுப் போய்விட்டதாலும் அவர்கள் தங்களை ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாததாலும் நிலவுடைமை உறவுகளில் நாயர் - வேளாளர் அணியினரின் எஜமானத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டாலும் பல வேளைகளில் நாயர் சமூகத்தவரின் பொதுமைப் பண்பாகிய மருமக்கள் தாயத்தைப் பின்பற்றியதாலும் நாயர் சமூகத்தவருக்குக் கட்டுப்பட்டு அடங்கி எதிர் நடவடிக்கை எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தனர்.

குமரி மாவட்ட ஈழவர்களைப் பொருத்தவரை, அவர்கள் தோவாளை தேசத்திலுள்ள சில ஊர்களில் தாங்கள் அரச பரம்பரையினர் எனக் கூறிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரிவசூலித்தலில் ஈடுபட்டனர் என்றும், இதனை 1818ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் (கொல்லம் 993, மீனம் 10) திருவிதாங்கூர் அரசர் ஆணையிட்டுத் தடுத்துவிட்டார் என்றும் தெரிகின்றன.13 தோவாளைப் பகுதியிலுள்ள திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான நம்மாழ்வார் தாயாரின் பூர்விக ஊராகும். நம்மாழ்வாரின் தாயார் ஈழவர் குலத்தவராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. நம்மாழ்வாரின் தந்தை மாறன்காரி, திருவழுதிவளநாட்டு (தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்ட) சிற்றரச மரபினராவார். இவர் சான்றார் மரபினர் எனக் கருதுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அடிப்படையிலேயே தோவாளைப் பகுதியில் ஈழவர்கள், தாங்களும் அரச பரம்பரையினரே எனக் குறிப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரிகிறது.

பூர்விக அரச குலத்தவரான சான்றோர் குலத்தவருக்கு எதிராக வேளாளர் சமூகத்தவரின் எழுச்சி என்பது வேணாடு எனப்பட்ட பின்னாளைய திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று. அந்த வரலாற்றை முழுப் பரிமாணங்களுடன் இந்த ஆய்வு நூலின் தொடக்க அத்தியாயங்களில் நாம் காண இருக்கிறோம். அதனுடைய இறுதிக் கட்டம்தான் தோள் சீலைக் கலகம். இது ஒரு சமூகப் புரட்சி என்பதைவிட சமூக-அரசியல் நிகழ்வு என்றுதான் கூறமுடியும். 20ஆம் நூற்றாண்டில் பிராம்மண சமூகத்தவருக்கு எதிராக பிராம்மணர் அல்லாத சாதிகளின் எழுச்சி நீதிக் கட்சி (Justice Party) என்ற பெயரிலும் திராவிட இயக்கம் என்ற பெயரிலும் உருவானது போன்றே பூர்விக அரச குலத்தவரான சான்றோர் சமூகத்தவருக்கு எதிராகத் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் சாதி இந்துக்களான வேளாளர்-நாயர்களின் அதிகாரம் சார்ந்த ஆதிக்க நடவடிக்கை அமைந்தது. எனவே, இது முற்றிலும் சமூக அரசியல் நிகழ்வே.

வீழ்ந்துபட்ட முன்னாள் அரசியல் ஆட்சியாளர்களான சான்றோர் சமூகத்தவர்கள் புதிய ஆட்சியாளர்களால் இழிவுபடுத்தப்பட்டது புதுமையானதன்று. உலக வரலாற்றில் இதற்கு முன்னோடி நிகழ்வுகள் ஏராளம் உண்டு. யூதர்களின் நாட்டைக் கைப்பற்றிய ரோமானியர்கள் யூதர்களை அடிமைப்படுத்தியதோடு, யூதர்கள் படைக்கலன்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், குதிரையில் சவாரி செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டனர். அது போன்றே, திருவிதாங்கோட்டு சமஸ்தானத்தில் நாயர்-வேளாளர்கள் சான்றோர் குலத்தவரின் அதிகாரங்களைச் சிறுகச் சிறுகப் பறித்ததோடு அடிமைப்படுத்தவும் முனைந்தனர். ஆங்கிலேயக் கும்பினி அரசின் ஆட்சி இந்தியாவில் ஏற்படாமல் இருந்திருந்தால் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் இருந்த சான்றோர் குலத்தவரின் நிலை என்னவாக ஆகியிருக்கும் என்பது பரிசீலனைக்குரிய ஒரு கேள்வியாகும்.

நிச்சயமாகச் சான்றோர் குலத்தவர்களுள் பெரும்பகுதியினர் அடிமை நிலைக்கு உடன்பட்டு வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவது என்ற நிலையை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். தாம் வாழ்ந்த பூர்விக ஊர்களை விட்டு நீங்கிச் சான்றோர் சமூகத்தவர் ஓரளவு சமூக அந்தஸ்துடன் வாழ்ந்த பகுதிகளில், அதாவது இன்றைய தோவாளை அகஸ்தீஸ்வரம் வட்டங்களில் குடியேறவோ அங்கும் நிர்ப்பந்தங்கள் நீடித்தால் திருவிதாங்கோடு சமஸ்தானத்தை விட்டே நீங்கி வேறு இடங்களில் குடியேறி வணிகத்திலும் பிற வகை உடலுழைப்புகளிலும் ஈடுபட்டுத் தங்களைத் தற்காத்துக் கொண்டிருக்கவோ செய்திருப்பார்களே தவிர அடிமை நிலைக்கு உடன்பட்டு இருந்திருக்க மாட்டார்கள். சான்றோர் சமூகத்தவர்களின் எதிர்வினை என்பது இத்தகைய ஆக்கபூர்வமான ஒரு செயல்பாடாகவே இருந்துவந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

இவ்வாறெல்லாம் இருப்பினும் தாங்கள் சார்ந்துள்ள சாதி மதங்களின் விருப்பு வெறுப்புச் சாயல் படிந்த கண்ணோட்டத்துடனும் அரசியல் உள்நோக்கத்துடனும்தாம் பல ஆய்வாளர்கள் தோள்சீலைக் கலகம் பற்றித் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.

கிறிஸ்தவ மிஷனரிமார்களின் அரசியல் நலன்களுக்கு உகந்த ஆய்வுகள் வலிமையான கல்விப் பின்புலத்துடன் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பரவலான விளம்பரமும் கிட்டிவருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், இந்தியாவிலேயே ஒப்பீட்டளவில் கிறிஸ்துவ சமயம் அதிக எண்ணிக்கையுடைய மக்களால் பின்பற்றப்படும் முதன்மையான ஒரு நிலப்பரப்பாகும். மிஷனரிமார்களின் கடாட்சத்தால்தான் அடிமைகளாய் இருந்த சான்றோர் சமூகத்துப் பெண்டிர் தோள் சீலை உடுத்துகின்ற சலுகையைப் பெறமுடிந்தது என்ற பொய்யைக் கோயபல்ஸ் பாணியில் திரும்பத் திரும்ப வலியுறுத்தினால்தான் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகின்ற சான்றோர் சமூகத்தவருக்கு இம்மதத்தின்பால் நன்றியும் விசுவாசமும் நீடிக்கும் என்பதாலும், இந்து சமயத்தைப் பின்பற்றி வருகிற சான்றோர் சமூகத்தவரையும் கிறிஸ்தவ மதத்திற்குக் கொண்டுவந்து சேர்க்க முடியும் என்பதாலும்தான் ஒரே பொய் திரும்பத் திரும்ப வலியுறுத்தி எழுதப்பட்டு வருகின்றது.

தம் பூர்விகப் பெருமிதத்தைச் சான்றோர் சமூகத்தவர் உணர்ந்துவிட்டால் அவர்களிடத்தில் இந்து மதத்தின்மீது ஊட்டப்பட்டுள்ள துவேஷ உணர்வு குறைந்துவிடும் என்ற எண்ணம்கூட இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இழிந்த நிலையிலிருந்த சாணார் சமூகத்தவர்களைத் தங்களது தன்னலமற்ற தொண்டும், தாங்கள் வழங்கிய கல்வியும்தான் எழுச்சி பெறச்செய்து சமூகப் புரட்சியில் ஈடுபட வைத்தது என்ற சித்திரத்தை ஒரு முன்னுதாரணமாக இந்து சமூகத்தின் பிற விளிம்பு நிலைச் சாதியினர் மனத்தில் பதியச் செய்வதும் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களுக்குரிய உள்நோக்கமாக இருக்கக்கூடும்.

நாம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கின்ற கொள்கைகளுக்கு உகந்த வகையிலும், உயர்த்திப் பிடிக்கின்ற கொடிகளின் வண்ணங்களுக்குத் தகுந்த வகையிலும் ஆவணங்களுக்குப் பொருள் விளக்கம் சொல்லி எழுதுவதென்பது பிரச்சாரமாகுமே தவிர ஆய்வாகாது. அதே வேளையில் பழியையெல்லாம் பிறர் தலையில் சுமத்துவதன் மூலம் நெஞ்சத்தில் கனக்கின்ற குற்றச்சுமையைத் தவிர்க்க முயல்வது நியாயமற்ற முயற்சியாகும். எனவே, இந்த இரு வேறு துருவ நிலைகளாலும் ஈர்க்கப்பட்டுவிடாமல் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் நோக்கில் நியாயமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வகையில் இது ஒரு முன்னோடி ஆய்வாக இருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். இருக்குமென்று நம்புகிறோம்.

அடிக்குறிப்புகள்:

1. பக். 91. “திருவிதாங்கூரில் சான்றோர் மக்கள் புரட்சி” என்ற பெயரில் தமிழாக்கம்: இளந்தோட்டம் சுகுமாறன்.

2. மொழிபெயர்ப்பாளர் இளந்தோட்டம் கு. சுகுமாறன், விளவங்கோடு வட்டம் கிள்ளியூர் துரத்தார் வம்சத்தவர் என்பதை “இளந்தோட்டம் கு. சுகுமாறன் சுயசரிதை”யில் பதிவு செய்துள்ளார். சமுதாய சிந்தனை சிறப்பு மலர் - Kanyakumar Institute of Development Studies, Nagercoil - 629001, 2007. துரத்தார் அல்லது துரக்காரர் பதவி குறித்தும் இந்நூலில் உரிய இடத்தில் விளக்கப்படும்.

3. 1881 முதல் 1891ஆம் ஆண்டுவரை கால்டுவெல் கொடைக்கானலில் இருக்க நேர்ந்தது. அது குறித்து இந்நூலில் உரிய இடத்தில் விவரிக்கப்படும்.

4. Robert Caldwell - A Scholar Missionary in Colonial South India, Y. Vincent Kumaradoss, ISPCK, New Delhi - 110006, 2008. இந்நூலில் இக்கருத்து பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. பக். 106, “திராவிடச் சான்று - எல்லிஸும் திராவிட மொழிகளும்”, தாமஸ் டிரவுட்மன், தமிழில்: இராம. சுந்தரம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2007.

6. Dick Kooiman எழுதிய இந்நூல் மிகச்சிறந்த ஆய்வுத் தரத்துடன் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மையே. நமது ஆய்வுக்கு மிகவும் பயன்பட்ட நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.

7. pp. 201-202, Conversion and social equality in India: The London Missionary Society in south Travancore in the 19th century, Dick Kooiman, Manohar Publishers, New Delhi - 110002, 1989.

8. p. 38, South Indian Sketches, Sarah Tucker, James Nisbet and Co., London, 1842.

9. p. 17, Conversion and Social equality in India.

10. p.41, Land of Charity, Samuel Mateer, first published in 1872, republished by Asian Educational Services.

11. இச்செப்பேடு தற்போது எங்குள்ளதென்பது தெரியவில்லை.

12. எம்.டி.சி. காரியதரிசியாக இருந்த ரெவ. ஏ.ஆர். சைமோன்ஸ் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள சான்றோர் குலத்தவரிடையே விஜயம் செய்துள்ளார். அப்போது அவர் தெரிவித்த கருத்துதான் இது. (பக். 68, நாடார் குல வரலாறு. ஜெ.எம். குலசேகரராஜ், அச்சிட்டோர்: டார்லிங் பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1918.)

13. The Travancore State Manual, V. Nagam Aiya, Vol III, pp. 563-564. Printed at the Travancore Government Press, Trivandrum, 1906.

இரண்டால் பால், -பெண்களின் வேதநூல்

இரண்டால் பால்,
-பெண்களின் வேதநூல்
மீனாட்சி
பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற பெண்ணியம் என்னும் சொல் உலகளாவியது. பெண்ணியம் என்ற சொல் ஆங்கிலத்தில் Feminism என்று சொல்லப்படுகிறது. இச்சொல் லத்தீன் மொழியில் உள்ள பெமினா (Femina) பெண்ணின் தன்மைகள் உடைய (having the qualities of women) என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததாகும். அதாவது பெண்ணின் உடற்கூறு பற்றிக் குறிப்பிட இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் பெண்ணியம் என்ற இச்சொல்லே பெண்களின் உரிமைப்பற்றிப் பேசவும் உபயோகப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் இச் சொல்லாடல் பெண் விடுதலை, பாலின சமவுரிமை, மகளிரியல் போன்றவற்றிற்கும் கையாளப்படுகிறது. உலகநாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலேயே கருக் கொண்ட பெண் விடுதலைச் சிந்தனைகள் இந்தியாவைப் பொறுத்த வரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் வேர் பெற்றன.

உலகம் முழுவதிலும் ஏராளமான பெண்கள் பெண்ணியத்தின் வளர்ச்சிக்கு அடிகோலி இருக்கிறார்கள். பதினேழாம் நூற்றாண்டின் "அப்ராபென்'' தொடங்கி இன்றைய "கேட்மில்லட்' வரை நிறையப் பெண்கள் பெண்ணுரிமைக்காகப் போராடியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். அமெரிக்க எழுத்தாளரான கேட் மில்லட் எழுதிய "பாலின அரசியல்'' என்ற நூல் 1970ல் வெளிவந்தது. பெண் விடுதலைக் கருத்துக்களின் மிகப்பெரிய எழுச்சிக்கு இந்நூல் வித்திட்டது, எனில் அது மிகையன்று.

இதற்கு முன்பாகவும் பல பெண்கள், பெண்கள் நிலை பற்றியும் அதனின்றும் மீள வேண்டியதன் தேவை பற்றியும் பற்பல சிந்தனைகளை நூலாக்கி வைத்தனர். அவற்றுள் மேரி வோல்ஸ்டன் கிராப்ட் எழுதிய பெண்ணுரிமைக் கொள்கை நிறுவீடு (The Vindication of the Rights of Women) ஜான் ஸ்டூவர்ட் மில் எழுதிய ""பெண்ணடிமை நிலை'' (The Subjection of Women) பெட்டி ஃபினாட்னன் எழுதிய "பெண்ணியல்பு நிலை'' (Feminism Mystique) மற்றும் சைமன்டிபெவாயர் (Simon-de-Beauvoir) எழுதிய ""இரண்டாம் பால்'' (The Second Sex) போன்ற நூல்கள் பெண்களை மற்றும் பெண்ணினத்தின் வரலாற்றை மாற்றுவதற்குப் பெரிதும் உதவி இருக்கின்றன.

இத்தகைய தலைசிறந்த பெண்மணிகளுள் ஒருவரான சைமன்டிபெவாயர் பிரெஞ்” நாட்டவர். இவர் கதாசிரியர், கட்டுரையாளர், தத்துவஞானி மற்றும் பெண்ணியவாதி என்றழைக்கப்படும் பன்முக ஆற்றல் நிறைந்தவர். இவர் 1949ம் ஆண்டு எழுதிய "இரண்டாம் பால்'' எனும் நூல் பெண்ணியத்தின் வேதநூல் என்று போற்றப்படுகிறது. சமூகப் படிநிலைகளின் வளர்ச்சியினூடே, பெண் எவ்வாறு இரண்டாமிடத்திற்குத் தள்ளப்படுகிறாள் என்பதை இந்நூல் உளவியல் பூர்வமாக விளக்கிச் சொல்கிறது.

நவீன சமுதாயங்கள் அனைத்துமே தந்தை வழிச் சமூகமாகவே அமைக்கப்பட்டுள்ள காரணத்தால், பெண்கள் ஆண்களை விடத் தாழ்ந்தவர்கள், பலவீனமானவர்கள் என்ற கருத்தை ஒட்டு மொத்த சமூகமும் பிரதிபலிக்கிறது. ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதைப் பெண்ணியவாதிகள் ஏராளமான சான்றுகளோடு மறுத்தனர்

சைமன்டி பெவாயர் தனது நூலான இரண்டாம் பாலில் பெண்களின் தாழ்வு நிலை என்பது அவர்களுடன் பிறந்ததல்ல; சமூகத்தால் உருவாக்கப்பட்டது என்பதைத் அழுத்தமாக வெளிப்படுத்தினார். "ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை, பெண்ணாக உருவாக்கப்படுகிறார்'' என்பதே அந்நூலில் உள்ள புகழ்பெற்ற மேற்கோளாகும். மிகவும் பிரபலமான இந்த மேற்கோள் பெண்ணியம் குறித்த அனைத்து விவாதங்களிலும் இடம் பெற்று பெண்ணிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் அடிகோலியது. அந்நூல் ஆண்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டாலும், பெவாயர் துணிச்சலுடன் இருபாலரின் சம உரிமையை வலியுறுத்தினார். குறிப்பாக பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை முன்வைத்துப் போராடினார்.

சைமன்-டி-பெவாயர் 1908ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 9ம் நாள் பிறந்தார். தந்தையின் பெயர் ஜார்ஜ் பெர்ட்டிரண்ட்-டி-பெவாயர், தாய் பிரான்சு வாஸ் ப்ரஸர் என்பவர். ரோமன் கத்தோலிக்கக் குடும்பம் எனினும் சைமன் சமூகம் மற்றும் மதம் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தையும் அறவே ஒதுக்கினார். சோர்போன் பல்கலைக் கழகத்தில் வேதாந்தம் பயின்று பின்னர் அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். அங்கு ஜான்பால் மர்த்ரெ என்ற பிரெஞ்சுத் தத்துவ ஞானியுடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பு அவரது வேதாந்த கருத்துக்களின் முன்னேற்றத்திற்கும், வெளிப்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருந்தது.

சைமன் 1970ம் ஆண்டிற்குப் பிறகு பெண்கள் விடுதலை இயக்கத்தில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 1971ம் சீசல் ஹலினி என்கிற வக்கீலுடன் சேர்ந்து “சுவாசிர்'' என்னும் இயக்கத்தைத் துவங்கினார். அப்போது பிரான்சு நாட்டில் பெண்கள் கருத்தடை உரிமைக்காகவும், சட்டபூர்வ கருக்கலைப்பு உரிமைகேட்டும் பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். 1971ம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி "லா நூவெல் ஆப்ஸர் வேட்டர்'' என்கிற பிரெஞ்சுப் பத்திரிகை 343 பெண்களின் கையெழுத்தோடு ஒரு மனுவைப் பிரசுரித்திருந்தது. அதில் பெரும்பாலான பெண்கள் பிரபலமானவர்கள். இந்தப் பெண்கள் அனைவரும், தாங்கள் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும், அதற்கான தண்டனைக்கும் மற்றும் சிறை செல்லவும் தயாராய் இருப்பதாகவும், அந்த மனுவில் உறுதிப்பூர்வமாக பிரகடனப்படுத்தி இருந்தனர்.

bovayar
பிரெஞ்சுப் பெண்களின் துணிகரமான இந்த நடவடிக்கை ஆணாதிக்கவாதிகளால் மிகுந்த அவதூறுக் குள்ளானது. சைமன்-டி-பெவாயர் இந்த அறிக்கைக்குத் தலைமையேற்று, தானும் அதில் கையெழுத்திட்டிருந்தார். இந்த நடவடிக்கை "தி மானி பெஸ்ட் ஆஃப் 343'' என்றழைக்கப் பட்டதோடு நாட்டின் மிகப் பெரிய சட்டப் புறக்கணிப்பிற்கு ஒரு சான்றாக நின்றது. இதில் கலந்து கொண்ட பெண்ணிய வாதிகளில் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பிற்காலத்தில் பிரான்சில் அமைச்சரான "வெட் ரூடி'' போன்றோர் இருந்தனர்.

இந்த மாபெரும் சட்டப் புறக்கணிப்பு ஏற்படுத்திய தாக்கத்தினால் 1973ம் ஆண்டில் 331 மருத்துவ வல்லுநர்கள் கூடி கருத்தடை செய்ய உரிமை கோரி ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். இது போன்ற தொடர் நடவடிக்கைகளால் 1974ல் வெலில் சட்டம் (Viel Law) உருவானது. இதன் மூலம் பத்து வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வ மாக்கப்பட்டது. பின்னர் அதுவே 12 வாரங்களாக மாற்றம் பெற்றது. இவ்வெற்றி பிரெஞ்சுப் பெண்ணிய வாதிகளின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்பட்டது.


சைமன்-டி-பெவாயர் தலைமையேற்று நடத்திய நடவடிக்கை வெற்றி பெற்றதைப் போன்றே அவரால் 1949ம் ஆண்டு பிரெஞ்சுமொழியில் எழுதி வெளியிடப்பட்ட இரண்டாம் பால் என்னும் நூல் பெருத்த ஆதரவைப் பெற்று, 1952ல் The Second sex என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்தது. உலகமெங்கும் பலமுறை பதிப்பிக்கப் பெற்ற இந்நூல் பெண்ணியத்தின் வேதநூல் என்று போற்றப்பட்டதோடு, அதனை உருவாக்கிய பெவாயர் "பெண்ணியத்தின் தாய்'' என்று அழைக்கப்பட்டார்.

மதங்கள், மூடநம்பிக்கைகள், சனாதனக் கோட்பாடுகள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாக பெண்களைப் பற்றி ஆண்கள் உருவாக்கிய போலியான கட்டுக்கதைகளை அந்த நூலில் சைமன் வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு சம்பவத்திலும் ஆண் தன்னை முன்னிலைப் படுத்தியதையும், பெண்ணைப் பின்னுக்குத் தள்ளியதையும் ஆதாரங்களோடு விளக்கினார்.

கேட் மில்லட்

katmittan பெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதப்பட்ட அந்த நூலில் "ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை'' என்றே சொல்லப்பட்டிருப்பதாக சைமனுக்கு எதிரானோர் புரளி கிளப்பினர். ஆனால் உண்மையில் ஆண், பெண் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் பாரம்பரியத்தாலும், கலாச்சாரத்தாலும் வந்நதே தவிர இயற்கையானது அல்ல என்பதைத் தான் பெவாயர் அந்நூலில் உறுதிப்படுத்தி இருந்தார். பெண்ணுக்கு இந்த உலகம் கொடுத்தது கொடுக்காதது, புறக்கணிப்புகள் - சாதனைகள் என்பதைப் பல கோணங்களில் அவர் ஆய்வு செய்திருந்தார்.


செயின்ட் தாமஸ் என்பார் பெண்ணை "முழுமை பெறாத மனித இனம்'' என்றறிவித்தார். இவ்வாறு மனித இனம் என்பது ஆண் மட்டும் தான். பெண், ஆணைச் சார்ந்தவள்; தனித்துவம் அற்றவள் என்றே சமூகம் கருதி வந்திருக்கிறது. சில தன்மை குன்றிய பண்புகளால், பெண் பெண்ணாகவே இருக்கிறாள் என்றும், "அந்தப் பெண்களை இயற்கைக் குறைபாடுள்ளவர்களாகவே நாம் காண வேண்டும்'' என்றும் அரிஸ்டாட்டில் குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத் தக்கது. கிறித்துவத்தின் வேத நூலோ பெண்ணை ஆணின் விலா எலும்பிலிருந்து உருவானவள் என்று கூறி அறிவியலையே புறக்கணிக்கிறது.


இத்தகைய கடுமையான சூழ்நிலைகளில் பெண்ணினத்திற்கெனப் போராடிய சைமன்-டி-பெவாயர் தலைசிறந்தவராகப் போற்றப்படுகிறார். பெண்களின் விடுதலைக்காக ஒரு பெண்ணே போராடும்போது போராட்ட உணர்வுகள் கூர்மை பெற்று மதிப்புப் பெறும் என்ற உண்மை பெவாயரின் வாழ்க்கை மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1986ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் உயிர்நீத்த பிரெஞ்சுப் பெண்ணியவாதி சைமனின் புகழ் பாலின உரிமை பெற்ற சமத்துவ சமூகத்திலும் நிலைத்திருக்கும்!

Friday, July 30, 2010

விளிம்பு நிலை மக்களின் குரல்தான் மையத்திற்குப் பெரிய சவால்'


பின்காலனியச் சொல்லாடலைக் கட்டமைத்ததில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகி வா தியாங்கோ(சஞ்ன்ஞ்ண் ரஹ பட்ண்ர்ய்ஞ்ர்) 1938இல் ஆப்பிரிக்காவில் 'வெள்ளையின மேட்டுப் பகுதி' (ரட்ண்ற்ங் ஏண்ஞ்ட் கஹய்க்ள்) என்று அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட கென்யாவில் பிறந்தவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 20ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்களில் நடத்தப்பட்ட 'மாவ் மாவ்' (ஙஹன் ஙஹன்)ஆயுதப் போராட்டச் சூழலில் வளர்ந்த இவர் தமது எழுத்துக்களில் காலனிய எதிர்ப்புக் கருத்தாக்கத்தை மிக ஆழமாக முன்வைத்தார். சுதந்திரத்திற்குப் பிந்தைய கென்யாவின் நிலைபற்றியும், அங்குள்ள அரசியல்வாதிகளையும் விமர்சித்து அவர் எழுதிய டங்ற்ஹப்ள் ர்ச் ஆப்ர்ர்க் நூல் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் விளைவாக 1977இல் இவர் கைது செய்யப்பட்டார். நாடுகடத்தப்பட்ட இவர் 1993வரை அமெரிக்காவில் உள்ள யேல் (வஹப்ங்)பல்கலைக்கழகத்திலும் அதன்பின் இன்றுவரை நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துவருகிறார்.
இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் தனித்தன்மையோடு இருக்கின்றன. இயற்கையின் பெரும் ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஒரு பூவின் நிறமும், வடிவமும் ஒருபோதும் பிறிதொன்றை ஒத்திருப்பதில்லை. எந்தப் பறவையும் வேறொரு பறவையின் குரலில் பாடுவதில்லை. இந்தத் தனித்தன்மை கூற்றினை மனிதனைத் தவிர பிற அனைத்து உயிரினங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. மனிதன் மட்டுமே பிற மனிதனின் தனித்தன்மையை ஏற்க மறுப்பதோடு, தனது ஆளுமையை பிறர் மீது திணிக்கவும் முயல்கிறான். எல்லா மனிதர்களும் தமது ஆதிக்கத்தை சக மனிதர்கள் மீது செலுத்தும் முயற்சியிலேயே தமது வாழ்நாளின் பெரும் பகுதியையும், தம் ஆற்றலின் பெரும் பகுதியையும் செலவிடுகின்றனர். அதற்கு இயல்பான தனித்தன்மைகளை விடுத்து, செயற்கையான சில அடையாளங்களை ஆதிக்கத்தின் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். சாதி, நிறம், மதம், பாலினம், மொழி, பண்பாடு ஆகியவை ஒடுக்குமுறைக்குப் பயன்படும் ஆயுதங்களாக அவர்களிடம் மாறுகின்றன. இந்த ஆதிக்கத் திணிப்பால் தனது அடையாளத்தை ஒருவன் இழக்க நேரிடும்போது, அதை மீட்டெடுக்கத் துணிகிறான். அவனைப் பொறுத்தவரையில் அடையாள மீட்புக்கென அவன் நடத்தத் துணியும் போராட்டம், அவன் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்கானப் போராட்டத்துக்கு இணையானது. சில நேரங்களில் அதைவிடவும் மேலானது!

Koogi vaa tiyange
தமது மொழியையும், இலக்கியத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் ஆப்பிரிக்க படைப்பாளிகள் மேற்கொண்ட முயற்சிகள், அடையாள மீட்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. கென்ய மொழி எழுத்தாளரான கூகி வா தியாங்கோ ‘காலனிய ஓர்மை அகற்றல்' எனும் தனது நூலில் ஆப்பிரிக்க அடையாளத்தை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கக் கூறுகளிலிருந்து மீட்டெடுக்க மேற்கொண்ட எதிர்செயல்பாடுகளை விவரிக்கிறார் (அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல் - கூகி வா தியாங்கோ; தமிழில்: அ. மங்கை, வல்லினம் - 2004). ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்க நாடுகளின் மீது நிகழ்த்திய, இன்னும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் பார்ப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் கூகியின் நூல், நமக்குப் பெரிதும் உதவி செய்கிறது. ஆப்பிரிக்காவின் மொழி, இலக்கியம் மற்றும் நிகழ்த்துக் கலைகளில் ஏகாதிபத்தியம் செய்திருந்த சீரழிவுகளை விரிவாகச் சொல்வதன் மூலம் ஆப்பிரிக்காவின் ‘ஆன்மா' எப்படி சிதைவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

தனித்த மொழி, மண் மற்றும் மரபுக் கூறுகளுடனான புனைக் கதை, இன அடையாளம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய ஆப்பிரிக்க படைப்புகளின் அடிப்படைக் கூறுகளை தலித் இலக்கியக் கூறுகளோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளவும், தலித் படைப்புகளையும், படைப்பாளிகளின் எழுத்துச் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்யவும் கூகியின் நூல், நமக்குப் பெரிதும் உதவும் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவைப் பற்றி பிற மக்களிடம் பதிய வைக்கப்பட்டிருக்கும் இனக்குழு மோதல்களைப் பற்றிய கருத்தை நிராகரித்து விடும்படி கூகி, நூலின் தொடக்கத்திலேயே நம்மிடம் உறுதியாகக் கேட்டுக் கொள்கிறார். ஆப்பிரிக்கப் படைப்பாளிகளின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் இனக்குழு அடையாளத்துடன் அணுகப்படுவதையும், விமர்சிக்கப்படுவதையும் அவர் முற்றிலும் நிராகரிக்கிறார். ஏகாதிபத்தியமே இனக்குழு மோதல்களுக்கான காரணம் என்கிறார்.
ஆப்பிரிக்காவின் சிக்கல்களுக்கு அடிவேர் ஏகாதிபத்தியம் என்பதை உணரவிடாமல் தடுப்பதில் மேற்குலக ஆய்வாளர்களும், ஊடகங்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இனக்குழு அடிப்படையில்தான் இன்று முழு ஆப்பிரிக்காவும் விளக்கப்படுகிறது. இப்படியான விளக்கங்கள், ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை மறைத்து விடுகின்றன. எனவே, ஆப்பிரிக்க இயல்பு நிலையை அணுகுவதற்கு இரண்டு பார்வைகள் கூகி வா அவர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய மரபும், எதிர்ப்பு மரபும்தான் அந்த இரண்டு பார்வைகள். இப்பார்வையினூடே அவர் முன்வைக்கும் கருத்துகள், ஆப்பிரிக்காவை புரிந்து கொள்ள வகை செய்கின்றன. ஒரு கையில் பைபிளையும் மறு கையில் வாளையும் கொண்டு ஆப்பிரிக்காவை நிர்மூலமாக்கிவரும் ஏகாதிபத்தியத்தின் அழிப்புகளை, கூகியின் அணுகுமுறையின் வழியாகவே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பிற இனங்களால் நிகழ்த்தப்படும் பெரும் ஒடுக்குமுறைகளில் நிரந்தரமானதும், நீண்டதுமான பாதிப்பினை செய்வது மொழி அழிவு. ஆப்பிரிக்காவின் மொழிகள், ஏகாதிபத்திய அரசுகளால் வேட்டையாடி சிதைக்கப்பட்டுள்ளன. அங்கு பல மொழிகளுக்கு வரி வடிவம் இல்லை; பல மொழிகள் பேசப்படுவதில்லை. காலனிய அரசுகள் தமது மொழியை தமது ஆதிக்கத்திற்குள் உள்ள ஆப்பிரிக்க மக்களிடம் திணித்தது மட்டுமின்றி, அந்த நாடுகளின் எல்லைகளையும் இந்தத் திணிப்பின் அடிப்படையிலேயே பிரித்திருக்கிறார்கள். 1884 இல் பெர்லின் நகரில் கூடிய காலனிய அரசுகளின் ஆட்கள் ஆப்பிரிக்காவை ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம் பேசும் நாடுகளாக வரையறுத்து எல்லைகளை உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் ஆப்பிரிக்கர்களின் அடையாளங்களும்கூட உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், அரசின் நிர்வாகத்துறையிலும், இலக்கியத்திலும் பல ஆண்டுகளாக காலனிய நாடுகளின் மொழிகளே பயன்படுத்தப்பட்டு, ஆப்பிரிக்கர்கள் தமது தாய்மொழியை மறந்து விட்டிருக்கிறார்கள். ‘பிறிதொரு மொழிக்காக ஒருவர் தனது தாய் மொழியைக் கைவிடுவது சரியா? அது மிகப் பெரிய துரோகச் செயலாகத் தோன்றுகிறது; பெரும் குற்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. ஆனால், எனக்கு வேறு வழியேதும் இல்லை. எனக்கு இம்மொழி (காலனிய மொழி) கொடுக்கப்பட்டுள்ளது. நான் அதைப் பயன்படுத்த எண்ணியுள்ளேன்' என்று சினுவா ஆச்சிபி போன்ற புகழ் பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் கூறும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

சினுவா மட்டுமின்றி செங்கோர், டேவிட்டியோப், பீட்டர் ஆப்ரஹாம்ஸ் என்ற பல ஆப்பிரிக்க புகழ் பெற்ற படைப்பாளிகள் அனைவரும் தமது தாய் மொழியில் எழுதாமல் காலனிய மொழியில் எழுதுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஆங்கில வழியேயும், பிரெஞ்சின் வழியேயும் ஆப்பிரிக்க இலக்கியத்தைப் படைத்ததற்காக இந்த எழுத்தாளர்களுக்கு காலனிய அரசுகள் - ‘புதியதொரு கலையை உருவாக்கியதற்காக' பரிசுகளையும், பாராட்டுகளையும் அளித்திருக்கின்றன.

இந்த இலக்கியங்களே பள்ளிகளில் கற்பிக்கப்பட்டுள்ளன. பீரங்கிகளால் பணிய வைக்கப்பட்ட வழிமுறைகளுக்கு மாற்றாக, மொழித் திணிப்பு அதிகமான பலனைத் தந்ததாக சொல்கிறார் கூகி வா. துப்பாக்கி ரவை உடலை வருத்திப் பணிய வைக்கும் சாதனம். மொழி ஆன்மிக அடிமைப்படுத்தலுக்கு வழி வகுக்கும் என்று எழுதும் அவர், தனது கருத்துக்கு மிகப் பொருத்தமாக செயிக் கானேயின் நூலிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார். ‘கருப்புக் கண்டத்தில் நாம். அவர்களது உண்மையான சக்தி பீரங்கிகளில் இல்லை; அதைத் தொடர்ந்த வழிமுறைகளில் இருந்தன என்பதைப் புரிந்து கொண்டோம். பீரங்கிகளுக்குப் பின்னால், புதிய பள்ளிகள் இருந்தன. அப்பள்ளி பீரங்கியிலிருந்து போரிடும் ஆயுதத்தின் வலுவைப் பெற்றது. ஆனால், பீரங்கியை விட நிரந்தரமான வெற்றியை ஈட்டித் தந்தது. பீரங்கி உடலைப் பணிய வைக்கிறது. பள்ளி ஆன்மாவை ஈர்க்கிறது.”

தம் வீட்டிலும், வயல் வெளிகளிலும், வேலை செய்யுமிடத்திலும், மக்களிடத்திலும் பேசிய மொழியை ஆப்பிரிக்க குழந்தைகள் பள்ளிகளில் படிக்க முடியவில்லை. அவர்கள் தாய்மொழியில் கேட்ட கதைகளும், பாடல்களும், விடுகதைகளும் பள்ளிப் புத்தகங்களில் இல்லை. ஆப்பிரிக்க குழந்தைகள் படித்த காலனியப் பள்ளிகளில் தங்கள் தாய் மொழியில் பேசினால் தண்டிக்கப்பட்டார்கள்; அவனமானப்படுத்தப்பட்டார்கள். நிர்வாணப்படுத்தப்பட்டு, அவர்களின் புட்டத்தில் பிரம்படிகள் வழங்கப்பட்டன. கழுத்தில் ‘நான் ஒரு முட்டாள்' என்றும் ‘நான் ஒரு கழுதை' என்றும் எழுதப்பட்ட பலகைகள் மாட்டப்பட்டு உலா வரவைக்கப்பட்டனர். தண்டத் தொகை வசூலிக்கப்பட்டது.

தாய்மொழியில் பேசும் மாணவரிடம் முதலில் ஒரு பொத்தான் காலையில் வழங்கப்படும். அந்தப் பொத்தான் அன்று முழுதும் யாரெல்லாம் தாய்மொழியில் பேசினார்களோ, அவர்களிடமெல்லாம் கைமாறி பயணம் செய்து கொண்டே இருக்கும். மாலையில் அது எந்தக் குழந்தையிடம் இருக்கிறதோ, அவரைக் கொண்டு எத்தனை பேரின் கைமாறியிருக்கிறது என்ற எண்ணிக்கை கண்டுபிடிக்கப்படும். பிறகு இந்த சங்கிலித் தொடரில் இருக்கும் ‘தாய் மொழி பேசிய குழந்தை குற்றவாளிகளுக்கு' ஆசிரியர் மூலம் தண்டனை கிடைக்கும். இத்தகைய கொடூர நடைமுறைகள் ஆப்பிரிக்க குழந்தைகளிடையே தாய்மொழியை ஒழித்துக்கட்ட உதவின. இதனோடு ஆங்கிலத்தில் பேசும், எழுதும் மாணவர்களுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒரு மாணவன் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனுக்கு தேர்ச்சி உயர்வு மறுக்கப்பட்டது.

இப்படி கல்வி பயின்று இலக்கியவாதிகளாக மாறியவர்களுக்கு வேறொரு சிக்கலும் இருந்தது. அவர்களால் விரும்பினாலும் தமது தாய் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்த இயலவில்லை. அதன் வரிவடிவம் காலனிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டதாகவும், அதன் இலக்கணங்களும், அகராதிகளும் அவர்களால் எழுதப்பட்டதாகவும் இருந்தன.
போட்டி ஏகாதிபத்தியங்கள் மற்றும் காலனியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி ஆகியவற்றால் ஒரே மொழியின் ஒலி அமைப்புகளுக்கு வேறுபட்ட வரிவடிவங்கள் ஏற்பட்டன. ஒரே காலனிய எல்லைக்குள் இருந்த ஒரே மாதிரியான ஆப்பிரிக்க மொழிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக, ‘கிகூயூ மொழிக்கு இரண்டு வகையான போட்டி வரிவடிவங்களை, பிராடெஸ்டெண்டு மற்றும் கத்தோலிக்கப் பாதிரியார்கள் உருவாக்கினர்' என்கிறார் கூகி வா. கூகி இதை மிகத் தெளிவாக உணர்வதால், மொழி மூலம் உருவாகும் பிரிவினையை நீக்கி, ஒத்திசைவை உருவாக்க பங்களிப்பினை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

1961இல் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய அவர், 1977இல் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதன் பின்னர் அவரின் அனைத்து எழுத்துகளும் அவரின் தாய் மொழியான கிகூயூ மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அவரின் இம்முடிவுக்குப் பின்னால் இருக்கும் கருத்தியல் முக்கியமானது. ‘கென்ய மக்களின் தாய் மொழிகள் குழந்தையின் பேச்சு மொழி லயத்தை மட்டுமின்றி, அவர்களின் இயற்கையுடனான போராட்டம் மற்றும் சமூகப் பண்புகளைக் காட்டக்கூடிய இலக்கியங்களை உருவாக்க வேண்டும் என விழைகிறேன். தனது தன்னிலை, மொழி, சூழலோடு இயைந்த ஒத்திசைவைத் தொடக்கக் காலத்தில் பெற்ற ஒருவர் பிற மொழிகளைக் கற்கலாம். அவற்றின் வளமான, மனிதநேயம் மிக்க, சனநாயக, புரட்சிகர அம்சங்களை அறிந்து கொள்ளலாம்' (பக். 37).

கிகூயூ மொழியில் எழுத முயன்றபோது, கூகி அவர்கள் சந்தித்திருக்கும் போராட்டங்கள் மிகவும் கடுமையானவை. தனியே விரிவாக விளக்கும் அளவு ஆழமானவை. இம்முயற்சிக்கென அவர் அரசு அடக்குமுறைகளை சந்தித்திருக்கிறார். மொழி, ஆன்மாவிலிருந்து உருவாகிறது. அது பேசும்போது தரும் பொருளை விடவும் வேறொரு பொருளை மிக ஆழமாக, வெளிப்படுத்த முடியாத வகையில் தன் மக்களுக்குத் தருகிறது. தன் எழுத்துகளில் மொழியைப் பயன்படுத்தும் படைப்பாளி, மொழியுடன் உறவாடுவதிலும், பண்பாட்டைப் பாதுகாப்பதிலும், உயிர்ப்பிப்பதிலும், மாற்றத்தைக் கட்டமைப்பதிலும் அதிக பங்கினை ஆற்றுகிறான். அவன் தாய் மொழியைப் புறக்கணிக்கிறபோது, வேறொரு மொழியின், கருத்தின் பிரதிநிதியாகி விடுகிறான். மொழியின் ஊடே ஆழமான பிளவையும், மிக நெருக்கமான உறவையும் ஏற்படுத்த முடியும் என்பதை வேறெவனைக் காட்டிலும் அவனே அறிந்திருக்கிறான். அடக்குமுறைக்கு எதிராக அவன் தன் தாய் மொழியை உயர்த்திப் பிடிக்கிறபோது ஒடுக்கப்படுகிறான்.

‘மக்களது மொழியில் புரட்சிகர ஒற்றுமை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் படைப்பாளி, நிலைகுலைவுப் பண்பு கொண்டவராகக் கருதப்படுகிறார். எனவே, ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது குற்றமாகிறது. தண்டனைக்குரியதாகிறது. அந்த எழுத்தாளர் சிறைவாசம், நாடு கடத்தல், மரணம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அவருக்கு ‘தேசிய விருது'கள் இல்லை; புத்தாண்டு மரியாதைகள் இல்லை; ஆனால் வசவுகளும் அவதூறுகளும் அள்ளி வீசப்படும். ஆளும் சிறுபான்மை ராணுவ சக்திகளின் எண்ணற்ற பொய்கள் அவர்கள் மீது சுமத்தப்படும்” என்று தான் அனுபவித்த ஒடுக்குமுறைகளைப் பொதுமைப்படுத்தி கூறுகிறார் கூகி.
கூகியின் மொழி பற்றிய கருத்துகளும், மொழியை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட செயல்முறைகளும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருத்தப்பாடு உடையதாகவே இருக்கிறது. ஏகாதிபத்தியம் இங்கே ஆங்கிலத்தை தன் காலனி ஆதிக்க எச்சமாக விட்டுச் சென்றிருக்கிறது. அதற்கு முந்தைய ஆதிக்கமான பார்ப்பனியம் தனது சாதிய கருத்தியல்களையும், மூடக் கருத்தியல்களையும் இன்னும் விடாமல் நம்மைப் பற்றிக் கொள்ளச் செய்திருக்கிறது. தசைக்குள் ஊடுறுவி உயிர் வாழும் ஒட்டுண்ணியாக, ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் பார்ப்பனியம் இருக்கிறது. எனவே, நாம் கூகியின் கருத்துகளை நம் மொழியோடும், படைப்புச் செயல்பாட்டோடும் மிகவும் லாவகமாகவும், இயல்பாகவும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். கீகூயூ மொழி பேசியதால் ஆப்பிரிக்க கென்ய குழந்தைகள் பெற்ற அதே விதமான தண்டனைகளை, இங்கே தமிழகத்தின் பல ஆங்கிலப் பள்ளிகளில் நமது குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்; இன்னமும் பெற்றுக் கொண்டுமிருக்கிறார்கள்.

ஆங்கிலத்துக்கு இருக்கும் பருண்மையான மதிப்பு தமிழுக்கு இங்கே இல்லை. பயிற்று மொழி, வழிபாட்டு மொழி, அலுவல் மொழி, வழக்குமன்ற மொழி, கணினி மொழி என இன்னும் தமிழ் முழுமையாக இங்கே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. மக்கள் பீரங்கி குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் பணிய வைக்கப்படாமல், மொழியால் பணிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் உடலை வெற்றி கொள்வதைவிடவும் மனதை வெற்றி, கொள்வதே முழுமையான வெற்றியாகிறது. அத்தகு வெற்றி ஆங்கிலத்தாலும் வடமொழியாலும் இங்கே ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இலக்கியத்திலும், ஊடகத்திலும், இன்று நல்ல தமிழ் பயன்படுத்தப்படுவதில்லை. நல்ல தமிழில் எழுதப்படும் இலக்கியங்கள் பரப்புரை செய்யப்படுவதாக ஒதுக்கப்படுகின்றன.

கூகியின் மொழி குறித்த கருத்துகளோடு மற்றொரு ஒப்புமை யையும் நாம் செய்யலாம். அடையாள மீட்பின் நோக்கத்துடனேயே அவர் தனது தாய் மொழியான கிகூயூ மொழியில் எழுத முனைகிறார். ஆங்கிலத்தில் எழுதி மிகப் பரவலான கவனிப்பைப் பெற்றிருந்த நிலையிலும், கருத்தியல் நேர்மைக்கெனவும், தனது சமூகக் கடமைக்கெனவும் அவரால் அப்படி ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. தமிழ் இலக்கியத்தில் தனித்த அடையாளக் கூறுகளுடன் வெளிப்பட்ட தலித் இலக்கியம், தனக்கான மொழியை தனி அடையாளத்துடன் எப்படி கட்டமைத்துக் கொண்டுள்ளது என்பதை கூகியின் செயல்பாட்டுடன் இணைத்துப் பார்க்கலாம். தலித் படைப்பாளிகளுக்கு கையளிக்கப்பட்ட சாதிய தன்மைகள் கொண்ட, இந்து மத சார்பினைக் கொண்ட, ஆண் தன்மை கொண்ட மொழியை அவர்கள் எப்படி மாற்றி, தமது படைப்புகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரியது.

Yal Library
தலித் இலக்கியத்தின் மொழி கலகத் தன்மை கொண்டது எனவும், வெளிப்படையானது எனவும் தொடக்கக் காலத்தில் மதிப்பிடப்பட்டது. அது மெல்ல நவீனத் தன்மையையும், செவ்வியல் தன்மையையும் இன்று பல படைப்பாளிகளின் படைப்புகள் வழியே பெற்றுக் கொண்டிருக்கிறது. நேரடித் தன்மையும், பேச்சு மொழியின் சாயலும், வழக்குச் சொற்களின் பயன்பாடும், விசையூக்கப் பண்பும் கொண்ட மொழியாக அது இருக்க வேண்டும் என்று விமரிசகர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த அம்சங்களை தலித் படைப்பு மொழி முழுமையாகப் பெற்று வளரவில்லை. பேச்சு மொழி என்கின்ற அம்சத்துடனும், ஆத்திரத் தின் மொழி என்ற அம்சத்துடனும் மட்டுமே - இன்னும் அது பல தலித் படைப்பாளிகளின் படைப்புகளில் சுழன்று கொண்டுள்ளது; அல்லது முன்னமே உருவாக்கி கையளிக்கப்பட்ட இலக்கிய மொழியுடன், செறிவு பூண்டு கச்சிதமாக வெளிப்படுகிறது.

புது சொல்லாக்கங்களோ, சனாதன, சாதியத் தன்மைகளை கிலி கொள்ளச் செய்யும் தன்மையுடைய வார்த்தை உருவாக்கங்களோ இல்லை. தலித் இலக்கியம் தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின் தாக்கத்திலிருந்தும், பிடியிலிருந்தும் விடுபடாததினால்தான் இந்த நிலை உருவாகி இருக்கிறது என்று உறுதியாகக் கூறிவிடலாம்; அல்லது அது செவ்வியல் தன்மையுடையவைகளின் வரிசையில் இடம்பிடித்துக் கொள்ள முன்னேறுவதால், தனது ஆதிக்கக் கருத்தியலின் ஓர்மையை மிகக் கவனமாக தவிர்க்க அது மறந்து விடுகிறது. தலித் பிரதிகள் மீது அன்றிலிருந்து இன்றுவரை வைக்கப்படும் விமரிசனத்தில் தொடர்ந்து வரும் இரு கருத்துகளில் ஒன்று, அதன் சொல் பிரயோகம். மற்றொன்று அதன் வடிவம் அல்லது கட்டமைப்பு. தலித் பிரதிகள் தனக்கான தனி வடிவத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதிலும், உருவாக்கிக் கொண்டதைப் புறக்கணிப்பதிலும் இவ்விமரிசனங்கள் பங்காற்றுகின்றன என்று நாம் அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் தலித் படைப்பு மொழி இன்று கவனிப்புக்கும், மீளாய்வுக்கும் உள்ளாக்கப்பட வேண்டியுள்ளது. தலித் மனித முகத்துடனான மொழியாகவும், உயிர் தன்மை கொண்ட மொழியாகவும் அது மாற வேண்டி யுள்ளது. இந்த மாற்றத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் மட்டுமின்றி, இனி எழுத வரும் தலித் படைப்பாளிகளும் கவனத்தில் கொண்ட பின்னர் எழுதத் தொடங்கலாம்.

ஈழத்தில் சிங்களப் பேரினவாதத்தால் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் புகைப்படம், என் வீட்டு மேசை மீது இருக்கிறது. அதைப் பார்க்கின்ற போதெல்லாம் தீத்துண்டு ஒன்றைப் பார்ப்பது போலவும், இறந்த ஒருவரின் சாம்பலை பார்ப்பது போலவும் நான் உணர்வதுண்டு. எழுதும்போது, கை சோர்ந்து மேசையின் மேல் தலைவைத்து சாய்ந்து கொள்கையில் ஆயிரக்கணக்கான கூக்குரல்கள் கேட்கும். அப்போது மாலை நேரத்தில் பலநூறு பறவைகள் கூடு திரும்பும் கூட்டொலி கேட்கும். காட்டின் அருகே நின்று கொண்டிருப்பது போலவும் தோன்றும். அந்தப் புகைப்படம் ஒரு கண்ணாடிப் பேழைக்குள் போடப்பட்டு, எழில் என்ற கவிஞரால் எனக்குப் பரிசளிக்கப்பட்டது. அவரின் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டபோது (உள்மை), ஈழத்தில் இருக்கும் அன்றாட வாழ்வின் சில தருணங்களை, ஆவணப்படமாகப் போட்டுக் காட்டினார். அவரின் கவிதைச் சொற்களுக்கு அப்படங்கள் மேலும் வலுவேற்றின. அதனுடன் கவிதைக்கான காட்சியையும் மனதுக்குள் விரித்தன. அக்டோபர் 30, 1995 என்ற அவர் கவிதை, யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதை இவ்வாறு கூறுகிறது :
யாழ் / தேனீக் கூட்டம் / கலைந்தது / அய்ந்து லட்சம் / தேனீக்கள் / முதுசத்தை / உழைப்பை / வரலாற்றுப் / பாரம்பரியங்களை / கலாச்சாரப் / புனிதங்களை / வியர்வையின் / உப்பை / ஒரே / ஒரு / இரவு / ஒரே / ஒரு பாலம் / விடுதலைப் / பயணம்

வெலிக்கடை சிறைச்சாலையைப் பற்றிய பிறிதொரு கவிதை, கொடூரச் சூழலை கண்முன் நிறுத்துகிறது.

மின்சார வேலி / இரும்புக் / கரங்கள் / வெளிச்சத்தைத் / தேடும் / இருள் / நிரம்பி / வழியும் / கைதிகள் / கோரப் பசி / மலங்களைப் / புசிக்கும் / வாய்கள் / மூத்திரங்கள் / தீர்க்கும் / தாகங்கள் / உரோமமே / இல்லாது / உடல்கள் / நகங்களை / வேண்டி / விரல்கள் / காடைத்தனத்தின் / கட்டவிழ்ப்பு / இரவு / நிசப்தத்தைக் / கிழிக்கும் கதறல் / அடங்கிப்போகும் / முனகல் / காலை / சுத்திகரிப்பு / ரத்த வெடில் / அடுத்தது / நானாகலாம் / பருந்து / உயரப் பறக்கிறது

அடையாள மீட்பின் எதிர் செயல்பாடுகளில் மேலும் மேலும் சந்திக்க வேண்டிய கொடுமைகளையும், சந்திக்க வேண்டிய இழப்புகளையும் அங்கிருந்து வரும் செய்திகள் நமக்கு ஓயாமல் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.
உங்களது இளமைப் பருவம், கல்விச் சூழல், காலனியத்தையும் ஆங்கில மொழியையும் சாடும் தீவிர விமர்சகராகவும், படைப்பாளியாகவும் நீங்கள் உருவானது ஆகியவை பற்றிக் கூற முடியுமா?

பிரிட்டிஷ் காலனியத்திற்கு உட்பட்ட கென்யாவில் 1938இல் நான் பிறந்தேன். எனது பெற்றோர் விவசாயிகளாகவும், பல சமயம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் குடியேறிகளுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தும் வந்தனர். காலனியத்தைப் பற்றிய எனது விமர்சனக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கியச் சம்பவமாக இளமைப் பருவத்தில் நான் கண்ட 'மாவ்மாவ்' ஆயுதப் போராட்டத்தைத்தான் கூறவேண்டும். இது மட்டுமல்லாமல் கதை சொல்லும் / கதை கேட்கும் பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். எங்களது வாய்மொழி மரபு மிகவும் முக்கியமானதாகவும், எனது படைப்புலகைப் பெருமளவு பாதிக்கும் வகையிலும் இருந்தது.

உங்களைப் பொருத்தவரை ஆங்கில மொழியை நிராகரிப்பது அரசியல் தேவையாக மட்டுமுள்ளதா? அல்லது கென்யாவின் கதை சொல்லும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கத் தேவையான உத்தியாகவும் உள்ளதா?

இதனை எனது ஈங்ஸ்ரீர்ப்ர்ய்ண்ள்ண்ய்ஞ் ற்ட்ங் ஙண்ய்க் என்ற நூலில் விளக்க முற்பட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு அரசியல் பிரச்சினைதான். ஒரு எழுத்தாளன் யாருக்காக எழுதுகிறான் என்ற கேள்விதான் முதலில் எழுகிறது. அவர் எந்த மொழியில் எழுதுகிறார் என்பது கண்டிப்பாக அவரது வாசகர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது. ஆனால், அதற்குப்பின் கலையனுபவத் தேவைகளும் சேர்ந்துகொள்கின்றன. என்னுடைய மக்களின் மொழியோடு (உதாரணமாக, ஒரு ஆப்பிரிக்க மொழியோடு) என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ளும்போதுதான் என்னு டைய மக்களின் கதை சொல்லும் திறனோடு என்னால் உறவு கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக எனது ஙஹற்ண்ஞ்ஹழ்ண் மற்றும் ஈங்ஸ்ண்ப் ர்ய் ற்ட்ங் இழ்ர்ள்ள் ஆகிய புதினங்களைக் குறிப்பிடலாம். அவை பெருமளவு கென்யாவின் நாட்டார் மரபை ஒட்டி எழுந்தவை.
கென்ய வேர்களை மீட்டெடுக்கும் உங்கள் எழுத்துமுறை காலனிய நீக்கு சக்தியாக மட்டும் செயல்படுமா? அல்லது பின்காலனியச் சொல்லாடலையும் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்குமா?

இரண்டையும் செய்யும் என்றுதான் நினைக்கிறேன். பின்காலனியம் என்பது பெருமளவு காலனியத்தின் கூறுகளைத் தாங்கியபடியும் அதன் தொடர்ச்சியாகவுமே இருக்கிறது. அதாவது, 'பின் காலனியம்' 'நவ காலனியத்தை' தன்னகத்தே மறைத்து வைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

நவகாலனியத்தை மையப்படுத்திப் பேசும் கறுப்பின அறிவு ஜீவியாக இருக்கும் உங்களது நிலைப்பாடு எந்த அளவு பின்காலனியச் சொல்லாடலிலிருந்து மாறுபட்டிருக்கிறது?

உழைக்கும் மக்களை முன்வைத்துத்தான் எனது நிலைப்பாடு எப்போதும் இருந்துவருகிறது. அவர்களுக்குத்தான் என் எழுத்துக்களில் முதலிடம்.

இதனை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது தலித் அறிவுஜீவிகள் இந்தியாவை முன்னிலைப்படுத்திப் பேசப்படும் பின்காலனியத்தை சந்தேகிக்கும் அதே சமயம் சையத், பேனான் மற்றும் கருப்பினத்தவரின் எழுத்துக்களை ஆர்வத்தோடு வாசிப்பதுடன் மொழியாக்கம்கூடச் செய்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் பின்காலனியச் சொல்லாடல் என்ற பரந்த அறிவு தளத்தில் உங்களது நிலைப்பாட்டை விளக்குங்களேன்.

உங்களது விளக்கத்துக்கு நன்றி. நான் அக்கறை காட்டுவதெல்லாம் 'பின்காலனியம்' என்று சொல்லப்படுவது. 'நவ காலனியத்தை' கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதைத்தான். அறிவுஜீவிகளின் தனிப்பட்ட சமூக மற்றும் கருத்துருவக் கண்ணோட்டம்தான் மிக முக்கியமானதெனக் கருதுகிறேன். இதுவே ஒரு பின் காலனிய அறிவுஜீவியை வேறொரு அறிவுஜீவியிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. கென்யச் சூழலிலும் இதுவே உண்மை. ஆதிக்க வெறி கொண்ட 'மோய்' (ஙர்ண்)ஆட்சியாளர்களையும், அவர்களுடன் தற்போது இணைந்துள்ள கிபாக்கி (ஓண்க்ஷஹந்ந்ண்) ஆட்சியாளர்களையும் ஆதரிக்கும் சில அறிவுஜீவிகள் தற்போதைய கென்யாவில் இருக்கின்றனர். இவர்கள் மக்களுக்கு ஆதரவாக இயங்கிவரும் அறிவு ஜீவிகளை எதிர்த்து வருகின்றனர். அனைத்து வகையான தேசிய இனங்களையும் சமமாக பாவிக்கும் போக்கே எனது செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. மேலும், இந்தப் பலதரப்பட்ட தேசிய இனங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களின் அரசியல், பண்பாட்டு மற்றும் மனதளவிலான விடுதலைக்கான செயல்பாடுகளே என்னை வழி நடத்திவருகின்றன. அதனால்தான் நான் தொடர்ந்து 'உழைப்பாளிகள், விவசாயிகள்' என்ற சொற்களை பயன்படுத்திவருகிறேன்.

சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் அபர்ஜின் இனத்தவரும், நியூசிலாந்தில் மெüரி இனத்தவரும், இந்தியாவில் 'தீண்டத்தகாதவர்' என கருதப்படும் தலித்துகளும், கனடாவில் 'முதல் தேசத்து மக்கள்' என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பூர்வீகக் குடியினரும் இதுநாள்வரை கட்டமைக்கப்பட்டு வந்த தேசியத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகின்றனர். இவர்கள் பல சமயம் பின்காலனியச் சொல்லாடலையும் கடுமையாக விமர்சிக்கிறார்களே. இவர்களது குரல்கள் எழுப்பும் சவால்களைப் பற்றி. . .

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, எந்தப் பின் காலனிய அறிவுஜீவிகளைக் கருத்தில் கொண்டு அந்தக் குரல்கள் எழுப்பப்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். அதே சமயம் தங்கள் பிரச்சினைகளைத் தாமே முன்வந்து பேசுமளவு அவர்கள் மேமிழுந்து வந்திருப்பது மிகவும் முக்கியமானதாகப்படுகிறது. இவர்களது குரல்கள்தான் இன்று மையத்தை நோக்கி எழுப்பப்படும் பெரிய சவால்களாக இருக்கமுடியும். மையத்திடம் தனக்கான இடத்தை, உரிமையை வேண்டி போராடும் உண்மையான குரல்களாக இந்த விளிம்பு நிலை மக்களின் குரல்களைத்தான் கூறவேண்டும்.
பின்காலனிய அறிவுஜீவிகள் முன்வைக்கும் தேசியம், தேசியமொழி, பாரம்பரியம் என்பது இந்தப் பூர்வீகக் குடியினரின், அடித்தட்டு மக்கள்மீதான மற்றொரு ஏகாதிபத்தியமாகத்தானே இருக்கிறது? இதற்கு ஆங்கிலமே மேல் என்று சொல்லுமளவுதான் இங்கு சமுதாயக் கட்டுப்பாடும், அறிவு தளத்தின் செயல்பாடும் இருக்கிறது. இதன் பின்னணியில் ஆங்கில மொழியை முற்றிலும் புறக்கணிக்கும் உங்கள் நிலைப்பாடு கென்யச் சூழலையே முன்னூதாரணமாக வைத்து எழுந்தது என்று கூறலாமா?

மொழியாக்கம் என்பது ஒரு பரந்துபட்ட வாசக வட்டத்தை எதிர்நோக்கும் அரசியல் செயல்பாடாக ஆகிவிட்ட இன்றைய சூழலில், நாம் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தலித் எழுத்தாளர்களும், மற்ற பூர்வீகக் குடியினரும் தமது மொழிகளிலேயே எழுதி, தேவைப்படுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நமது மொழியில் நாம் ஆழமாக உன்றி இருப்பது அவசியமென நான் கருதுகிறேன்.

இந்தியாவில் தீண்டப்படாதவர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், கென்யாவில் 'வாட்டாக்களும்' (ரஹற்ற்ஹள்)சொமாலியாவில் 'மிட்கான்' (ஙண்ற்ஸ்ரீர்ய்ள்) என்ற பிரிவினரும், நைஜிரியாவில் 'ஓசஸ்' (ஞர்ள்ன்ள்) என்ற பிரிவினரும் அனுபவித்துவரும் கொடுமைகளோடு ஒப்பிடுமளவுக்கு இருக்கிறது. இதேபோல இவர்களின் துயர்களைத் துடைக்க சில காலனிய அதிகாரிகள் மற்றும் மிஷினரிகள் எடுத்த முயற்சிகளுக்கு இடையேயும் ஒப்புமையைக் காண முடிகிறது. இந்த நிலையில், வெறுமனேக் காலனிய எதிர்ப்பு என்று குரல் எழுப்புவது ஒருவித தேசியவாத, மேல்தட்டு வர்க்கத்தின் கூக்குரலாக மட்டும்தானே இருக்கும்?

காலனிய வெறுப்பு என்பது பொதுவான அர்த்தமுள்ள சமுதாயப் புரட்சியின் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. 'சமூக நீதி' என்பது ஒரு தேசத்தில் உள்ள பல்வேறு இனங்களின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகளும் சமமாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்தான் அடங்கும் என நினைக்கிறேன்.

கென்யப் பண்பாட்டு வேர்களை மீட்டெடுக்கும் தங்களது முயற்சி எந்த அளவுக்கு அதன் பன்முகத்தன்மையை வெளிக் கொணர உதவுவதாக இருக்கும்?

நமது பண்பாட்டினுடைய பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாகத்தான் நாம் இருக்கிறோம். இதனை உணர்ந்தால், நாம் பேசுகிற மொழி மற்றும் நமது எழுத்துக்கள் அங்குள்ள பலவகைப்பட்ட தேசியங்களையும், தேசிய இனங்களையும் கவனத்தில் கொள்ளுவதாக அமையும். கென்யச் சூழலை வைத்து இதனை விளக்க முயல்கிறேன். கென்யா 1895இதான் பிரிட்டிஷ் காலனியாக ஆனது. கென்யாவில் பல மொழிகள் பேசிவந்த, தமக்கான பிரத்தியேகமான வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டிருந்த பல்வேறு இனங்களை ஒரு எல்லைக்குட்பட்ட அரசுக்குக் கீழ் கொண்டுவந்த காலகட்டமாகவும் இதனைக் கூறலாம். காலனிய எதிர்ப்புத் தேசியவாதம் இந்தப் பலதரப்பட்ட இனங்களை ஒருங்கிணைத்த ஒரு 'கென்யத் தன்மையை'க் கட்டமைக்கவும் உதவியது. இந்தக் காலனிய எதிர்ப்பின் உச்சகட்டமாக 20ஆம் நூற்றாண்டில் 50களில் நடந்த 'மாவ் மாவ்' ஆயுதப் போராட்டத்தைச் சொல்லலாம். அதன்பின் 1963இல் கென்யா பிரிட்டிஷிடமிருந்து விடுதலைபெற்றது. அதன்பின் ஆங்கிலமே அதன் அரசு மொழியாக அறிவிக்கப்பட்டது. 'கிஸ்வாஹிலி' என்ற மொழிதான் அதன் பேச்சுமொழி. இதைத் தவிரக் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் தங்களுக்கென தனிப்பட்ட மொழிகளையும், பண்பாட்டையும் கொண்டிருந்தன. இவை யாவும் தத்தமது தேசியத்தை மட்டும் பேசாமல் ஏனைய தேசிய இனங்களையும், கென்ய தேசத்தையும் அதன் நீட்சியாக உலகு பற்றியும் பேச வேண்டும் என நினைக்கிறேன். இந்த மொழிகள் யாவும் (மொழியாக்கம் வழியாக) மற்ற பிராந்திய மொழிகளுடன் கலந்துறவாட வேண்டிய தேவையும் உள்ளது. எந்த ஒரு மொழியும் பண்பாடும் வேறொன்றின்மேல் திணிக்கப்படக்கூடாது. மொழிகளுக்கு இடையேயான உரையாடல் மூலம் ஒரு புதிய மொழி உருவானால், அது அனுகூலமான விசயமே. அதே சமயம் (என்னுடைய ஙர்ஸ்ண்ய்ஞ் ற்ட்ங் இங்ய்ற்ழ்ங் என்ற நூலில்“ஐம்ல்ங்ழ்ண்ஹப்ண்ள்ம் ர்ச் உய்ஞ்ப்ண்ள்ட்” என்ற பகுதியில் நான் சொல்லியிருப்பதைப்போல) இந்தப் புதிய மொழியின் பிறப்பு மற்ற மொழிகளின் கல்லறையின் மேல் உருவாகக்கூடாது.

விமர்சனம் மை (கவிதைத் தொகுப்பு) - 35 கவிஞைகளின் கவிதைகள்



பதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க
முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை
இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கான
வழிமுறையாகவே ஊடறு இணையத்தளத்தின் கடந்த மூன்றாண்டு கால சேகரிப்புகளில் உள்ளடங்கிய
கவிதைகள் இங்கு மை கவிதைத்தொகுப்பாகிறது என மை கவிதைத்தொகுதிக்கான தேவையை ஆசிரியர்
குழாம் வெளிப்படுத்தியுள்ளது. ஊடறு எனும் பெண்கள் அமைப்பு புலம் பெயர்ந்வர்களால்
சுவிஸில் உருவாக்கப்பட்டு 2002 இல் ஊடறு எனும் நால் வெளியிடப்பட்டது. 2004 இல் ஊடறு
இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2006 இல் பெண்ணியாவின் கவிதைத் தொகுதி
வெளியிடப்பட்டது. 2007 இல் ஊடறு கவிதைத்தொகுதி வெளியிடப்பட்டது. பல்வேறு
நாடுகளிலிருந்து சுமார் 35 கவிஞர்களின் 110 கவிதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.


முன்னுரையில் சொல்லப்பட்டது போல் இக்கவிதைகள் பெண்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி
சமூகத்தை கலை இலக்கியங்களை ஆண்நோக்கிலிருந்து இடம்பெயர்த்து பெண்நோக்கில் வைத்து
புரிந்துகொள்வதற்கான முயற்சிகளும் அதன் வழியான பெண் மொழிகளின் உருவாக்கம் பற்றிய
பொருளாக முனைப்புக் கொண்டுள்ளது.

ஊடறு கவிதைத்தொகுதி 2007 இதுவரை தமிழில் வெளிவந்த பெண் கவிஞர்களின்
கவிதைத்தொகுதிகளிடையே தனக்கெனவோர் நீண்ட கால இடத்தைப் பிடித்துக்கொள்ளும். என்பதை
தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கும் போதே உணர முடியும். பிரபல்யமான தமிழ்க்
கவிதாயினிகள் பலரினதும், புதியவர்கள் சிலரினதும் கவிதைகளும் இதில் அடங்கியுள்ளன.


அவ்வகையில் அவுஸ்ரேலியா ஆழியாளின் வீடு கவிதையில்

என்னைச் சுழற்றும் கடிகாரமும்
என்னோடே வளரும் சுவர்களும்
சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதிலுமற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு�
-------
குளிரில் கொடுகி
வெயிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்றில் அசைந்து என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த
ஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
வானத்து வளைவுடன்

என பெண்ணின் வாழ் சூழலையும் வாழவிரும்பும் வாழ்க்கையையும் தொனித்து நிற்கிறது.
இக்கவிதையில் 'ஒரு வட்ட வீடொன்று வேண்டும்' எனும் அடிகளில் ஒரு வீடு எனும் கருத்தை
விளக்க கவனமின்மை காரணமாக
ஒரு, ஒன்று என இரு சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன. வட்ட வீடொன்று வேண்டும்.
எனக்கு என்பது போதுமானது. இவரின் கி.பி. 2003ல் தைகிரிஸ் எனும் கவிதையில் மனம்
தொலைந்து போகிறது.
மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் எனும் இலங்கை அனாரின் கவிதையில்

மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கம் பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகிறேன்
இப்போதுதான் முதல் தடவையாக காண்பது போல
இரத்தம; கருணையை; பரிதவிப்பினை
அவாவுகின்றனது�

எனத் தொடங்கும் கவிதை தொடர்ந்து செல்கையில் இலங்கையின் வெளிப்படை அரசியலை பேசிப்
போகிறது பெண்ணின் மென்மன அதிர்வை காட்சிப்படுத்தப் போகிற ஆவலைச் சுமந்த வண்ணம்
அடுத்த வரிக்குத் தாவுகையில் எதிர்பாராத அதிர்ச்சிகளை பல்வேறு தளங்களில்
விரிவதனூடாக தருகிறது.

பஞ்சுத் தலையணையில் படுத்துறங்க வேண்டிய
பதின்ம வயதின் ஆரம்பம்
கரகரத்த தரையில்
கையூன்றி சரிந்திருக்கிறேன்.
கனக்கின்ற குண்டுகளைச் சுமந்தபடி
எல்லைகளில் காவல் நிற்கிறேன்

மதனியின் சொல் தெரிவில் குழப்பங்களும் சுருக்கமிலா சொல்லாடல்களும்
மிகுந்திருக்கின்றன. கரகரத்த எனும் சொல் பொதுவாக குரலோடு தான் தொடர்புபடுத்தபடுவது
இங்கு தரையோடு இணைந்து வருகிறது. சொர சொரத்த தரையில் என கையாளப்பட்டிருந்தால்
பொருத்தமாயிருந்திருக்கும் இவரது இன்னொரு கவிதையில்

என் மகன்
நாட்டின் ஏதொவொரு மூலையில்
இன்னொரு கிடங்கிலிருந்து
எதிரிக்குக் குறிவைப்பான்
மீண்டும் என் பரம்பரை
அடிக்கடி இடம் பெயரும்
குழிகளில் ஒதுங்கும்
மண்ணுக்காய் சண்டையிடும்
முடிவில் மண்ணை உண்ணும்


எனும் வரிகள் ஒரு தாயின் போர் மறுப்பும், விரக்தியும் நிராகரிப்பும் மேலெழுகிறது.
இதற்குள் இருக்கும் அரசியல் வெளிப்படை முடிவில் மண்ணை உண்ணும் எனும் வரிகளில்
வெளிப்படும் நம்பிக்கையீனம்
'தம் மண்ணில் நிம்மதியாய் உண்ணும்' எனும் முடிவிற்கு
காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் முகத்தில் ஏமாற்றத்தை பீய்ச்சியடிக்கிறது.

இந்தியா புதிய மாதவியின் கவிதைகள் ஈர்ப்பு மிக்கவை புல்லின் நுனியில்

மலர்ந்த பனித்துளியில்
ஊஞ்சலாடும் காதலிருட்டு
எப்போதும்
காணாமல் போய்விடுகிறது.
யோனியும் முலைகளும்
தேடித்தேடி
பாறைகளின் இடுக்களில்
படரும் வெளிச்சங்களைக் கண்டு

காமச சுகத்தை தேடியலையும் பேர்களிடம் தொலைந்து போய்விடும் காதலின் மெல்லிய உணர்வுகளை
புல் நுனி பனித்துளியில் ஒளித்திருக்கும் மெல்லிய இருட்டுக்கு உவமித்திருக்கின்றமை
புதிய படிமங்களை தோற்றுவிக்கிறது.
கரப்பான்களின் தொல்லை
எவ்விடமும்
எக்காலமும்
எல்லேரிடமும்
------------
ஓரிடத்தில் குவித்திருந்த கரப்பான்கள்
ஊரெல்லாம் பரவி

வெவ்வேறு பெயர்களில்
ஊர்ந்து கொண்டிருப்பது

எனும் வரிகள் எல்லா களங்களையும் பேசுகிறது. இவரின்
'மின்னலைப் பரிசளிக்கும் மழை' எனும் கவிதையில் புதிர்மையை மொழிப்பெயர்த்தல்
'ராஜவனம்' போன்ற சொல்லாடல்கள்
கவிதையின் தொடர்வில் உற்சாகத்தைப் பொழிகின்றன. எளிமையான மொழியினுடாக ரசனா வெளியை
விஸ்தரிப்பது புதிய மாதவியின் பலம் எனலாம். இத்தொகுதியில் இவரது 4 கவிதைகள்
உள்ளடங்கியுள்ளன.

ஜேர்மன் மதனியின் கவிதைகள் நான்கும் இலங்கையின் போர்ச்சூழலில் சிறுவர் போராளிகளின்
உளவியல் ஊடாட்டங்களையும் தாய்மாரின் தவிப்புக்களையும் பாடுகின்றன.

லீனா மணிமேகலை (இந்தியா) எழுதிய தலைப்பிலிக் கவிதையொன்றில்

காயங்கள் நாறும்
முலைகள் தோறும்
சிதைவுற்றழிந்த
கருப்பைகள் தோறும்
எமது மானுடத்தின்
வெற்றிக்கும் தோல்விக்குமான
குருதி தோய்ந்த
கொடித்தடங்கள்

எனத் தொடரும் கவிதையின் முடிவில்

-------------------
ஆயதங்கள்
தீரும் - பின்
யோனிகளற்றுப் போகட்டும்
பிரபஞ்சம்
வேட்டையாடுவதற்கும்
எந்த உயிருமின்றி
இடுகாடாகட்டும்

எனும் சாபத்தோடு கூடிய முடிவில் பிரசார நெடிமேலுயர்ந்து வீசுகிறது லீனா மணிமேகலையின்
எழுத்துக்களில் வழமையாக எங்காயினும் காணக்கிடைக்கும் நடைமுறைக்கு மாறான விடயங்கள்
இக்கவிதையிலும் காணக்கிடக்கின்றது.

மெல்ல அசையும் திரையின் இடுக்கில்
வீழ்ந்து சிதறும் வெண்மணி வெளிச்சம்
தோற்றம்,தெளிவு, சுவாசக் கறையென
வெளிச்சக் கீற்று விரசம் பயில
தியானம் தொடரும்
உலகை நோக்கி

என முடிவுறும் அமெரிக்கா மோனிகாவின் மூடிய அறை எனும் கவிதை ஒரு பெண்ணின் தனிமையின்
தாய்க்குரலை பேசுகிறது. அக்கவிதை முதல்வரி தொடங்கி இறுதிவரை காட்சிப்படுத்தலில்
தொடர் இணைப்பை சிறப்பாக பேணி வருகிறது. எனினும் இறுதி வரியான
'உலகை நோக்கி' எனும்
வரி கவிதையின் பாடுபரப்புக்கு வரம்பிடுகிறது. கவிதையின் முடிப்பை சப்பென்றாக்கி
விடுகிறது. ஓசை நயத்துக்கு போதிய முக்கியத்துவமளித்திருக்கிறார். மோனிகா

முலைகளும் இரவுகளும் எனும் இன்னொரு கவிதையில்

தேடித் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
நம் காதல்களை, கடவுளர்களை, கேள்விகளை
என்பாராமுற்ற முலைகளுக்கும் உனது
எல்லையற்ற சிறகுகளுக்கும் ஊடே

என ஆண் பெண் உறவிகளுக்கிடையிலான உணர்வுத் தேடலின் அசம நிலையை தெளிவு படுத்துகிறார்.
இத்தொகுதியில் மோனிகாவின்
'உடலைத் தவிர்த்து' எனும் தலைப்பில்

உடலைத் தவிர்த்தென்ன உண்மை
வேண்டும் உங்களுக்கு
அண்ணாசாலையின் ஆடைவிளம்பர
அழகியின் உடலும்
தேவியில் திரையில் தீண்டத் துடிக்கும்
திரைப்பட உடலும்
தின்று தொலைக்கும் வறுகடலை
காகிதமும, அந்த கவர்ச்சிப் படமும்
என்னுடலல்ல...!

ஒப்பனைக் கவர்ச்சிக்கும் நிஜவாழ்வில் சாமான்ய பெண்ணுக்குமிருக்கும் முக்கியத்துவ
இடைவெளிக்கிடையில் கம்பீரமாக எழுந்து நின்று பெண்மையின் அடையாளத்தைப்
பிரகடனப்படுத்துகிறார். மோனிகா கவிதைகளின் பாடுபொருளும் உத்திகளும்
மகிழ்வுட்டுகின்றன.

நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய
'புரியும் வேதனை' எனும் கவிதை தலைப்பிலேயே கவிதையைச்
சொல்லிவிடுகிறது சுவிஸ் நளாயினியின் ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் இன்னும்
பயணிக்க வேண்டியிருக்கிறது. ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் நோக்கி இன்னும்
பயணிக்க வேண்டியிருக்கிறது. ஹைக்கூ என்றாலே விடுகதைப்பாணி என்று பொதுவான
வாய்ப்பாட்டுக்குள் இவரது கவிதைகள் உள்ளன.

இலங்கை பஹிமா 4 கவிதைகள் எழுதியுள்ளார். இவற்றில் எனது சூரியனும் உனது சந்திரனும்
எனும் கவிதை இவ்வாறு முடிகிறது.
வாழ்வின் விதிமுறைகள்
எனதுலகையும் உனதுலகையும்
வேறுபிரித்த வேளையில்
விடைபெற்றோம்
ஒன்றித்துப் பறந்த வானத்தையிழந்தோம்
இறுதியாக அன்று தான் அழகாய் சிரித்தோம்
எனது சூரியனும் தனித்துப் போயிற்று
உனது சந்திரனும் தனித்து போயிற்று

இத் தொகுதியில் இருக்கும் சிறந்த காதல் கவிதையாக இதனை முன்மொழிய முடியும்.
தொடர்ச்சியாக ஏறத்தாழ ஒரே பாடுபொருளை கொண்டிருந்த கவிதைகளின் இடையில் இக்கவிதை
வாசகருக்கு வேறுவகை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது பஹிமாவின் அழிவின் பின்னர் தடுமாறும்
தனிப்பாதம் போன்றவை வேறு வேறு விடயங்களை பேசுவது வாசகருக்கு உற்சாகமளிக்கின்றது

இலங்கை விஜயலக்சுமியின் கவிதை குடும்ப பெண்ணின் அடுப்படி வாழ்வு பற்றி பேசுகிறது.


இலங்கை சுல்பிகாவின் கற்பும் கதவும் எனும் கவிதையில்

கதவுக்கும் கற்புக்கும் உறவுண்டு
கருகிப் போன புல் வெளிக்கும்
இறவாதிருக்கும் உன் தாய்க்கும்
இருப்பது போல

எனும் உவமை நமக்குள் மீண்டும் மீண்டும் அதிர்வுகளோடு பரவுகிறது. இவரின் உயில்களல்ல
உயிர்கள் எனும் கவிதை உரத்து கூவுகிறது

இந்தியா திலகபாமாவின் உதிரும் நதியில் சிறந்த முறையில் குறியீடுகள்
கையாளப்பட்டுள்ளன எனலாம்.

தாய்ச் செடி வாசம் துறந்து
கடத்தி வரப்பெற்று
கரையோரம் வேர்விட்ட விருட்சம் நான்

எனத் தொடங்கும் கவிதையில் துறந்து எனும் சொல் கவிதையின் வீச்சினை சிதறடித்து அல்லது
சொல்ல வந்த விடயத்தை கூர்மையாக வெளிப்படுத்த தடையாக அமைகிறது. துறந்து என்பதை விட
துண்டிக்கப்பட்ட போன்ற சொல் கவிதையின் கணத்தை அதிகரிக்கச் செய்திருக்கும்.

கந்தல்களைக் கட்டிக்கொண்டு
அருவருப்பில் அல்லாடும்
என் உணர்வுகள்
சாக்கடைக்குள் புரளும்
பூச்சிகளின் தாபம் உனக்கும் புரியாதவை

இங்கு பூச்சிகிளின் தாபங்கள் உனக்கும் புரியாதவை என வரவேண்டிய இடம்
'தாபம' எனும்
ஒருமைச் சொல் வசனப் பிழையை தோற்றுவிக்கிறது. எனினும் இவ்விடத்தில் கையாளப்பட்ட
உனக்கும் என்ற பதம் மறைவாக இன்னும் பலருக்கு என்பதைச் சொல்லிவிடுகிறது.

லண்டன் சாரங்காவின் ஒரு கவிதாமரத்தின் இறப்பு எனும் கவிதையில்

ஒரு அழகிய நதி
குதியல் தெலைந்து
குளமாகிய
அதே கணத்தில் இருந்துதான்
என் கழுத்தில் ஆடுகிறது
உன்னால் இடப்பட்ட மூன்று முடிச்சி

பெண் ஒருத்தியின் கனவுகள் களவாடப்பட்ட காட்சியை அழகாய் கண்முன்கொண்டு வருகிறது
இவரின் 'எல்லாம் செய்கின்றாய்' எனும் கவிதை பக் (64) இறுதி வரியில் எதிர்பாரா
அதிர்ச்சியை தந்து அழுகிறது.

இலங்கை இஸ்மாலிகாவின் கொள்கைக் குடைபிடித்து நடப்பாள் பக் 65 மிக எளிமையாக ஓர்
சிறுவர் பாடலாக, நிறையவற்றை பேசி நடக்கிறது. பாடசாலைகளில் படிப்பிக்க வேண்டிய
பாடல்களில் ஒன்றாக இதனை முன்மொழியலாம். மை தொகுதியில் மலையக மண்ணை அடையாளப்படுத்தி
எழுதப்பட்ட ஒரே ஒரு கவிதையாக இதனை கூறமுடியும்.

எட்டக் தெரிகின்ற ஏற்றமிகு நம்பிக்கை
ஏந்திடவே மொழிகள் பல உரைப்பாள்
சுட்ட பொன்னாக விளங்கி மலைநாட்டில்
சூழ்ந்த கருமைதனைத் துடைப்பாள்

எனும் வரிகள் மலையக சூழலில் வளரும் குழந்தைகட்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்பைச்
சொல்லி நிற்கிறது. சிறந்த தாளக்கட்டோடு எழுதப்பட்ட கவிதையாக இதனைச் சொல்லலாம்.

அவுஸ்ரேலிய பழங்குடியினரின் போராட்டம் பற்றி அவுஸ்ரேலிய பாமதியினால் எழுதப்பட்ட
'தொலைக்கப்பட்ட
தரவுகள'; குறிப்பிடப்படவேண்டிய கவிதை. அவுஸ்ரேலிய பழங்குடியினர் வந்தேறு குடிகளால்
விரட்டியடிக்கப்பட்டு தமது தாய் நிலத்தில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட அவலத்தை
வர்க்கப்பார்வையுடன் படைத்துள்ளார். பாமதியின் இக்கவிதை எல்லைகள் கடந்து
வியாபிக்கிறது. இம்மக்கள் மீதான பாமதியின் கவிதா நெஞ்சம் இறுதிவரிகளில் இவ்வாறு
சினமுற்று சிலிர்க்கிறது. (பக் 69)

அவர்களின் அடையாளத்தை

காவி நின்றவை
எல்லைகளுக்கு அப்பால்
அழுது கொண்டிருந்த மலைப்பாறைகள் மட்டும் தான்
அதில்
வரிபோட்ட மீன் குஞ்சுகளும்
வயிற்றில் குட்டிகளைப் சுமந்துகொண்டு
நிற்கும் கங்காருவும்
இலைகளின் ஆயள் ரேகையை
இயற்கையை நேசித்து பாதுகாத்த
அழகான மனிதர்களையா சீ...!

இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் முகம் திருப்பி பார்க்க வேண்டிய
இன்னொரு பக்கதத்திற்கு தன் எழுதுகோலை திருப்பியிருக்கிறார். முழுமனித குல விடுதலையை
நேசிக்கும் படைப்பாளிகளின் நோக்குதிசை ஒன்றிரண்டு மட்டுமல்ல என்பதை இக்கவிதை
உணர்த்துகிறது. பாமதி போன்றவர்களின் இத்தகைய பார்வை இன்னும் விரிவடைய நிறைய
இடமுள்ளது. கவிதையின் சொல் ஒழுங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை வாசுகியின்
'கருக்கலைப்பு' இவ்வாறு முடிகிறது.(பக் 73

தாயின் கரு உதிர்த்த
ஒரு பிள்ளையைத் தானும் கொல்லும் அதிகாரத்தை
இனத்தின் பெயராலும்
மதத்தின் பெயராலும்
உலக தலையென்ற பெயராலும்
யாரும் எடுப்பாரெனில்
கருவில் கரைக என் பிள்ளாய்�!

இக்கவிதையில் வெளிப்படும் போர் மறுப்புக்குரலும் போர்ச்சூழலின் நிர்ப்பந்திப்பும்
தாய்மையின் கையறு நிலையும் வெளிப்படை.

இலங்கை அச்சு ஊடகங்களுக்கு தொடர்ந்து பெண்ணியபடைப்புக்களை வழங்கிவரும் லண்டன்
நவஜோதியின் 'பிரசவம்'
'பறவைப்பெண்' கவிதைகள் நன்றாயிருக்கின்றன. இந்தியா
குட்டிரேவதியின் மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
'உனக்கான கடிதங்கள்'
'பிரசவம்' 'எனது
வீடு' என்பவையே அவை. குட்டிரேவதியின் வெகுஜன கவிதா மொழியை துல்லியமாக இக்கவிதைகளில்
கையாண்டுள்ளார் இவரது மொழியில் கவிதையின் வீச்சுக்கள் உச்சத்தை தொடுகின்றன.

பிரசவம் கவிதை இவ்வாறு படர்கிறது

நீர்ப்பாத்தியில் நிழலேதும் வேண்டாது
தாவர இச்சையின் மிடுக்குடன் எழும்
திரண்ட கவர்ச்சியின் வாழை
குலைத்தள்ளும் நாளில்
உமது அரிவாள் வெட்டி சாய்த்தது.
தோலுரித்தது
உடல் கழித்தது
காலைச் சுற்றிலும்
கணுக்கால் உயரத்தில்
மறுமுறை முளைத்தெழும்
என் கம்பீரத்தோகைகள்

வாழையை பெண்ணாக பார்த்தால் எல்லாமே புரிந்துவிடும்

பிரான்ஸ் தர்மினியின் 4 கவிதைகள் இடம் பெற்றுள்ளன அவற்றுள்
'யுத்தமும் தர்மமும்' கவிதை இவ்வாறு பேசுகிறது.

எங்கள் பெண்களும் குழந்தைகளும்
அப்பாவி இளைஞரும்
துப்பாக்கிகள் மீதும்
அதிகாரங்கள் மீதும்
வெறிகொண்டவர்களால் மட்டுமே
சூழப்பட்டுள்ளனர்
கிழக்கிலும் மேற்கிலும்
வடக்கிலும் தெற்கிலும்
தீவின் திசையெங்கிலும்
தீவின் திசையெங்கும்
வெறிகொண்டவர் அலைகின்றனர்.

என முடிவுறும் இக்கவிதை ஈழச்சூழலை படம் பிடிக்கிறது. இவரின்
'விலங்குகள்' 'ஆயதம்
வைத்திருப்பவர் நாசமாய் போகட்டும்' எனும் கவிதைகள் குறிப்பிடக் கூடியன.

இலங்கை மலராவின் மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன காதலின் இனிய அனுபவங்களை பெண்ணின்
பார்வையில் பதிவு செய்துள்ளார்.

இலங்கை பெண்ணியாவின் கவிதைகள் 4 இடம்பெற்றுள்ளன. காதலுணர்வை பெரிதும் மையப்படுத்தி
எழுதப்பட்ட இவரது கவிதைகளில் அவசரக்குறிப்பு குறிப்பிடத்தக்கது.

உண்மைகளை எல்லாம்
அழுக்குத் துணிகளுக்கடியில்
ஒளித்துவைத்துள்ளேன்
நான்
இறக்க வைக்கப்பட்டால்
என்
அந்தரங்க சிநேகிதியிடம்
இடத்தை
அறிந்துகொள்ளுங்கள் (பக் 90)

இக்கவிதையில் இடம் பெறும் நான் இறக்க வைக்கப்பட்டால் எனும் சொல்லாடல் ஈர்ப்பு
மிக்கது நிறைய பேசுகிறது. எளிமையான மொழியில் அதிகம் பேசுகிறார். பெண்ணியா இவரது 4
கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன.

கற்பகம் யசோதரவின் 4 கவிதைகள் தன் இயலுமையின் எல்லைகளைத் தேடி தீவிரமாக விசாரணை
நடத்துகின்றன கவிதைகளின் உருவ விரிவுக்கேற்ப பொருள் விரிவையும் வியாபித்துச்
செல்கின்றன. இவரின்
'கவிஞர்களின் குசு'
'இருகால அழைப்பு'
'பிள்ளைகள் தேவை' என்பவற்றோடு தலைப்பிலிக் கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது தலைப்பிலிக் கவிதையில்

என்றைக்கோ
எனக்கான முத்தங்களைக்
காற்று விழுங்கிவிட்டது
என்னை என்னால்
கைவிட முடியாது முடியவில்லை

என தனக்குள் தானே மீண்டெழும் நம்பிக்கை வாசகருக்கு நம்பிக்கையூட்டுகின்றன. எனினும்
இறுதி வரியில் என்னை- என்னால்- கைவிடமுடியாது. முடியவில்லை கைவிடமுடியாது என
வந்திருந்தால் இறுதிவரி தனது இலக்கை இன்னும் உறுதியுடன் எட்டியிருக்கலாம்.

இந்தியா உதயச்செல்வியின்
'முக்கிய அறிவிப்பு' , சுவிஸ் தில்லையின்
'வரிமங்குகிற
நினைவு', 'வாழ்ந்து முடிந்த கதை', இந்தியா வைகச்செல்வியின்
'போரில் சிந்தும்
மகிழம்பூக்கள்' என்பனவும் குறிப்பிடப்படவேண்டியவை. டென் மார்க் சந்தியாவின் இன்னும்
பிறக்காத எனது குழந்தைக்கு கவிதை உரையாடல் கலந்து சுவையூட்டுகிறது. இன்னும்
பிறக்காத குழந்தையுடனான தாயின் அனுபவம் குழைத்த உரையாடலாக தொடர்கிறது எனினும்
கவிதையின் இறுதிவரியே தலைப்பாகவும்ம் அமைந்திருப்பதால் இறுதி வரியில் கிடைக்க
வேண்டிய திகிலும் அனுபவமும் வரண்டு போய்விடுகின்றன.
இந்தியா அரங்கமல்லிகாவின்
'உழைப்பு' தலித்துக்களின் மொழி குறித்து எழுதப்பட்டுள்ளது
இக்கவிதை முழுமையான தலித் மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என் எண்ணத்தோன்றுகிறது

இந்தியா சுகிர்தராணியின் 4 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
'இயற்கையின் பேரூற்று'
'எதுவும்
மிச்சமில்லை' 'உப்பின் சுவையேறிய காதல்'
'சாம்பல் பூக்காத முத்தங்கள்' என்பன மொழியை
கனமாக கையாள்கின்றன

நானே நிலமாகி
நானே நெருப்பாகி
நானே வானாகி
நானே காற்றாகி
நானே நீராகி
அடைக்க அடைக்க பீறிடுகின்ற
பிரபஞ்சத்தின் ஊற்றுக்கள் நான்


எனும் வரிகளில் பெண்மையைக் காணலாம் இவரின் எதுவும் மிச்சமில்லை. கவிதை
ஈழப்போராட்டத்தைப் பாடுகிறது

பள்ளியிலிருந்து திரும்பி வருகையில்
வல்லுறவால் உயிரிழந்த மகளுக்கு
வாங்கி வைத்த துணி
கள்ளத் தோணியில் அனுப்பி வைத்த
அகதி மகனின் மரண ஓலம்
சேலைத்தலைப்பில் முடிந்துவைத்த
குருதி நனைத்த பிறந்த மகன்
-----------------
பஞ்சடைந்த என் கண்களுக்கு
படமாய் விரிகின்ற தனிஈழம்

என முடியும் கவிதை யுத்தச் சூழலையும் தனிமனித வாழ்வுச் சூழலையும்
காட்சிப்படுத்துகின்ற அதே வேளை விடுதலைப்போராட்டக் கனவையும் (எல்லா இழப்புகளின்
பின்னரும்) கண்களில் ஏந்திய தாயின் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. எனினம் இறுதி
வரியில் வருவது தனி ஈழம் தமிழ் ஈழமா என்பதில் கவிதையின் பாடுபொருள் வேறுபடுகிறது.

இலங்கையை சேர்ந்த மரியா என்டனீட்டா
'புதியபூமியோடு முகாரி ராகங்களாய் பெண்கள'; சமீலா
'சிலுவை', 'அகதி' ஆகிய கவிதைகளை படைத்துள்ளனர் எழுத்துக்களை உணர்வு மயப்படுத்த
வேண்டிய தேவை இவர்களிடம் உள்ளது.

இலங்கை சலனியின் நாணல் சிறகுகளில் என் நயனங்கள் கருமேகங்களும் காக்கணாங் குரவிகளும்
வெள்ளைநடனம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விபச்சரித்து தொடக்கிறுத்து
முழுக்கிறுக்கிறது போன்ற சொல்லாடல்கள் கவிதையில் துருத்தி நிற்கின்றன. ஏனைய
கவிதைகளில் மொழி வளமாக கையாளப்பட்டுள்ளது.

இலங்கை மாதுமையின் அப்பா, திரவப்பாடல், என்புத்தகம் ஆடை என நான்கு கவிதைகள்
இடம்பெற்றுள்ளன. மாதுமையின் கவிதைகளில் புதியவற்றை தரிசிக்கவும் மனதை
சிறைப்படுத்தவும் விவரிக்க்கவும் கவிதைகள் முயல்கின்றன. மாதுமையின் கவிதைகளில்
இழையோடும் உணர்வுகள் மனவெளியெங்கும் ஒருவித சிலிர்ப்பைத் தூவுகிறது.

இவரின் என் 'புத்தகம்' கவிதையில் வரும்

சிலர் அழுதார்கள்
சிலர் சிரித்தார்கள்
சிலர் ஏதேதோ பேசினார்கள்
எல்லாவற்றையும் கேட்டும்
திறந்துதானிருந்தது புத்தகம் (பக் 125)

என் புத்தகம் கவிதை ஒரு கவிதைப் புத்தகத்தை போன்றது நீங்களும் வாசிக்க வேண்டும்

இவ்வாறான நல்ல கவிதைகள் நிறையவற்றை சுமந்து வந்திருக்கிறது மை.

மை கவிதைத் தொகுதியையும் ஊடறு இணைய சஞ்சிகையையும்
www.oodaru.com எனும் இணையத்தள
முகவரியில் வாசிக்கமுடியும்.

மை கவிதைத்தொகுதி பெண்ணியச் சிந்தனைகளை பெண் எழுத்துக்களோடு பதிவு செய்ய
முனைந்துள்ளது இத்தொகுதியில் உள்ளடங்கிய கவிதைகள் வரையறைகளை கடக்க துடிக்கும்
பிரவாகமாக மிளிர்கின்றன. எனினும் பாடுபொருள்கள் தொகையளவில் வரையறைகளை தாண்டவில்லை.
எமது சமுதாய அலகுகளின் அனைத்து மூலைகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்
இவ்வொடுக்குமறை ஒரு நூற்றாண்டுக்குள் திடீரென எழுந்ததல்ல பல்லாயிரம் வருடங்களுக்கு
முன்னிருந்து ஆண்மேலாதிக்கச் சிந்தனைகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவை. இவை
கலாச்சாரத்தின் அடித்தளத்தில் உறுதியாக ஊன்றப்பட்டவை. இவ்வாறு முனைப்பிக்கப்பட்ட
இச்சிந்தனைகளை தகர்க்க வேண்டிய அவசியம் அவசரமெனினும் மையத்தகர்ப்பை முதன்மையாக
கொண்டு மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் சாத்தியப்பாடு பற்றியும் எதிர்விளைவுகள்
பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும். எனவே பெண்ணானவள் தன்னளவிலும் குடும்ப அலகிலும்
சமூக அலகிலும் தனக்கான விடுதலையை பரிமானிக்க வேண்டிய நிலையில் உள்ளாள். இந்நிலை
வளர்ந்து சமூகவிடுதலைக்கான முன் நிபந்தனை பெண்விடுதலையே எனும் சிந்தனைப்புரிதல்
ஏற்கப்படும் நிலையிலேயே நாம்
'' என்பதன் பொருளை உணரமுடியும்.

'மை' தொகுதியின் கவிதைகள் அவ்வாறான வளர்நிலையை உதிர்க்காவிட்டாலும் கூட முழுமொத்த
பெண் சமூக விடுதலைக்கோஷங்களை கையிலெடுத்த பெரும் பரப்பில் ஆங்காங்கு நின்று தன்
இயலுமையின் எல்லைவரை முன்வைக்கின்றன என்பதை ஏற்கவேண்டும். பெரும்பாலான கவிதைகள்
ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான மாற்றுக்கலாச்சாரத்தை கட்டமைக்கும் பணிக்கு உழைக்க
வந்திருக்கின்றன. அனுபவமற்ற கவிதாயினிகள் சிலரின் எழுத்துக்கள் ஆணாதிக்கத்திற்கும்
ஆண்களுக்குமிடையிலான வேறுபாட்டை உணராமல் கூவிக் களைக்கின்றன தமிழ்ப்பெண்
எழுத்துச்சூழலில் அறியப்படும் கவிஞைகள் கூட
'மை'யில் பாலியல் விடுதலையை
மையப்படுத்தியே தம் படைப்புக்களை தந்துள்ளமையானது நம் சிந்தனைகள் விரிவடைய வேண்டிய
தூரத்தைக் காட்டி நிற்கிறது. ஆணாதிக்க சிந்தனைக் கூறுகளையும் அதன் உட்பிரிவுகளையும்
தோலுரித்துக் காட்டவும் பெண்ணின் ஆளுமை தொடர்பாகவும் மேலும் பல கோணங்களில்
முனைந்திருக்கலாம்.

பெண் பொருளாதார ரீதியிலும் உடல்,உள உழைப்பின் அடிப்படையிலும் சாதிய அடிப்படையிலும்
சுரண்டப்புடுவதும் நிறையிடப்படுவதும் கண்முன்னே காணக் கிடைப்பன இவற்றோடு
கலாச்சாரத்தின் பேரால் ஒடுக்கப்படும் பெண்குரலும் சிந்தனையும் மொழியூடு
பீறிட்டெழவும் நுண்ணதிர்வுகளை பதிவு செய்யவும் முடியும்.

முன்னெப்போதுமில்லாத வகையில் உலகளாவிய ரீதியில் மானுடர் தம் விடுதலை நோக்கிய
சிந்தனைகளை விரிவு படுத்தியுள்ளனர். அவ்வகையில் பெண்களின் விடுதலை ஆழமாக கண்கொள்ள
வேண்டியது மேலைத்தேய அதிதீவிர பெண்ணியச்சிந்தனைகள் பாலியல் பிறழ்வுகளை
நியாயப்படுத்தி நிற்கின்றன.
'மை' கவிதைத்தொகுதி கவிதைகள் அவற்றை வேண்டி
நிற்காவிட்டாலும் பாலியல் விடுதலையை வேண்டும் எழுத்துக்கள் தன்னை நிதானமாய்
உணர்வதும் அவசியமாகும்.

பெண்ணானவள் மானுட வாழ்வை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாவாள். பெண்
விடுதலையே மானுட விடுதலையின் பெரும் பகுதியாகும். பெண்களுக்கான விடுதலையே
அப்பெண்வாழும் சமூகத்தின் விடுதலையை நிர்ணயிக்கிறது. எனவே பெண்விடுதலையின் சமூக
விடுதலை நோக்கம் இருத்தல் அவசியமானதாகும். உலகில் இடம்பெற்ற வரலாற்றுத்
திசைமாற்றங்களுக்கு பெண்களின் முக்கியத்துவம் கணிசமானவை ஒக்டோபர் புரட்சி,
சீனப்புரட்சி, வியட்நாம், கியூபா, கொரிய புரட்சிகளுக்கும், தேசியவிடுதலை
இயக்கங்களுக்கும் பெண்களின் பங்களிப்புக்கள் அதிகமானவை. இலங்கையின் தமிழீழ
போராட்டவரலாற்றிலும் இடதுசாரி இயக்கவளர்ச்சியிலும் வெகுஜன போராட்ட
முன்னெடுப்புக்களிலும் பெண்களின் அர்ப்பணிப்புக்கள் மதிக்கத்தக்கன.
இத்தகைய வரலாற்று உண்மைகள் தற்கால பெண்ணிய சிந்தனையாளர்களால் பதிவுசெய்யப்படவேண்டும்
எழுத்துக்களில் இலக்கியங்களில் இவை புதுப்பிக்கப்பட்டு கூட்டு சமூக
மீளுருவாக்கத்திற்கு பெண்கள் தம் விடுதலைச் சிந்தனைகளோடு இயங்கவேண்டும். குடும்ப
சமூக உறவுகளில் பெண்ணின் முக்கியத்துவம் தீவிரமாக உணர்த்தப்படுவதும் பெண் சிந்தனை
விரிவு பெறுவதற்கும் அதனூடு சமூக விடுதலை முன்னெடுக்கப்படுவதற்கும் பெண்
எழுத்துக்களும் பெண்விடுதலையை நேசிக்கும் எழுத்தாளர்களும் உழைக்க வேண்டும்.
அவ்வுழைப்பு சாத்தியமாகும் போதே நாம் பெண்விடுதலை எனும் சிந்தனையால் முழுமையாய்
மகிழ்வுற முடியும். இவ்வாறான மகிழ்ச்சிக்கு தன்னாளான பணியை
'மை' ஆற்றியுள்ளது.
ஆங்காங்கு மிகக்குறைவாய் எழுத்துப் பிழைகள் காணப்படினும் அவை கவிதைகளில்
பொருட்பிழைகளை ஏற்படுத்தவில்லை. என்பது கவலைக்குரியதல்ல

உலகளாவிய ரீதியில் எழுதிக்கொண்டிருக்கும் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த கவிதாயினிகளின்
கவிதைகளை ஒன்றுசேர்த்த முக்கியநிகழ்வாக இதனைக் கூறலாம்.
வெவ்வேறு நாடுகளில் பல்வேறு
காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்களின் ஒருமித்த சிந்தனைகளை ஒன்றாய்
வாசிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளமை
'மை' யின் அடர்த்தியை அதிகமாய் உணரத் தூண்டுகிறது.
தரமான கடதாசியும் சிறந்த ஓவிய முகப்பும் நேர்த்தியான வடிவமைப்பும்,
அச்சுக்கோர்ப்பும் மகிழ்சியூட்டுகின்றன. நூலின் உள்ளே ஒரு சில ஓவியங்களையாவது
இணைத்திருக்கலாம். கவிதைகளை முழுதாய் வாசித்து முடித்த வாசகர் தனது பொழுதை
பயனுடையதாய் கழித்தார் என்பதை நிச்சயம் உணர்வார்

தமிழ்க்கவிதையுலகில் பெண் எழுத்துக்கான வரிசையில்
'மை'க்கு நீண்ட கால இடமுண்டு.
இத்தொகுதியை உருவாக்க முனைந்த ஊடறு இணையசஞ்சிகை ஆசிரியர் குழுவை நாம் பாராட்டுவதில்
மகிழ்ச்சியடையலாம்.

வே. தினகரன்
பத்தனையூர்
இலங்கை

இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் (16,23,30செப்டம்பர் ஞாயிறு தினகரன்)
பத்திரிகையில் வெளியான விமர்சனம் நன்றியுடன் பிரசுரமாகின்றது.